தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது. இந்தநிலையில், ஜடேஜா மற்றும் ராயுடுவுக்கு தோனி அளித்த கௌரவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
2023 ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் சென்னை – குஜராத் அணிகள் மோதின. ஞாயிற்றுக்கிழமை (மே 28) திட்டமிடப்பட்ட இறுதிப்போட்டி மழை காரணமாக திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. திங்கட்கிழமை நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பவுலிங்கை தேர்வு செய்தார். சாய் சரணின் அதிரடியான 96 மற்றும் சாஹாவின் அரைசதத்தால் குஜராத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் குவித்தது.
இதையும் படியுங்கள்: ‘அந்த கடைசி 2 பந்துகளை சந்தித்தபோது நான் மனதில் நினைத்தது இது மட்டும்தான்’: ஜடேஜா
மழை காரணமாக சென்னை அணிக்கு 15 ஓவர்களில் 171 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. சென்னை அணி பேட்டர்களின் சிறப்பான ஆட்டத்தால், கடைசி பந்தில் சி.எஸ்.கே த்ரில் வெற்றி பெற்றது. அதில் கடைசி 2 பந்தில் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், குஜராத் அணியின் பலம் வாய்ந்த பவுலர் மோகித் சர்மா பந்தில் சிக்சர் மற்றும் பவுண்டரி விளாசி அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா.
ஜடேஜா வெற்றி இலக்கை அடித்ததும், சென்னை அணியின் கூடாரம் வெற்றி உற்சாகத்தில் துள்ளி குதித்தது. வீரர்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டியணைத்து தங்கள் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. வெற்றி பெற்றதும் துள்ளிக் குதித்து சி.எஸ்.கே கூடாரம் நோக்கி ஓடிவந்த ஜடேஜா, வீரர்களை கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த வரலாற்று வெற்றியால் எமோஷ்னல் ஆக காணப்பட்ட தோனி, ஓடி வந்த ஜடேஜாவை தூக்கி பிடித்து வெற்றியைக் கொண்டாடினார்.
இறுதிப்போட்டியில் வீரர்களின் குடும்பத்தினரும் மைதானத்திற்கு வந்திருந்தனர், வீரர்கள் குடும்பத்தினருடனும் தங்கள் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். குறிப்பாக தோனி, தனது மனைவி சாக்ஷி மற்றும் மகள் ஷீவா உடன் வெற்றியைக் கொண்டாடினார். மேலும், சி.எஸ்.கே வீரர்களுடன் ஷீவா வெற்றிக்கோப்பையை ஏந்தி நின்றார்.
இந்த வெற்றியுடன் சி.எஸ்.கே ரசிகர்களுக்கு தோனி மற்றுமொரு மகிழ்ச்சியை தந்துள்ளார். அதாவது இந்த சீசனுடன் ஓய்வு பெற உள்ளார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அடுத்த சீசனில் ஆட வாய்ப்புள்ளதாக தோனி கூறியுள்ளார். இதனால் சென்னை ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் உள்ளனர்.
வெற்றிக்கோப்பையை வாங்கியவுடன் தோனி வீரர்களிடம் கொடுப்பது வழக்கம் என்றாலும், இந்த முறை கோப்பையை பெறும்போது, இந்த சீசனுடன் ஓய்வு பெறும் அம்பாத்தி ராயுடு மற்றும் இறுதிப்போட்டியில் வெற்றிக்கு காரணமாக இருந்த ஜடேஜா ஆகிய இருவரையும் மேடைக்கு அழைத்து அவர்கள் கையில் கோப்பையை வாங்கச் செய்தார். ராயுடு மற்றும் ஜடேஜாவுக்கு தோனி அளித்த இந்த கௌரவம் தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.