IPL 2023, Chennai Super Kings Ajinkya Rahane Tamil News: 10 அணிகள் பங்கேற்று விளையாடி வரும் 16-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் இந்திய மண்ணில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு (சனிக்கிழமை) 7.30 மணிக்கு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் அரங்கேறிய 12-வது லீக்கில் முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
மிகவும் பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 157 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக இஷான் கிஷன் 32 ரன்கள் எடுத்தார். இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு மும்பை அணி 157 ரன்கள் எடுத்தது. சென்னை அணி தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், துஷார் தேஷ்பாண்டே மற்றும் மிட்செல் சான்ட்னர் தலா 2 விக்கெட்டுகளையும், சிசண்டா மாகலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
தொடர்ந்து 158 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய சென்னை அணியில் ரஹானே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அரைசதம் அடித்த அவர் 61 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவருக்குப் பின் வந்த ஷிவம் துபே (28 ரன்கள்) மற்றும் அம்பதி ராயுடு (20 ரன்கள்) அவர்களுடன் களத்தில் இருந்த ருதுராஜ் கெய்க்வாட் (40 ரன்கள்) ஆணியின் வெற்றியை உறுதி செய்தனர். இறுதியில் மும்பை அணியை சென்னை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது.
ரணகளப் படுத்திய ரஹானே
இந்த ஆட்டத்தில் சென்னை அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய கான்வே பூஜ்ஜிய ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். எனினும், அடுத்து வந்த ரஹானே தனது அதிரடி ஆட்டத்தால் அனைவரது புருவத்தையும் உயர செய்தார். குறிப்பாக, மும்பை வீரர் அர்ஷத் கான் வீசிய 4வது ஓவரில், நாலாப்புறமும் பவுண்டரிகளை விளாசி மிரட்டி எடுத்தார். இந்திய அணியில் இருந்து விலக்கி வைக்கப்பட்டு இருந்தாலும், தனது தரமான ஆட்டத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்தார் ரஹானே.
தொடர்ந்து மும்பையின் பந்துவீச்சை துவைத்து எடுத்த அவர் 27 பந்துகளில் 7 பவுண்டரிகள் 3 சிக்ஸர்களை பறக்கவிட்டு 61 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இருப்பினும், அவரது எதிர்பாராத ஆட்டம் ரசிகர்களுக்கு உற்சாகத்தை தந்ததுடன் சென்னை அணிக்கு மகிழ்சியையும், கொண்டாடத்தையும் கொடுத்துள்ளது.

இந்தப்போட்டிக்குப் பிறகு பேசிய ரஹானே, “இன்றைய ஆட்டத்தை மிகவும் ரசித்து விளையாடினேன். டாஸ் போடுவதற்கு முன்பே மொயீனுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்து தெரிய வந்தது. நான் விளையாடுவதாக ஃப்ளெமிங் என்னிடம் கூறினார். உள்நாட்டு சீசனில் நன்றாக விளையாடி இருந்தேன். நான் என் ஃபார்மை தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்கிறேன். டைமிங்கில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறேன்.
நீங்கள் ஒரு போட்டியில் விளையாடுகிறீர்கள் என்பதை நீங்கள் உணர வேண்டும். ஐபிஎல் ஒரு நீண்ட போட்டியாகும், உங்களுக்கு எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்று தெரியாது. நான் எப்போதும் வான்கடே மைதானத்தில் விளையாடுவதை ரசிக்கிறேன். நான் இங்கு ஒரு டெஸ்டில் கூட விளையாடியதில்லை. நான் இங்கு டெஸ்ட் விளையாட விரும்புகிறேன். மஹி பாய் மற்றும் ஃப்ளெமிங்கைப் பற்றிய முக்கியமான விஷயம், அவர்கள் அனைவருக்கும் சுதந்திரம் தருகிறார்கள். மஹி பாய் என்னை நன்றாக தயார் செய்ய சொன்னார்.” என்று கூறினார்.