சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 16-வது சீசன் ஐ.பி.எல் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது. பரபரப்பின் உச்சத்தில் கடைசி 2 பந்துகளில் சென்னை அணி த்ரில் வெற்றி பெற்று கொண்டாடி வருகிறது. நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் வெற்றியை கொண்டாடி மகிழ்கின்றனர். குறிப்பாக ஜடேஜா பாராட்டு மழையில் நனைந்துள்ளார்.
ஐ.பி.எல் 2023 16-வது சீசன் இறுதிப்போட்டி நேற்று (மே 29) அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி அதிரடியாக விளையாடி 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது. 215 ரன்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் ஆட்டத்தில் மழை குறுக்கிட்டது. பின்னர் டி.எல்.எஸ் முறைப்படி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டு 171 ரன்கள் சென்னை அணிக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
5 விக்கெட் இழப்பிற்கு 14 ஓவரில் 158 ரன்கள் பெற்றிருந்த சென்னை அணிக்கு கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்டது. குஜராத்தில் மோஹித் சர்மா கடைசி ஓவரில் பந்து வீச முதல் 4 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே கிடைத்தது. கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்டது.
போட்டியில் பரபரப்பு தொற்றியது. 5-வது பந்து சிக்ஸரை அடித்து நம்பிக்கை ஏற்படுத்திய ஜடேஜா அடுத்த பந்தில் பவுண்டரி அடித்து சென்னை அணி வெற்றிக்கு வழிவகுத்தார். அரங்கம் முழுவதும் சி.எஸ்,கே ரசிகர்கள் ஆரவாரம் செய்து கொண்டாடினர்.
போட்டிக்குப் பிறகு பேசிய ஜடேஜா, இந்த வெற்றியை எப்போதும் ஸ்பெஷல் நபரான எம்.எஸ் தோனிக்கு அர்ப்பணிப்பதாக கூறினார்.
ஜடேஜா பேசுகையில், "இந்த வெற்றியை சிஎஸ்கே அணியின் ஸ்பெஷல் நபரான எம்.எஸ் தோனிக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன். இது அர்ப்புதமான தருணம். என் சொந்த மண்ணில் கோப்பையை வென்றுள்ளேன். நான் குஜராத்தைச் சேர்ந்தவன். இது ஒரு சிறப்பான உணர்வு. மழை நிற்கும் வரை ரசிகர்கள் காத்திருந்தனர். எங்களுக்கு ஆதரவளிக்க வந்த சிஎஸ்கே ரசிகர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
தொடர்ந்து, வெற்றிக்கு வழிவகுத்த கடைசி 2 பந்துகளை நீங்கள் சந்தித்த போது உங்கள் மனதில் என்ன நினைத்தீர்கள் என்று கேட்டதற்கு, "என்னால் முடிந்தவரை பந்தை வேகமாக அடிக்க வேண்டும் என்று நினைத்தேன். பந்து எங்கே போகும் என்பதைப் பற்றி நான் சிந்திக்க வில்லை. பந்தை வேகமாக ஸ்விங் செய்யப் பார்த்தேன். எனக்கு நேராக பந்தை அடிக்க பார்த்தேன். ஏனென்றால் மோஹித் ஸ்லோ பால் போடக்கூடியவர் என்பது தெரியும்" என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.