Former indian Cricketer Pragyan Ojha recalls emotional conversation with Rohit Sharma Tamil News
Pragyan Ojha About Rohit Sharma Tamil News: இந்திய கிரிக்கெட்டின் 3 வடிவ அணிகளையும் கேப்டனாக வழிநடத்தி வருகிறார் ரோகித் சர்மா. மும்பையைச் சேர்ந்த இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமானார். முதலில் மிடில்-ஆடரில் பேட்டிங் செய்த இவர் தனது அசாத்தியமான பேட்டிங் திறனால் தொடக்க வீரராக களமாடும் வாய்ப்பை பெற்றார். முன்னாள் கேப்டன் விராட் கோலியின் பதவி விலகலைத் தொடர்ந்து இந்திய அணியின் கேப்டனாக ரோகித் நியமிக்கப்பட்டார்.
Advertisment
ரோகித் சர்மா இந்தியாவில் ஆண்டுதோறும் அரங்கேறி வரும் ஐ.பி.எல். தொடரிலும் வெற்றிகரமான கேப்டனாகவும் இருந்து வருகிறார். அவரது தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. தற்போது 16 வது சீசனில் களமாடும் மும்பை இந்தியன்ஸ் அணியை வழிநடத்த அவர் ஆயத்தமாகி வருகிறார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் ஆட்டம் வருகிற ஏப்ரல் 2 ஆம் தேதி பெங்களூரூ சின்னசாமி ஸ்டேடியத்தில் நடக்கிறது.
ரோகித் சர்மா
ரோகித் சர்மா - பிரக்யான் ஓஜா நட்பு
Advertisment
Advertisements
முன்னாள் இந்திய இடது கை சுழற்பந்து வீச்சாளரான பிரக்யான் ஓஜா மற்றும் ரோகித் சர்மா நீண்ட கால நண்பர்களாக இருந்து வருகின்றனர். இந்திய அணியின் டிரஸ்ஸிங் ரூமை பகிர்ந்து கொண்ட இந்த நண்பர்கள், 24 போட்டிகளில் இணைந்து விளையாடியுள்ளனர். ஐ.பி.எல். தொடரில் டெக்கான் சார்ஜர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும் விளையாடியுள்ளனர். இந்நிலையில், முன்னாள் இந்திய வீரரான பிரக்யான் ஓஜா ரோகித் சர்மாவுடன் நடந்த ஒரு உணர்ச்சிபூர்வமான உரையாடலை நினைவு கூர்ந்துள்ளார்.
நினைவலை
நடப்பு ஐ.பி.எல். தொடர் போட்டிகளை ஆன்லைனில் நேரலையில் ஒளிப்பரப்பு செய்யும் ஜியோ சினிமாவுக்கு பிரக்யான் ஓஜா அளித்த பேட்டியில், 15 வயதுக்குட்பட்டோர் முகாமில் ரோகித்தை சந்தித்து அவருக்கு எதிராக விளையாடியதாகவும், அவர் கிரிக்கெட் உபகரணங்கள் வாங்க பால் பாக்கெட் விற்பனை செய்ததாக உணர்ச்சிவசப்பட்டு பேசினார் என்றும், அவர்களுக்கு இடையே நடந்த அந்த உரையாடலைப் பற்றி விவரித்துள்ளார்.
"15 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய அணி முகாமில் நான் ரோகித்தை முதன்முதலில் சந்தித்தபோது, எல்லோரும் அவர் மிகவும் சிறப்பான வீரர் என்று சொன்னார்கள். அங்கு, நான் அவருக்கு எதிராக விளையாடி அவரது விக்கெட்டை வீழ்த்தினேன். ரோகித் ஒரு பொதுவான பாம்பே பையன், அதிகம் பேசவில்லை. ஆனால் அவர் ஆக்ரோஷமாக விளையாடினார். உண்மையில், எங்களுக்கு ஒருவரையொருவர் தெரியாதபோது அவர் ஏன் என்னிடம் இவ்வளவு ஆக்ரோஷமாக நடந்துகொள்கிறார் என்பது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது! ஆனால் அதன் பிறகு எங்கள் நட்பு வளரத் தொடங்கியது.
பிரக்யான் ஓஜா
அவர் ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர். கிரிக்கெட் உபகரணங்களுக்கான அவரது பட்ஜெட் எவ்வாறு கட்டுப்படுத்தப்பட்டது என்று நாங்கள் விவாதித்தபோது அவர் ஒருமுறை உணர்ச்சிவசப்பட்டார் என்பது எனக்கு நினைவிருக்கிறது. உண்மையில், அதற்காக அவர் பால் பாக்கெட்டுகளை டெலிவரி செய்தார். அது நீண்ட காலத்திற்கு முன்பு நடந்தது. இப்போது அவரைப் பார்க்கும்போது, எங்கள் பயணம் எப்படி ஆரம்பித்தது, எப்படி வளர்ந்திருக்கிறோம் என்பதை எண்ணி நான் மிகவும் பெருமையாக உணர்கிறேன்." என்று பிரக்யான் ஓஜா கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil