இந்த இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தங்கள் முதல் ஆட்டத்தை பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் தொடங்குகின்றன. கடைசி ஐந்தில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக தொடர்ந்து மூன்று வெற்றிகளைப் பதிவு செய்திருப்பதால், பெங்கரூரு அணி முன்னிலையை நீட்டிக்கப் பார்க்கிறது.
இதையும் படியுங்கள்: SRH vs RR; பேட்டிங், பவுலிங்கில் அசத்திய ராஜஸ்தான்; 72 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத்தை வீழ்த்தி வெற்றி
இரு அணிகளும் ஐ.பி.எல் போட்டிகளில் 30 முறை சந்தித்துள்ளன, ஆர்.சி.பியின் 13 வெற்றிகளுடன் ஒப்பிடும்போது மும்பை 17 வெற்றிகளால் போட்டியில் ஆதிக்கம் செலுத்தியுள்ளது. அதிக ரன் அடிக்கும் போட்டிகளுக்கு பெயர் பெற்ற சின்னசாமி ஸ்டேடியத்தில் அணிகள் சேஸிங்கை விரும்புகின்றன. இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணிகள் 81 ஆட்டங்களில் முதலில் பேட்டிங் செய்த அணிகளின் 33 வெற்றிகளை விட சேஸிங் செய்த அணிகள் 44 வெற்றிகளுடன் மேலிடம் பெற்றுள்ளன, மேலும் நான்கு போட்டிகளில் எந்த முடிவும் இல்லை.
இருப்பினும், பெங்களூரு அணி சொந்த மைதானத்தில் விளையாடி பெரிய சாதனையைப் பெற்றதில்லை, ஆனால் அவர்கள் பெங்களூரில் தங்கள் முதல் எட்டு ஆட்டங்களில் ஆறில் விளையாடுவதால், அவர்கள் அதை ஒரு கோட்டையாக மாற்ற விரும்புகிறார்கள்.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
இரு அணிகளின் விளையாடும் வீரர்களின் விவரம்
மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், கேமரூன் கிரீன், திலக் வர்மா, டிம் டேவிட், நெஹால் வதேரா, ஹிருத்திக் ஷோக்கீன், பியூஷ் சாவ்லா, ஜோஃப்ரா ஆர்ச்சர், அர்ஷத் கான்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), கிளென் மேக்ஸ்வெல், மைக்கேல் பிரேஸ்வெல், ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), கர்ண் சர்மா, ஹர்ஷல் படேல், ஆகாஷ் தீப், ரீஸ் டாப்லி, முகமது சிராஜ்
மும்பை பேட்டிங்
மும்பை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், இஷான் கிஷனும் களமிறங்கினர். இருவரும் ரன் சேர்க்க முடியாமல் திணறினர். சிறிது நேரம் தாக்குப்பிடித்த இஷான் கிஷன் 10 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய கிரீன் 5 ரன்களில் போல்டானார். டாப்லி அவரை போல்டாக்கினார். ரன் எடுக்க முடியாமல் தடுமாறி வந்த ரோகித், 10 பந்துகளைச் சந்தித்து 1 ரன் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். இதனால் மும்பை அணி பவர்ப்ளேயில் 3 விக்கெட்களை இழந்து திணறியது.
அடுத்ததாக ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவும் திலக் வர்மாவும் விக்கெட் சரிவை தடுக்கும் வகையில் நிதானமாக விளையாடினர். இருப்பினும் சூர்யகுமார் 15 ரன்களில் அவுட் ஆனார். திலக் வர்மாவுடன் வதேரா ஜோடி சேர்ந்தார். வதேரா கம்பெனி கொடுக்க, திலக் அதிரடியாக ஆடினார். இதனால் அணியின் எண்ணிக்கை சீராக உயர்ந்தது. நிதானமாக ஆடி வந்த வதேரா 21 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக டிம் டேவிட் 4 ரன்களிலும், ஹிர்திக் 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
பின்னர் அர்ஷத் கான் களமிறங்கி சிறப்பாக விளையாடினார். மறுமுனையில் ஆடி வந்த திலக் வர்மா, அரை சதம் கடந்தார். மேலும் கடைசி கட்ட ஓவர்களில் பெங்களூரு பந்து வீச்சை விளாசினார். இதனால் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்தது. அர்ஷத் கான் 15 ரன்களிலும், திலக் வர்மா 46 பந்துகளில் 84 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். திலக வர்மா 4 சிக்சர்களும் 9 பவுண்டரிகளும் விளாசினார். பெங்களூரு தரப்பில் கரண் சர்மா 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
பெங்களூரு பேட்டிங்
பெங்களூரு அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கோலி மற்றும் டுபிளசிஸ் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே மும்பை பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். சிக்சரும் பவுண்டரிகளுமாக விளாசி ரசிகர்களுக்கு விருந்து வைத்தனர். இருவரையும் வீழ்த்த முடியாமல் மும்பை பந்துவீச்சாளர்கள் திணறினர். பெங்களூரு அணி 10 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 97 ரன்கள் எடுத்திருந்தது. இருவரும் அரை சதம் கடந்து விளையாடி வந்த நிலையில், டுபிளசிஸ் 73 ரன்களில் ஆட்டமிழந்தார். 43 பந்துகளைச் சந்தித்த டுபிளசிஸ் 6 சிக்சர்களையும் 5 பவுண்டரிகளையும் விளாசினார். முதல் விக்கெட்டுக்கு இந்த கோலி- டுபிளசிஸ் ஜோடி 148 ரன்கள் எடுத்தது.
அடுத்து களமிறங்கிய தினேஷ் கார்த்திக் டக் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து மேக்ஸ்வெல் களமிறங்கி 2 சிக்சர்கள் விளாசினார். அடுத்ததாக கோலி 2 பவுண்டரிகள் விளாசினார். இதனையடுத்து பெங்களூரு அணி வெற்றி இலக்கை கடந்தது. பெங்களூரு அணி 16.2 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் அடித்தது. இதன்மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது. கோலி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 82 ரன்களுடன் களத்தில் இருந்தார். 49 பந்துகளைச் சந்தித்த கோலி 5 சிக்சர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் விளாசினார். மும்பை தரப்பில் அர்ஷத் கான் மற்றும் கிரீன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.