IPL 2022 RR vs CSK Live Cricket Score: இந்திய மண்ணில் நடைபெற்று வரும் 15வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் கிளைமேக்சான பிளே ஆஃப் சுற்றுக்கு நெருங்கி விட்டது. தற்போது இத்தொடரின் கடைசி ரவுண்டான 14வது போட்டிகள் நேற்று முன்தினம் முதல் தொடங்கி உள்ள நிலையில், இன்றைய 68வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. மும்பையில் உள்ள பிரபோர்ன் ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்த ஆட்டம் இரவு 7:30 மணிக்கு தொடங்குகிறது.
நடப்பு தொடரில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ், இதுவரை விளையாடி 13 ஆட்டங்களில் 8ல் வெற்றி, 5ல் தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது. நல்ல ரன்-ரேட்டில் உள்ள அந்த அணியின் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பு ஏறக்குறைய உறுதியாகி விட்டது. இருப்பினும், ராஜஸ்தான் அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் புள்ளி பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறும் வாய்ப்புள்ளது. எனவே, அந்த இடத்தை கைப்பற்ற இன்றைய ஆட்டத்தில் மும்முரம் காட்டும்.
ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் (3 சதம், 3 அரைசதம் உள்பட 627 ரன்கள்) கேப்டன் சஞ்சு சாம்சன், ஹெட்மயர், ரியான் பராக் போன்ற வீரர்கள் பேட்டிங்கில் நல்ல பார்மில் உள்ளனர். பந்து வீச்சில் யுஸ்வேந்திர சாஹல் (24 விக்கெட்), பிரசித் கிருஷ்ணா, டிரென்ட் பவுல்ட், ஆர்.அஸ்வின், குல்தீப் சென் ஆகியோர் வலுசேர்க்கிறார்கள்.
நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் நடப்பு தொடரில் பலத்த பின்னடைவை சந்தித்துள்ளது. அந்த அணி இதுவரை விளையாடிய 13 ஆட்டங்களில் 4ல் வெற்றி, 9ல் தோல்வியுடன் 8 புள்ளிகளை பெற்று 9-வது இடத்தில் உள்ளது. ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற சென்னை அணி இதுவரை ஒரு முறை கூட கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது கிடையாது. இதனால், சென்னை அணி 10வது இடத்திற்கு இறங்கிவிடக்கூடாது என்ற மனநிலையுடன் இருக்கும். மேலும், முந்தைய 2 லீக் ஆட்டங்களில் மும்பை, குஜராத் அணிகளிடம் அடுத்தடுத்து தோல்வி கண்ட சென்னை அணி ஆறுதல் வெற்றியுடன் விடைபெற இன்றைய ஆட்டத்தில் களமிறங்கும். எனவே இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
இந்நிலையில் இந்த பொட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணியில் முதல் ஓவரின் கடைசி பந்தில் ருத்துராஜ் கெய்க்வாட் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய மொயின் அலி ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை அதிரடியாக எதிர்கொண்டு ரன்கள் சேர்த்தார்.
குறிப்பாக போல்ட் வீசிய 6-வது ஓவரில் முதல் பந்தில் சிக்சர் அடித்த மொயின் அலி அடுத்த 5 பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டி 19 பந்துகளில் அரைசதம் கடந்தார். அவருக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்த டெவான் கான்வே 16 ரன்களிலும், ஜெகதீசன் ஒரு ரன்னிலும் ராயுடு 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
வழக்கத்திற்கு மாறாக சற்று தடுமாறிய கேப்டன் தோனி 28 பந்துகளில் ஒரு பவுண்டரி ஒரு சிக்சருடன் 26 ரன்கள் குவித்து ஆட்டமிந்தார். கடைசி வரை போராடிய மொயின் அலி சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 93 (57 பந்து 13 பவுண்டரி 3 சிக்சர்) ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்துள்ளது. முதல் 6 ஓவர்களில் 75 ரன்கள் குவித்த சென்னை அணி அடுத்து 14 ஓவர்களில் 75 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.
ராஜஸ்தான் அணி தரப்பில் சாஹல் மெக்காய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், அஸ்வின் போல்ட் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து 151 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் ஜெய்ஸ்வால் ஒருபுறம் அதிரடியாக விளையாட மறுபுறம், பட்லர் 2 ரன்களிலும், சாம்சன், 15 ரன்களிலும், படிக்கல் 3 ரன்களிலும், ஹெட்மயர் 6 ரன்களிலும் ஆட்டமிழந்த நிலையில, அரைசதம் கடந்த ஜெயஸ்வால், 44 பந்துகளில் 59 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இதனால் 17 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்தது. இதில் 6-வது விக்கெட்டுக்கு இணைந்த அஸ்வின் ரியான் பராக் ஜோடி அவ்வப்போது பவுண்டரிகளை அடித்து ராஜஸ்தான் அணிளை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றது.
கடைசி 12 பந்துகளில் ராஜஸ்தான வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முகேஷ் சௌத்ரி வீசிய அந்த 19-வது ஓவரில், அஸ்வின் ஒரு சிக்சர் அடிக்க 12 ரன்கள் கிடைத்தது. இதனால் கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவை என்ற நிலையில் ஒரு பவுண்டரி அடித்த அஸ்வின் வெற்றியை தேடி கொடுத்தார்.
இறுதியில் 19.4 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி வரை களத்தில் இருந்த அஸ்வின் 23 பந்துகளில் 3 சிக்சர் 2 பவுண்டரியுடன் 40 ரன்கள் குவித்தார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த ரியான் பராக் 10 ரன்கள் எடுத்தார்.
இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தை பிடித்து ப்ளேஅப் சுற்றுக்கு முன்னேறியது. தனது கடைசி லீக் போட்டியில் விளையாடிய சென்னை அணி கடைசி போட்டியில் தோல்வியுடன் தொடரை விட்டு வெளியேறியது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.