IPL 2023 - Sunil Gavaskar - Chennai Super Kings - MS DHONI Tamil News இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தொடக்க ஆட்டக்காரருமான சுனில் கவாஸ்கர் எல்லா காலத்திலும் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக இருந்து வருகிறார். 73 வயதான அவர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 10,000 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை எடுத்த முதல் வீரர் ஆவார். மேலும், 1983 உலகக் கோப்பையை வென்ற கபில் தேவ் தலைமையிலான அணியில் முக்கிய வீரராகவும் அவர் இருந்தார்.
இந்திய அணிக்காக 1971ம் ஆண்டு அறிமுகமான கவாஸ்கர், எல்லா காலத்திலும் சிறந்த பேட்டர்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். அவர் விளையாடும் நாட்களில், டெஸ்ட் கிரிக்கெட் விளையாட்டின் மிகவும் பிரபலமான வடிவமாக இருந்தது. ஒருநாள் கிரிக்கெட் அதன் ஆரம்ப ஆண்டுகளில் இருந்தது. டி20 கிரிக்கெட் மிகவும் பின்னர் வந்தது.
2005ல் தான் முதல் முதல் டி 20 போட்டி விளையாடப்பட்டது. 2007ல் நடந்த தொடக்க டி20 உலகக் கோப்பையை எம்.எஸ் தோனி தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது. அதன்பின்னர், 2008ல் ஐ.பி.எல் போட்டிகள் தொடங்கியது.
இந்நிலையில், நடப்பு சீசனில் வர்ணனையாளராக இருக்கும் ஜாம்பவான் வீரர் கவாஸ்கரிடம் சமீபத்தில் ஐ.பி.எல்-லில் விளையாட வாய்ப்பு கிடைத்தால் எந்த அணியை விரும்புவீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை குறிப்பிட்டார். ஏன்னென்றால், கவாஸ்கர் மும்பையைச் சேர்ந்தவர் ஆவார். அவர் தனது சொந்த நகரத்தை சார்ந்த அணிக்கு விளையாடுவதில் விரும்புவார் என்பதால் இது ஒரு வெளிப்படையான தேர்வாக இருந்தது.
பின்னர் அவரிடம், மும்பை அணி இல்லையென்றால், எந்த அணி அவருக்கு விருப்பமான தேர்வாக இருந்திருக்கும் என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைத் தேர்ந்தெடுத்து, தனது தேர்வுக்கான 2 காரணங்களைக் கூறினார்.
"மும்பை இந்தியன்ஸ், வேறு எந்த அணியாக இருக்க முடியும்?. இல்லையென்றால், நான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட விரும்புகிறேன். அதற்கு 2காரணங்கள் உண்டு. முதலில், அதன் உரிமையாளர்கள் கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்டவர்கள். அவர்கள் கிரிக்கெட்டிற்காக நிறைய செய்திருக்கிறார்கள். சீனிவாசன் சார் கிரிக்கெட்டுக்காக நிறைய செய்துள்ளார்கள்.
இரண்டாவது பெரிய காரணம் எம்.எஸ்.தோனியுடன் டிரஸ்ஸிங் ரூமில் அமர்ந்து அவர் அணிக்கு எப்படி கேப்டனாக செயல்படுகிறார் என்று பார்ப்பது. அவர் களத்தில் இருப்பது போல் டிரஸ்ஸிங் ரூமிலும் அமைதியாக இருக்கிறாரா? யாராவது ஒரு கேட்சை கைவிட்டாலோ அல்லது யாரேனும் ஒரு பீல்டரை பேக்அப் செய்யாதபோதும் அவர் அமைதியை இழக்கிறாரா? அதைத்தான் நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்." என்று கவாஸ்கர் #AskStar மூலம் ஐ.பி.எல்-லில் எந்த அணிக்காக விளையாட விரும்புகிறார் என்று கேட்டபோது கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.