News about IPL, Rohit Sharma,Suryakumar Yadav, Mumbai Indians in tamil: 10 அணிகள் பங்கேற்கும் 16-வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடர் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை (மார்ச் 31ம் தேதி) முதல் தொடங்குகிறது. இந்த தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணி அதன் தொடக்க ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணியை வருகிற ஏப்ரல் 2ம் தேதி பெங்களுருவில் வைத்து எதிர்கொள்கிறது. இப்போட்டிக்காக இரு அணிகளும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
விலகல்
இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, கேப்டன் ரோகித் சர்மா ஐபிஎல் தொடரில் சில ஆட்டங்களில் ஆட மாட்டார் என்ற தகவல் வெளியாகியது. மேலும், ஐபிஎல் தொடருக்கு பின்னர் லண்டனில் நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்காகவும், அதனைத் தொடர்ந்து இந்திய மண்ணில் நடக்கும் ஒருநாள் உலக கோப்பை தொடரில் கலந்து கொள்ள முழு உடற்தகுதியுடனும், புத்துணர்ச்சியுடனும் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த முடிவு எடுக்கபட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.
பேட்டி
இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது இந்த விஷயங்கள் குறித்து அவரிடம் கேட்கப்பட்டபோது, ஐபிஎல் தொடரில் சில போட்டிகளில் அவர் விளையாடுவது தொடர்பான கேள்வியை தட்டிக்கழித்தார். அவருடன் அணியின் பயிற்சியாளர் மார்க் பவுச்சரும் இருந்தார்.
ரோகித்திடம் நீங்கள் ஓய்வெடுப்பீர்களா என்று கேட்டபோது, "நான் அதை மார்க்கிடம் (பவுச்சர்) விட்டுவிடுகிறேன்" என்று கிண்டல் செய்தார். இதற்கு, அணியின் பயிற்சியாளர் பவுச்சர், “அவர் (ரோகித்) ஓய்வு எடுக்க விரும்பினால் அவருக்கு வழங்கப்படும்” என்று கூறினார்.
நடப்பு ஐபிஎல் சீசனில் பணிச்சுமையை நிர்வாகிக்கும் விதமாக ரோகித் சில ஆட்டங்களில் மட்டுமே விளையாடலாம். அவர் இல்லாத நேரத்தில் சூரியகுமார் யாதவ் அணியை வழிநடத்துவார். அவர் விளையாடும் போட்டிகளை தேர்ந்தெடுத்து விளையாட வாய்ப்புள்ளது என்பதை இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிகிறது. இருப்பினும் அவர் அணியுடன் தொடர்ந்து பயணிப்பார் மற்றும் சூரியாவை டக்அவுட்டில் இருந்து வழிநடத்துவார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சமீபத்திய ஒருநாள் தொடருக்குப் பிறகு, ஐபிஎல்லில் தங்களது அணிக்கு திரும்பும்போது, தேசிய அணியில் விளையாட தங்களைத் தகுதியுடன் வைத்திருக்க வேண்டியது வீரர்கள்தான் என்று கேப்டன் ரோகித் வலியுறுத்தி இருந்தார்.
"இது அனைத்தும் இப்போது வீரர்கள் இடம்பெற்றுள்ள அணி நிர்வாகத்தைப் பொறுத்தது. இப்போது வீரர்கள் அவர்களுக்குத்தான் சொந்தம். நாங்கள் அணிகளுக்கு சில குறிப்புகளை வழங்கியுள்ளோம். ஆனால் நாளின் முடிவில், அது அணி நிர்வாகத்தைப் பொறுத்தது. மேலும் முக்கியமாக, இது வீரர்களைப் பொறுத்தது. அவர்கள் அனைவரும் பெரியவர்கள்; அவர்கள் தங்கள் உடலைப் பார்த்துக்கொள்ள வேண்டும். அது கொஞ்சம் அதிகமாகிவிட்டதாக அவர்கள் உணர்ந்தால், அதைப் பற்றிப் பேசி ஓரிரு ஆட்டங்களில் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். அது நடக்குமா என்பது எனக்கு சந்தேகம், ஆனால்…" என்று ரோகித் கூறியிருந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil