ஐ.பி.எல் 16-வது சீசன் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஐதராபாத், பெங்கரூரு, சென்னை, குஜராத் எனப் பல்வேறு ஊர் மைதானங்களில் ஐ.பி.எல் போட்டி நடைபெறுகிறது. இதில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சில போட்டிகளை விளையாட உள்ளது. உள்ளுரில் சென்னை அணி விளையாடுவதால் ஏராளமான ரசிகர்கள் போட்டியை காண குவிந்திருப்பர்.
இந்தநிலையில், சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (சிஎம்ஆர்எல்) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகியவை இணைந்து ஏப்ரல்/மே மாதங்களில் சென்னையில் நடக்கும் அனைத்து போட்டி நாட்களையும் காண ரசிகர்கள் மெட்ரோ ரயில்களில் இலவசமாக பயணிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 5 மெட்ரோ ரயில் நிலையங்களில் பெரிய திரைகளில் கிரிக்கெட் நேரலை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஐ.பி.எல் போட்டிகளைக் காண சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் மைதானத்திற்குச் செல்லும் ரசிகர்கள் மெட்ரோ ரயில்களில் இலவசமாகப் பயணம் செய்யலாம். பயனர்கள் தங்கள் ஐபிஎல் டிக்கெட்டுகளின் QR பார்கோடுகளை மெட்ரோ நிலையங்களில் ஸ்கேன் செய்து இலவசமாகப் பயணிக்கலாம். அதாவது போட்டி நடைபெறும் சேப்பாக்கம் மைதானத்திற்கு அருகில் உள்ள அரசினர் தோட்டம் மெட்ரோ வரையில் இலவசமாகப் பயணிக்கலாம். மீண்டும் வீடு திரும்பவும் அதே ஐபிஎல் டிக்கெட் கொண்டு பயணிக்கலாம்.
ரூ.10 கட்டணம்
மேலும், மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து சேப்பாக்கம் மைதானத்திற்கு செல்ல ஃபீடர் பேருந்து சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரசிகர்கள் வீடு திருப்ப வசதியாக போட்டி நடைபெறும் நாட்களில் மெட்ரோ ரயில் சேவைகள் 90 நிமிடங்கள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, ஐ.பி.எல் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் மைதானம் சென்று காண முடியாத பலருக்காகவும் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றே சொல்லாம். ஆம், 5 மெட்ரோ ரயில் நிலையங்களில் பெரிய எல்.இ.டி திரை மூலம் அனைத்து நாட்களும் கிரிக்கெட் நேரலை செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நந்தனம், வடபழனி, விம்கோ நகர், திருமங்கலம் மற்றும் சென்ட்ரல் மெட்ரோ ஆகிய 5 மெட்ரோ ரயில் நிலையங்களில் இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையங்களில் ஐபிஎல் போட்டிகளை காண ஒரு மணி நேரத்திற்கு ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.