IPL 2023, Virat Kohli – Royal Challengers Bangalore Tamil News: இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரராக வலம் வருபவர் முன்னாள் கேப்டன் விராட் கோலி. பணிச்சுமை காரணமாக கேப்டன் பதவியில் விலகி அவர் 3 வடிவ கிரிக்கெட்டிலும் அதிக கவனம் செலுத்தி விளையாடி வருகிறார். சமீபத்தில் இந்திய மண்ணில் நடந்த பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் சதம் விளாசி, டெஸ்ட் போட்டியின் சத தேடலை முடிவுக்கு கொண்டு வந்தார். தற்போது அவர் ஒட்டுமொத்தமாக 75 சர்வதேச சதங்களை பதிவு செய்துள்ளார்.
அடுத்ததாக கோலி, வருகிற ஜூன் 7 முதல் 11 வரை லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியில் விளையாடுவார். அதனைத் தொடர்ந்து, இந்திய மண்ணில் அரங்கேறும் ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் விளையாடுவார்.
இதற்கிடையில், 34 வயதான விராட் கோலி, இந்தியாவில் கடந்த 2008ம் முதல் நடைபெற்று வரும் ஐ.பி.எல் தொடரில் களமாட ஆயத்தமாகி வருகிறார். 16 வது சீசனில் அடியெடுத்து வைக்கும் இந்த தொடருக்கான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் விளையாட தயாராகி வருகிறார் கோலி. சில சீசன்களில் இந்த அணியை கேப்டனாக வழிநடத்திய அவர், கடந்த சீசன் முதல் சாதாரண வீரராக களமாடி வருகிறார்.

கேப்டனாக தென்ஆப்பிரிக்காவின் அதிரடித் தொடக்க வீரர் ஃபாஃப் டு பிளெசிஸ் செயல்பட்டு வருகிறார். பெங்களூரு அணி அதன் தொடக்க ஆட்டத்தில் பலம் வாய்ந்த மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டியானது வருகிற ஏப்ரல் 2ம் தேதி அன்று பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடக்கிறது.
மார்க் ஷீட்டைப் பகிர்ந்த கோலி
இந்நிலையில், விராட் கோலி சமூக வலைதளமான ‘கூ’ (KOO)-வில் தனது 10 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியலை வெளியிட்டுள்ளார். மேலும், அந்த பதிவின் கேப்சனில், “உங்கள் மார்க்ஷீட்டில் மிகக் குறைவாகச் சேர்க்கும் விஷயங்கள், உங்கள் குணாதிசயத்தில் எப்படி அதிகம் சேர்க்கின்றன என்பது வேடிக்கையானது.” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவும், அவர் இணைத்துள்ள 10 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் புகைப்படமும் தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
கோலி 10 ஆம் வகுப்பில் ஆங்கிலத்தில் 83, இந்தியில் 75, கணக்கில் 51, அறிவியலில் 55, சமூக அறிவியலில் 81 மதிப்பெண்களும் எடுத்துள்ளார். அவர் கணக்குப் பாடத்தில் மட்டும் 51 மதிப்பெண்கள் எடுத்துள்ள நிலையில், அதை வைத்து சுவையான கமெண்டுகளை ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil