/tamil-ie/media/media_files/uploads/2023/04/brijbhushan-singh.jpg)
இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங். (கோப்பு படம்)
பெண்கள் மல்யுத்த வீரர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக புகார் கூறியதைத் தொடர்ந்து, இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது, டெல்லி காவல்துறை வெள்ளிக்கிழமை கடுமையான போக்ஸோ சட்டம் மற்றும் ஒரு பெண்ணின் நாகரீகத்தை சீற்றம் செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் இரண்டு எஃப்.ஐ.ஆர்.,களை பதிவு செய்தது.
"முதல் எஃப்.ஐ.ஆர் பாதிக்கப்பட்ட மைனர் பெண் ஒருவரால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பானது, இது போக்ஸோ சட்டத்தின் கீழ் ஒரு பெண்ணின் நாகரீகத்தை சீர்குலைப்பது தொடர்பான தொடர்புடைய ஐ.பி.சி பிரிவுகளுடன் பதிவு செய்யப்பட்டுள்ளது…" என்று புதுடெல்லியின் துணை போலீஸ் கமிஷனர் (டி.சி.பி), பிரணவ் தயால் கூறினார்.
இதையும் படியுங்கள்: வெறுப்பு பேச்சு கட்டமைப்பை பாதிக்கும் கடுங்குற்றம்; உச்ச நீதிமன்றம்
"ஒரு பெண்ணின் நாகரீகத்தை சீர்குலைப்பது தொடர்பான ஐ.பி.சி பிரிவின் கீழ் மற்ற 18 வயதுக்கு மேற்பட்ட புகார்தாரர்கள் அளித்த புகார்கள் தொடர்பாக விரிவான விசாரணைகளை மேற்கொள்வதற்காக இரண்டாவது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது," என்று பிரணவ் தயால் கூறினார்.
இரண்டு எஃப்.ஐ.ஆர்.,கள் மீதான விசாரணை "தீவிரமாக" நடைபெற்றுவதாக டி.சி.பி பிரணவ் தயால் கூறினார்.
டெல்லி காவல்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் மற்றும் நீதிபதி பி.எஸ் நரசிம்ஹா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வுக்கு வெள்ளிக்கிழமையன்று எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும் என்று உறுதியளித்ததைத் தொடர்ந்து இரண்டு எஃப்.ஐ.ஆர்.,கள் பதிவு செய்யப்பட்டன.
#WATCH | "I have not yet received the FIR copy. I will speak once I've received the FIR copy," says Brijbhushan Sharan Singh, President, Wrestling Federation of India on wrestlers' protest against him and FIRs registered by Delhi police pic.twitter.com/FvU1FxkI35
— ANI (@ANI) April 29, 2023
இதற்கிடையில், ஏப்ரல் 23 முதல் ஜந்தர் மந்தரில் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவருக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர்கள், பிரிஜ் பூஷன் சரண் சிங் கைது செய்யப்படும் வரை தங்கள் உள்ளிருப்புப் போராட்டத்தை தொடரப்போவதாக தெரிவித்தனர்.
"இது வெற்றிக்கான எங்கள் முதல் படி, ஆனால் போராட்டம் தொடரும்" என்று ஒலிம்பிக் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக் கூறினார்.
பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய டெல்லி காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி ஏழு பெண் மல்யுத்த வீரர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஏழு மனுதாரர்களில் ஒருவரான மைனர் பெண்ணுக்கு பாதுகாப்பு வழங்குமாறு போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்டது.
இந்த விவகாரம் "தீவிரமானது" மற்றும் பரிசீலிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் டெல்லி காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பிய நான்கு நாட்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை எஃப்.ஐ.ஆர்.,கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதற்கு முன் சில ஆரம்பகட்ட விசாரணைகளை நடத்த வேண்டும் என்று ஏப்ரல் 26 அன்று டெல்லி காவல்துறை உச்ச நீதிமன்றத்திடம் கூறியிருந்தது.
டெல்லி காவல்துறை உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த சில நிமிடங்களுக்குப் பிறகு, ஜந்தர் மந்தரில் போராட்டத்தை முன்னெடுத்து வரும், உலக சாம்பியன்ஷிப் பதக்கம் வென்ற வினேஷ் போகட் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் போராட்டம் முடிந்துவிடவில்லை என்று கூறினார்.
“இந்தப் போராட்டம் வெறும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய மட்டும் அல்ல. இந்தப் போராட்டம் நீதியைப் பெறுவது, அவரைத் (பிரிஜ் பூஷன் சரண் சிங்) தண்டிப்பது, அவரைக் கம்பிகளுக்குப் பின்னால் அனுப்புவது மற்றும் அவர் வகிக்கும் அனைத்து பதவிகளில் இருந்தும் அவரை நீக்குவதும் ஆகும்,” என்று வினேஷ் போகட் கூறினார்.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர்கள் டெல்லி போலீஸ் மீது நம்பிக்கை இழந்து விட்டதாக வினேஷ் போகட் கூறினார். “நாங்கள் உச்ச நீதிமன்றத்தின் முன் மட்டுமே ஆதாரங்களை சமர்பிப்போம், எந்தக் குழுவிடமோ அல்லது டெல்லி காவல்துறையிடமோ அல்ல. டெல்லி போலீஸ் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. நாங்கள் ஆறு நாட்களாக இங்கே அமர்ந்திருக்கிறோம், அவர்களால் எஃப்.ஐ.ஆர் கூட பதிவு செய்ய முடியவில்லை, ”என்று வினேஷ் போகட் கூறினார்.
டெல்லி காவல்துறையின் அறிக்கையை பதிவு செய்துக் கொண்ட உச்ச நீதிமன்றம், வழக்கை நிலுவையில் வைக்க முடிவு செய்து, மைனர் பெண்ணுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் உணர்வை மதிப்பீடு செய்து அவருக்கு பாதுகாப்பு வழங்குமாறு காவல்துறை ஆணையருக்கு உத்தரவிட்டது. மேலும், "அடுத்த வெள்ளிக்கிழமை அல்லது அதற்கு முன்" இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யுவும் டெல்லி காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
மற்ற புகார்தாரர்களுக்கு அச்சுறுத்தல் உணர்வைப் பற்றிய மதிப்பீட்டை செய்வதில் காவல்துறை ஆணையர் சுதந்திரமாக முடிவெடுத்துக் கொள்ளலாம், பெஞ்ச் கூறியது.
மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் அளித்த சீல் வைக்கப்பட்ட கவரில் உள்ள சில ஆவணங்களை ஆய்வு செய்த பெஞ்ச், தனது உத்தரவில் மேலும் கூறியது: “பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறப்படும் சிறுமியின் பாதுகாப்புக்கு ஆபத்து இருப்பதால், அந்த பிரமாணப் பத்திரம் சீல் வைக்கப்பட்ட கவரில் வைக்கப்பட்டுள்ளது. பதிவில் வைக்கப்பட்டுள்ள உள்ளடக்கங்களை மனதில் கொண்டு, அச்சுறுத்தல் உணர்வை மதிப்பீடு செய்யவும், சம்பந்தப்பட்ட மைனர் சிறுமிக்கு போதுமான பாதுகாப்பை வழங்கவும் காவல்துறை ஆணையருக்கு நாங்கள் அறிவுறுத்துகிறோம்.”
WFI தலைவர் மீது பல வழக்குகள் இருப்பதாகக் கூறிய கபில் சிபல், இந்த விஷயத்தை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். “சிறப்பு விசாரணைக் குழு அமைக்க வேண்டும். இந்த எஃப்.ஐ.ஆர் என்றால் என்ன அர்த்தம், லோக்கல் போலீஸ் மட்டுமே விசாரிக்குமா?” என்று கபில் சிபில் கேட்டார்.
இந்த விவகாரத்தை டெல்லி காவல்துறை ஆணையரிடம் விட்டுவிடுமாறு சொலிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உச்ச நீதிமன்றத்தை வலியுறுத்தியபோது, ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் இந்த விஷயத்தை கண்காணிக்க வேண்டும் என்று கபில் சிபல் வலியுறுத்தினார்.
அடுத்த கட்ட நிகழ்வுகள் குறித்து நீதிமன்றத்திற்குத் தெரிவிக்குமாறு துஷார் மேத்தாவிடம் கேட்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பெஞ்ச், இந்த பெஞ்ச் "விசாரணையை கண்காணிக்காது அல்லது விசாரணையை வழிநடத்தாது" என்று கூறியது. இந்த வழக்கை உடனடியாக தீர்ப்பதற்கு பதிலாக, அடுத்த வாரம் பெஞ்ச் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் என்றும் தலைமை நீதிபதி கூறினார்.
முழு விஷயத்தையும் "வேறு திசையில்" கொண்டு செல்ல முயற்சிகள் நடப்பதாக துஷார் மேத்தா கவலை தெரிவித்தார்.
"அதன்பிறகு ஒவ்வொரு வழக்கிலும், ஓய்வுபெற்ற நீதிபதி கண்காணிக்கும் வகையில் ஒரு விதிவிலக்கான வழக்கு உருவாக்கப்படும்... FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. CrPC பிரிவுகளின் கீழ் விசாரணை நடைபெறும்,” என்று பெஞ்சிடம் துஷார் மேத்தா கூறினார்.
இதற்கு பதிலளித்த கபில் சிபல், பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான மல்யுத்த வீரர்களின் புகார்களை விசாரிக்க ஜனவரி மாதம் விளையாட்டு அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட மேற்பார்வைக் குழுவின் அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டினார்.
“அதன் அறிக்கையை கையொப்பமிடவும் பார்க்கவும் அனுமதிக்கப்படவில்லை… இதற்கிடையில், அமைச்சகம் எதுவும் செய்யவில்லை. இதுகுறித்து இந்திய ஒலிம்பிக் சங்கத்தில் புகார் அளித்தோம். அவர்கள் ஒன்றும் செய்யவில்லை. இதுபோன்ற சம்பவம் நடைபெற்றதாக முதலாளிக்கு அல்லது கூட்டமைப்புக்குத் தெரிந்த தருணத்தில், அவர்கள் எப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் என்று நாங்கள் அல்ல, சட்டம் சொல்கிறது. எனவே இதை முன்னெடுத்துச் செல்ல விரும்புகிறேன். நான் உறுப்பினராக உள்ள அமைப்புகளின் பொறுப்பு என்ன?” என்று கபில் சிபல் கேள்வி எழுப்பினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.