WTC Final 2023, Ajinkya Rahane Tamil News: 2022 – 23 ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, இங்கிலாந்தின் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் ஜூன் 7ம் முதல் 11ம் தேதி வரை நடைபெறுகிறது. மறுநாள் 12ம் தேதி ‘ரிசர்வ் டே’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டியில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த ஆஸ்திரேலியா – இந்தியா அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
இப்போட்டிக்கான இந்தியாவின் முன்னணி வீரர்கள் ஐ.பி.எல்-லில் பிஸியாக உள்ள நிலையில், தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் அவரது குழுவினர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் ( NCA) போட்டிக்கான தயாரிப்புகளை செய்து வருகின்றனர். வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, மிடில் ஆர்டர் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் முக்கிய வெளிநாட்டு மேட்ச்-வின்னரான ரிஷப் பண்ட் போன்றோர் காயத்தில் இருந்து மீண்டு வருகின்றனர். மேலும், இந்த ஆண்டு இறுதியில் இந்திய மண்ணில் நடக்கும் ஒருநாள் உலகக் கோப்பையை மனதில் வைத்து பணிச்சுமை மேலாண்மை அம்சத்தையும் பிசிசிஐ பார்க்க நினைக்கும்.
தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவரான லக்ஷ்மண், விளையாட்டு அறிவியல் மற்றும் மருத்துவக் குழுவின் கீழ், பிசிசிஐ ஒப்பந்தத்தில் உள்ள காயமடைந்த வீரர்களின் மறுவாழ்வை மேற்பார்வையிடுவது மட்டுமல்லாமல், 'இலக்கு' வீரர்களின் (இந்தியா, இந்தியா A) முன்னேற்றத்தைக் கண்காணித்தும் வருகிறார். அத்துடன் வளர்ந்து வரும் வீரர்கள் (19 மற்றும் 23 வயதுக்கு இடைப்பட்டவர்கள்) மீதும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
டிராவிட் மற்றும் லக்ஷ்மண் இருவரும் அந்தந்த அணிகளுடன் இணைந்து பணிச்சுமை மேலாண்மை மற்றும் இறுதிப் போட்டிக்குத் தயாராகும் திட்டங்களைப் பற்றி விரிவாக விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஷ்ரேயாஸ் ஐயர் (சிவப்பு பந்து) மற்றும் தீபக் சாஹர் (வெள்ளை பந்து) ஆகியோரின் காயங்களை பொறுத்தமட்டில் விளையாட்டு அறிவியல் தலைவர் நிதின் படேல், விரிவான மறுவாழ்வுக்குப் பிறகு திரும்பி வரும் வீரர்களின் வழக்கமான முறிவு குறித்து ஏதேனும் கடினமான கேள்விகளை எதிர்கொள்கிறாரா என்பதைப் பார்க்க வேண்டும்.
பயிற்சி
இங்கிலாந்து கவுண்டி சீசன் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி (WTC )ஒரு ஐசிசி-யின் போட்டியாக இருப்பதால், பிளே-ஆஃப்களுக்கு தகுதி பெறாத ஐபிஎல் அணி வீரர்கள், இங்கிலாந்துக்கு முன்னதாகவே புறப்பட்டாலும், அவர்கள் தங்கள் அணிக்குள் மட்டுமே போட்டிகளை விளையாடி பயிற்சி பெற முடியும். பயிற்சி ஆட்டத்திற்காக ஒரு உள்ளூர் அணிக்கு பிசிசிஐ இங்கிலாந்து வாரியத்திடம் கோரிக்கை வைத்தாலும், அது பெரும்பாலும் புதிய வீரர்களாகவோ அல்லது சர்வதேச அனுபவம் இல்லாத வீரர்களாகவே இருப்பார்கள். ஏனெனில் முக்கிய அணிகள் எந்த வீரரையும் வார்ம்-அப் ஆட்டத்திற்கு விடுவிக்க மாட்டார்கள்.
இது தரமான நிகரப் பயிற்சியைப் பெறுவது மற்றும் ஆட்டத்திற்கு முன்னதாக மேட்ச் பிராக்டீஸ் செய்வது எப்படி என்பது பிசிசிஐக்கு கவலையாக இருக்கும். இந்த தொடருக்கான அணியில் உள்ள பந்து வீச்சாளர்களுடன் சேர்ந்து நவ்தீப் சைனி, அவேஷ் கான், ஷிவம் மாவி, கமலேஷ் நாகர்கோடி போன்ற பந்து வீச்சாளர்கள் அணியுடன் பயணிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மீண்டும் ரஹானே
சமீபத்தில் நடந்த உள்நாட்டு தொடரில் இந்திய வீரரான அஜிங்க்யா ரஹானே 600 மேற்பட்ட ரன்களை குவித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இதேபோல், தற்போது நடந்து வரும் ஐ.பி.எல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 20 பந்துகளில் அரைசதம் அடித்து மிரட்டினார். அதனால், அவருக்கு மீண்டும் 15 பேர் கொண்ட இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
ஏனெனில், முதுகு அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஷ்ரேயாஸ் ஐயர் தற்போது தான் மீண்டு வருகிறார். எனவே, அவர் ஓவலில் விளையாட வாய்ப்பில்லை. இதேபோல், மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடும் சூரியகுமார் யாதவும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள், தற்போது நடக்கும் ஐபிஎல் தொடர் போட்டிகளில் ரன் சேர்க்க தடுமாறி வருகிறார். அந்த இடத்தில் விளையாட அஜிங்க்யா ரஹானே பொருத்தமான வீரராக இருப்பார்.
இதுவரை 82 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரஹானே 4931 ரன்கள் எடுத்துள்ளார். இந்திய டெஸ்ட் அணியின் துணைகேப்டனாக இருந்த அவர் அவ்வப்போது கேப்டனாக அணியை வழிநடத்தியுள்ளார். அவரது தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.