yuvraj singh Tamil News: இந்திய கிரிக்கெட் அணியில் அதிரடி ஆட்டக்காராக வலம் வந்தவர் முன்னாள் வீரர் யுவராஜ் சிங். கடந்த 2003ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் அடி வைத்த இவர் பல சர்வதேச போட்டிகளில் திருப்பு முனையை ஏற்படுத்தியவர். மேலும், தனது அசாத்திய அதிரடியால் தனக்கென ரசிக பெருங்க்கூட்டத்தையும் உருவாக்கியவர். இவை தவிர, உள்ளூர் மற்றும் சர்வதேச தொடரிகளில் பல்வேறு சாதனைகளை யுவராஜ் படைத்துள்ளார். இவரின் சில சாதனைகள் இதுவரை எந்தவொரு இந்திய வீரளாலும் முறியடிக்கப்படாத ஒன்றாக உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஓய்வு பெற்ற யுவராஜ் தற்போது விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார். மேலும், இந்திய மண்ணில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரை அனைவரையும் போல உற்றுக்கவனித்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில், நடப்பு தொடரில் கலக்கி வரும் இளம் இந்திய வீரர்களில் இருவர் தன்னைப் போல் உற்சாகமாக விளையாடுவதாக யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

ஸ்போர்ட்ஸ் 18 தளத்துக்கு யுவராஜ் சிங் அளித்திருந்த நேர்காணலில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் விளையாடி வரும் பஞ்சாப் வீரர் அபிஷேக் ஷர்மா தன்னைப் போல் பேட்டிங் செய்வதாக குறிப்பிட்டு பேசியிருந்தார்.
“அபிஷேக்கை (சர்மா) பார்க்கும்போது, அவர் என்னைப் பற்றி நிறைய ஞாபகப்படுத்துகிறார். அவர் அடிக்கும் புல் ஷாட், பேக்ஃபுட் ஷாட் போன்றவற்றை பார்க்கும்போது, நான் அவரைப் போலவே இருப்பதாக உணர்ந்தேன்.” என்று யுவராஜ் கூறியுள்ளார்.

நடப்பு தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வரும் இந்திய இளம் வீரர் அபிஷேக் சர்மா நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை 11 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர் 331 ரன்கள் எடுத்துள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 132.40 ஆக உள்ளது. ஐதராபாத் அணியில் அதிக ரன்களை சேர்த்த வீரர்களில் அபிஷேக் முதன்மையானவராக உள்ளார்.

தொடர்ந்து அந்த நேர்காணலில் யுவராஜ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வரும் இந்திய வீரர் சிவம் துபே தனக்கு நிகரான மற்றொரு வீரர் என்றும் சுட்டிக்காட்டினார். சர்வதேச போட்டிகளில் துபேக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“சிவம் துபேவுக்கும் அந்த ஸ்டைல் இருக்கிறது. ஆனால் அவர் நீண்ட காலமாக விளையாடி வருகிறார். அவருக்கு 28 வயது ஆகி விட்டது. அவர் எவ்வளவு ஒருநாள் கிரிக்கெட் விளையாடினார் என்று எனக்குத் தெரியவில்லை. இவர் போன்றவர்களுக்கு திறமை இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், நீங்கள் அவர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுக்க வேண்டும். அது துபே ஆகவோ அல்லது வேறு யாராகவோ இருக்கலாம். நீங்கள் அவர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கினால் தான் அவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள்.

சிவம் துபே இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 9 போட்டிகளில் விளையாடி 160.34 என்ற ஸ்டிரைக் ரேட்டில் 279 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“