IPL2020 rr vs kkr match review : ஐபிஎல் தொடரின் 12வது லீக் சுற்றுப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் துபாயில் நேற்று நடைபெற்றது. டாஸ்வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. இரண்டு அணிகளுமே கடந்த போட்டியில் வெற்றி பெற்று இருந்ததால் இந்தப் போட்டியில் அணியில் எந்த மாற்றமும் செய்யவில்லை.
கொல்கத்தா தொடக்க வீரர்களாக ஷுப்மன் கில், சுனில் நரைன் களமிறங்கினர். முதல் போட்டியில் 9 ரன் எடுத்த நரைன், 2வது போட்டியில் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்திருந்தாலும், கொல்கத்தா அணி அவருக்கு மேலும் ஒரு வாய்ப்பு கொடுத்தது. அரை சதத்தை நெருங்கிய கில் 47 ரன் எடுத்து (34 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) ஆர்ச்சர் வேகத்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். நம்பிக்கை அளிக்கும் வகையில் விளையாடிக் கொண்டிருந்த ராணா, கில் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தது நைட் ரைடர்சுக்கு பின்னடைவை கொடுத்தது. கேப்டன் தினேஷ் கார்த்திக் 1 ரன் மட்டுமே எடுத்து பட்லர் வசம் பிடிபட்டார். ராயல்ஸ் பந்துவீச்சில் ஆர்ச்சரின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்தது.
கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் குவித்தது.அதனையடுத்து, களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ஸ்டீவன் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய சஞ்சு சாம்சனும் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். ராபின் உத்தப்பாவும் 2 ரன்களில் ஆட்டமிழந்தார்.
தொடர்ச்சியாக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தநிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தடுமாறியது.அடுத்து வந்தவர்களில் டாம் கரன் மட்டும் போராடி ரன் சேர்த்ததால், ராஜஸ்தான் அணியின் ஸ்கோர் 100 ரன்களையாவது கடந்தது. மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கரன் 35 பந்தில் அரைசதம் அடித்து ஆறுதல் அளித்தார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அபார பந்துவீச்சால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 37 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. நடப்பு தொடரில் தொடர்ச்சியாக 2 அசத்தல் வெற்றிகளுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, தனது 3வது லீக் ஆட்டத்தில் நேற்று நைட் ரைடர்சை சந்தித்தது.கொல்கத்தா அணியின் இரண்டாவது வெற்றி ஆகும். சிறப்பாக பந்து வீசி சஞ்சு சாம்சன், பட்லர் என இரண்டு முக்கிய விக்கெட்களை சாய்த்த சிவம் மாவி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil