Ipl2021 cricket Tamil News: ஐபிஎல் தொடரின் 14 வது சீசன் கடந்த ஏப்ரல் 9ம் தேதி முதல் நடைபெற்றது. கடும் கட்டுப்பாட்டுகளுக்கு மத்தியில் நடத்தப்பட்ட இந்த தொடரில், கொரோனா உயிர் பாதுகாப்பு முறையில் இருந்து வெளியேறிய சில வீரர்களால் ஒரு சில வீரர்களுக்கும், அணியின் சில நிர்வாகிகளுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் தொடரை தேதி அறிவிப்பின்றி தற்காலிகமாக ஒத்தி வைத்து அறிவிப்பு வெளியிட்டது ஐசிசி.
இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, விளையாடிய 7 போட்டிகளில் 5ல் வெற்றியை சுவைத்தது. பேட்டிங் வரிசையில் தேவதூத் படிக்கல், ஏபி டிவில்லியர்ஸ் அசத்தி இருந்தனர். புது வரவாக வந்த க்ளென் மேக்ஸ்வெல் 7 போட்டிகளில் 223 ரன்களை குவித்தார்.

பந்து வீச்சில் முகமது சிராஜ், ஹர்ஷல் படேல் மற்றும் கைல் ஜேமீசன் போன்றார் அணிக்கு திருப்பு முனையை ஏற்படுத்தினர். 6 போட்டிகளில் களமிறக்கப்பட்ட ஆல்-ரவுண்டர் வீரர் வாஷிங்டன் சுந்தர் பேட்டிங்கில் 31 ரன்களும், பந்து வீச்சில் 3 விக்கெட்டையும் எடுத்தார். இருப்பினும் அந்த அணி சுந்தரை சரியாக பயன்படுத்தவில்லை என முன்னாள் இந்திய வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
இது குறித்து சோப்ரா தனது யூடியூப் சேனலில் பேசிய ஆகாஷ் சோப்ரா “வாஷிங்டன் சுந்தரை ஒரு பந்து வீச்சாளராக ஆர்.சி.பி அணி சரியாகப் பயன்படுத்தவில்லை என்று நான் நினைக்கிறேன். அந்த அணியின் சார்பாக அவரை மேலும் பந்து வீசச் செய்திருக்கலாம். ஆனால் அவர்கள் அதைச் செய்யவில்லை” என்று கூறினார்.

மேலும், யுஸ்வேந்திர சாஹலைப் பற்றியும் பேசிய சோப்ரா “பெங்களூரு அணிக்காக 7 போட்டிகளில் களமிறப்பட்ட சாஹால் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி 8.26 என்ற பொருளாதார வீதத்துடன் உள்ளார். இது அவரது பந்து வீச்சில் மிகவும் பின்னடைந்துள்ளார் என்பதை காட்டுகிறது. அதோடு ஒரு சில விக்கெட்டுகளை மட்டும் எடுத்து அதிக ரன்களை வாரி கொடுத்த அவரின் பந்து வீச்சு தொடர்ந்து எடுபட வாய்ப்பில்லை” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” (https://t.me/ietamil)