worldcup 2023 | afghanistan-vs-sri-lanka | irfan-pathan | harbhajan-singh: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று திங்கள்கிழமை புனேவில் நடந்த ஆட்டத்தில் இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி ஆப்கானிஸ்தானின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ரன் சேர்க்க போராடியது.
அந்த அணியில் அதிகபட்சமாக நிசாங்கா 46 ரன்கள் எடுத்தார். 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து இலங்கை அணி 241 ரன்கள் எடுத்தது. இந்த இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தான் அணி நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தி இலக்கை மெதுமெதுவாக எட்டிப்பிடித்தனர். 4 ஓவர்கள் மற்றும் 4 பந்துகளை மீதம் வைத்து ஆப்கானிஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த அசத்தல் வெற்றியின் மூலம் நடப்பு உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் பெற்ற 3வது வெற்றியை ருசித்தது. அந்த அணி முன்னதாக இங்கிலாந்து, பாகிஸ்தான் போன்ற சாம்பியன் பட்டம் வென்ற அணிகளை வீழ்த்தி இருந்தது. தற்போது மற்றொரு சாம்பியன் பட்டம் வென்ற அணியான இலங்கையும் வீழ்த்தி வரலாறு படைத்துள்ளது.
ஆப்கான் பாடலுக்கு டான்ஸ்
இந்த நிலையில், இலங்கைக்கு எதிராக ஆப்கானிஸ்தான் அணி பெற்ற வெற்றியை இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்களான இர்பான் பதான் மற்றும் ஹர்பஜன் சிங் இருவரும் நடனமாடி கொண்டாடி உள்ளனர். அவர்கள் இருவரும் "ஆப்கான் மஸ்த்" என்ற பாடலுக்கு நடனம் போட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ கிரிக்கெட் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“