Bcci: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ அதன் அமைப்பின் ஒப்பந்தத்தில் உள்ள வீரர்கள் ரஞ்சி டிராபியில் கண்டிப்பாக விளையாட வேண்டும் என்றும், ஐ.பி.எல் 2024 தொடருக்குத் தயாராவதை கைவிட வேண்டும் என்றும் அறிவித்தது. ஆனால், இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற வீரர்கள் பி.சி.சி.ஐ அறிவிப்பை மீறியுள்ளனர்.
ஜார்கண்ட் கிரிக்கெட் சங்கத்துடன் இஷான் கிஷானுக்கு எந்த வித தகவல் தொடர்பும் நடக்கவில்லை. அதே நேரத்தில், ஸ்ரேயாஸ் ஐயர் தனக்கு முதுகில் காயம் இருப்பதாக மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் கூறினார். ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியின் (என்.சி.ஏ) விளையாட்டு அறிவியல் மற்றும் மருத்துவத்தின் தலைமைத் தலைவர் நிதின் படேல், அவருக்கு புதிய காயங்கள் எதுவும் இல்லை என்றும், அவர் விளையாடுவதற்கு தகுதியானவர் என்றும் கூறினார்.
கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சொந்த மண்ணில் நடந்த தொடருக்குப் பிறகு இஷான் கிஷன் எந்த போட்டியிலும் விளையாடவில்லை, அதே நேரத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் உடற்தகுதியுடன் இருந்தபோதிலும், டெஸ்ட் போட்டியில் குறைந்த ஸ்கோரைப் பெற்றதால் இந்திய டெஸ்ட் அணியிலிருந்து நீக்கப்பட்டார்.
டெஸ்ட் அணி வீரர்களுக்கு போனஸ்
இந்த நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்தியா டெஸ்ட் தொடரை வென்றுள்ளதால், இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கு போனஸ் அளிக்கும் வகையில் திருத்தப்பட்ட ஊதிய அமைப்பை கொண்டு வர பி.சி.சி.ஐ முடிவு செய்துள்ளது. மேலும், சில இந்திய அணி வீரர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ரஞ்சி டிராபியிலிருந்து விலகி ஐ.பி.எல் தொடருக்கு முன்னுரிமை அளிப்பதால், ஊதிய கட்டமைப்பை மறுவடிவமைக்க முடிவு செய்திருப்பதாகவும் தெரிகிறது.
ஒரு சீசனில் அனைத்து டெஸ்ட் தொடர்களிலும் விளையாடினால், ஒரு வீரர் பெறும் கூடுதல் போனஸ் குறித்து பி.சி.சி.ஐ ஆலோசனை நடத்தி வருகிறது. தற்போது பி.சி.சி.ஐ ஒரு வீரருக்கு டெஸ்ட் போட்டி ஒன்றுக்கு ரூ.15 லட்சமும், ஒருநாள் போட்டிக்கு 6 லட்சமும், டி20 சர்வதேச போட்டிக்கு 3 லட்சமும் சம்பளமாக வழங்கி வருகிறது.
“உதாரணமாக, யாரேனும் ஒரு காலண்டர் ஆண்டில் அனைத்து டெஸ்ட் தொடர்களையும் விளையாடினால், வருடாந்திர தக்கவைப்பாளர் ஒப்பந்தத்தைத் தவிர, அவருக்கு கூடுதலாக போனஸ் அளிக்கப்பட வேண்டும். வீரர்கள் அதிக சிவப்பு-பந்து கிரிக்கெட்டுக்கு வருவதை இது உறுதிசெய்யும். டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதற்கு இது கூடுதல் சலுகையாக இருக்கும்." என்று அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
ஒரு காலண்டர் ஆண்டில் இந்தியாவின் அனைத்து டெஸ்ட் தொடர்களிலும் விளையாடுவதற்கு ஒரு வீரர் உடற்தகுதி மற்றும் ஃபார்மில் இருந்தால் மட்டுமே இந்த போனஸ் பொருந்தும். இந்த போனஸ் பணம் டி20 லீக்குகள் மற்றும் சர்வதேச போட்டிகளின் சகாப்தத்தில்டெஸ்ட் போட்டிக்கு சமமான முக்கியத்துவம் கொடுக்க இளம் வீரர்களை ஊக்குவிக்கும். இது அங்கீகரிக்கப்பட்டால், இந்திய வீரர்களுக்கான இந்த திருத்தப்பட்ட சம்பள அமைப்பு ஐபிஎல் 2024க்குப் பிறகு அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பி.சி.சி.ஐ ஒப்பந்தம் செய்யப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள் வெளிநாட்டு லீக்குகளில் விளையாட அனுமதிக்கப்படுவதில்லை. ஐ.பி.எல் போட்டிக்கு தயாராக இருக்க உள்நாட்டு கிரிக்கெட்டைத் தவிர்ப்பது இளம் வீரர்களிடையே அதிகரித்து வரும் நிகழ்வாக மாறியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் ஒப்பந்தத்தில் உள்ள வீரர்கள் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள்?
கிரேடு A+ (ரூ. 7 கோடி)
ரோகித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா.
கிரேடு ஏ (ரூ 5 கோடி)
ஹர்திக் பாண்டியா, ஆர் அஷ்வின், முகமது ஷமி, ரிஷப் பந்த் மற்றும் அக்சர் படேல்.
கிரேடு பி (ரூ 3 கோடி)
சேதேஷ்வர் புஜாரா, கே.எல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், முகமது சிராஜ், சூர்யகுமார் யாதவ், ஷுப்மான் கில்
கிரேடு சி (ரூ. 1 கோடி)
உமேஷ் யாதவ், ஷிகர் தவான், ஷர்துல் தாக்கூர், இஷான் கிஷன், தீபக் ஹூடா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், கே.எஸ்.பாரத்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.