இந்தியன் சூப்பர் லீக்: இரண்டாவது முறையாக கோப்பையை வென்ற சென்னை!

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் பெங்களூரு அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சென்னையின் எப்.சி. அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை...

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் பெங்களூரு அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சென்னையின் எப்.சி. அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் 17-ம் தேதி, 4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில், சென்னையின் எப்.சி., பெங்களூரு எப்.சி. அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.

பெங்களூருவில் உள்ள கான்டீரவா மைதானத்தில் நேற்று இரவு இறுதிப் போட்டி நடைபெற்றது. இவ்விரு அணிகளும் ஏற்கனவே லீக்கில் இரண்டு ஆட்டங்களில் மோதியுள்ளன. ஒன்றில் பெங்களூரு எப்.சி.யும் (3-1), மற்றொன்றில் சென்னையின் எப்.சி.யும் (2-1) வெற்றி கண்டுள்ளன.

2015-ம் ஆண்டு சாம்பியனான சென்னை அணி, இந்த சீசனில் லீக் சுற்றில் 9 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் 2-வது இடத்தை பிடித்தது. அரைஇறுதி சுற்றில் 4-1 என்ற கோல் வித்தியாசத்தில் கோவாவை வென்றது. தனது முதல் சீசனில் களமிறங்கிய பெங்களூரு எப்.சி., அணி, லீக் சுற்றில் 18 ஆட்டங்களில் 13-ல் வெற்றிகளை குவித்து முதலிடத்தை பிடித்தது. அரைஇறுதியில் 3-1 என்ற கோல் கணக்கில் புனே சிட்டியை வென்றது.

இந்நிலையில், நேற்று நடந்த இறுதிப்போட்டியின் முதல் பாதிநேர ஆட்டம் தொடங்கிய 9-வது நிமிடமே, பெங்களூரு அணியின் சுனில் சேத்ரி முதல் கோல் அடித்து சென்னை அணிக்கு அதிர்ச்சி அளித்தார். அதைத்தொடர்ந்து சென்னை அணியின் மெய்ல்சன் அல்வெஸ் 17-வது நிமிடத்திலும், 45-வது நிமிடத்திலும் இரு கோல்கள் அடித்தார். இதனால் முதல் பாதிநேர ஆட்டத்தில் சென்னை அணி 2-1 என முன்னிலை பெற்றது.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 67-வது நிமிடத்தில் சென்னை அணியின் ராபெல் அகஸ்டோ மேற்கொண்டு ஒரு கோல் அடித்தார். இதனால் சென்னை அணி 3-1 என முன்னிலை பெற்றது. அதைத்தொடர்ந்து 92-வது நிமிடத்தில் பெங்களூரு அணியின் மிகு கோல் அடித்தார். இறுதிக் கட்டத்தில் அதிக பரபரப்பு நிலவியது. இருப்பினும், பெங்களூரு அணியால் மேற்கொண்டு கோல் அடிக்க முடியாததால், 3-2 என்ற கோல் கணக்கில் சென்னை அணி வெற்றி பெற்று இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.

கோப்பையை வென்ற சென்னையின் எப்.சி. அணிக்கு ரூ.8 கோடியையும், தோல்வி அடைந்த பெங்களூரு அணிக்கு ரூ.4 கோடியும் பரிசுத்தொகையாக அளிக்கப்பட்டது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close