ஐஎஸ்எல் கால்பந்து தொடர் 2018: மும்பை ஏன் தோற்றது?

இந்த ஐந்தில் தான் 2 க்ளிக் ஆகி அந்த அணியால் ஜெயிக்க முடிந்தது. ஆனால், மும்பைக்கு அந்த 3 ஷாட்டில் ஒன்று கோலானாது. ஆனால்...

ஆசைத்தம்பி

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி தொடர் 2014-ம் ஆண்டு முதல் இந்தியாவில் நடந்து வருகிறது. அறிமுக ஆண்டில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணியும், 2015-ம் ஆண்டில் சென்னையின் எஃப்சி அணியும், 2016-ம் ஆண்டில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணியும், கடந்த ஆண்டில் (2017) சென்னையின் எஃப்சி அணியும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின. இந்த நிலையில் 5-வது ஐ.எஸ்.எல். கால்பந்து திருவிழா கடந்த மாதம் 29ம் தேதி தொடங்கியது.

இதில் சென்னையின் எப்.சி., பெங்களூரு எப்.சி., நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி), எப்.சி.கோவா, மும்பை சிட்டி, ஜாம்ஷெட்பூர், அட்லெடிகோ டி கொல்கத்தா, கேரளா பிளாஸ்டர்ஸ், டெல்லி டைனமோஸ், புனே சிட்டி ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும்.

இதில், முதல் போட்டியில் கொல்கத்தா அணியும், கேரளா பிளாஸ்டர்ஸ் அணியும் மோதின. இதில், 2-0 என்ற கோல் கணக்கில் கேரள அணி வென்றது.

மும்பையில் நேற்றிரவு நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எஃப்சி அணியும், ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணியும் மோதின.

ஆரம்பம் முதலே ஜாம்ஷெட்பூர் அணி, தனக்கான வாய்ப்புகளை உருவாக்க ஆரம்பித்தது. இதன் பயனாக ஆட்டத்தின் 28வது நிமிடத்தில், மேரியோ ஆர்க்ஸ், அக்யூட் ஆங்கிளில் பந்தை தலையால் முட்ட, மும்பை கோல் கீப்பரால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. இதனால், 1-0 என முதல் பாதியில் ஜாம்ஷெட்பூர் முன்னிலை பெற்று, டெட்லாக்கை உடைத்தது.

இதன்பிறகு, முதல் பாதியான 45 நிமிடங்களுக்கு மும்பை அணியால் கோல் அடிக்க முடியவில்லை.

இரண்டாம் பாதி தொடங்கிய பிறகு, மும்பை தனது தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்தியது. பந்து அதிக நேரம் மும்பை வசமே இருந்தது. ஆட்டத்தின் 72வது நிமிடத்தில் மும்பையின் முகமது ரஃபீக் கோல் அடிக்க, ஆட்டம் சமநிலை ஆனது. ஆனால், அவர் அடித்தது ஆஃப்சைட் ஷாட் என்று தெரியவந்ததால் அதற்கு கோல் கொடுக்கவில்லை.

ஆனால், நேரம் செல்ல செல்ல மும்பை அணியால் அச்சுறுத்தல் கொடுக்க முடிந்ததே தவிர, கோல் அடிக்க முடியவில்லை. அதேசமயம் ஆட்டம் முடியும் தருவாயில், ஜாம்ஷெட்பூர் வீரர் பாப்லோ மோர்காடோ யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் கோல் அடிக்க, மும்பையின் ஒட்டுமொத்த முயற்சியும் புஸ்வானமாகிப் போனது.

ஆட்டத்தின் முடிவில் 2-0 என வெற்றிப் பெற்று, 2018 சீசனில் வெற்றியுடன் பயணத்தை தொடங்கியுள்ளது ஜாம்ஷெட்பூர்.

பால் பொசஷன்

மும்பை – 47 % ஜாம்ஷெட்பூர் – 53%

துல்லியமாக பந்தை கடத்திச் சென்றதில் மும்பை 65 சதவீதமும், ஜாம்ஷெட்பூர் 69 சதவீதமும் சிறப்பாக செயல்பட்டன. குறிப்பாக, மும்பை இரண்டாம் பாதியில் தான் பாஸிங் மிக அற்புதமாக செய்தது. அதை முதல் பாதியில் பாதி அளவாவது முயன்றிருந்தால் இன்னும் டஃப் கொடுத்திருக்க முடியும்.

டார்கெட்டை நோக்கி மும்பை அடித்த ஷாட்களின் எண்ணிக்கை 3

டார்கெட்டை நோக்கி ஜாம்ஷெட்பூர் அடித்த ஷாட்களின் எண்ணிக்கை 5.

இந்த ஐந்தில் தான் 2 க்ளிக் ஆகி அந்த அணியால் ஜெயிக்க முடிந்தது. ஆனால், மும்பைக்கு அந்த 3 ஷாட்டில் ஒன்று கோலானாது. ஆனால், அது ஆஃப் சைட் கோலானதால் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

டார்கெட்டுக்கு வெளியே மும்பை அடித்த ஷாட்களின் எண்ணிக்கை 6. ஜாம்ஷெட்பூர் அடித்த ஷாட்களின் எண்ணிக்கை 3.

மும்பை அணி தங்களுக்குள் 356 முறை பந்தை பாஸ் செய்து கொண்டது. அதுவே ஜாம்ஷெட்பூர் 406 முறை பாஸ் செய்தது.

அதேபோல், மும்பை அணி 516 முறை பந்தை தொட்டது. ஜாம்ஷெட்பூர் 571 முறை பந்தை தொட்டது. அதாவது, பந்தை பாஸ் செய்ததையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக பந்தை அந்தந்த அணிகள் தொட்ட கணக்கு இது.

இரு அணிகளும் 13 முறை ஃபவுல் ஷாட்ஸ் அடித்தன.

கார்னர் ஷாட்டை மும்பை 4 முறையும், ஜாம்ஷெட்பூர் 6 முறையும் அடித்துள்ளன.

மும்பை அணி 1 மஞ்சள் அட்டையும், ஜாம்ஷெட்பூர் 2 மஞ்சள் அட்டையும் பெற்றன. ரெட் கார்டு இரு அணிகளும் பெறவில்லை. அந்த வகையில் மும்பை கொஞ்சம் ஆறுதல் அளித்தது.

மேலே கொடுக்கப்பட்டுள்ள தரவுகளை நாம் பார்த்தாலே, மும்பை ஏன் தோற்றது என்பது நன்றாக புரிந்துவிடும். பந்தை ஆக்கிரமிக்க தவறியது, இலக்கை நோக்கி அடித்த ஷாட் எதுவுமே கோலாக மாறாமல் போனது, இலக்குக்கு வெளியே அதிக ஷாட்களை ஆடியது போன்றவை தான் மும்பை செய்த தவறுகள் ஆகும்.

இந்த இடங்களில் அவர்கள் தங்கள் ஆட்டத்திறனை மேலும் வலுப்படுத்த வேண்டியது அவசியம்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close