ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: பாகிஸ்தான் அணி அறிவிப்பு
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 24 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாட இருக்கிறது.
பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் ராவல்பிண்டியில் மார்ச் 4-ந்தேதி தொடங்குகிறது.
இந்நிலையில், டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
அந்த அணி விபரம்: பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான், அப்துல்லா ஷபிக், அசார் அலி, பஹீம் அஷ்ரப், பவாத் ஆலம், ஹாரிஸ் ரவுப், ஹசன் அலி, இமாம் உல்-ஹக், முகமது நவாஸ், நமன் அலி, சஜித் கான், சாத் ஷகீல், ஷகீன் ஷா அப்ரிடி, ஷான் மசூத், ஜாகித் மக்மூத். மாற்று வீரர்களாக கம்ரான் குலாம், முகமது அப்பாஸ், நசீம் ஷா, சர்ப்ராஸ் அகமது, யாசிர் ஷா ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.
Pakistan squad for Test series against Australia announced #PAKvAUS pic.twitter.com/j4O93DhbjR
— Pakistan Cricket (@TheRealPCB) February 9, 2022
முன்னதாக, பாகிஸ்தான் தொடருக்கான ஆஸ்திரேலியா அணியும் அண்மையில் அறிவிக்கப்பட்டது.
புரோ ஹாக்கி லீக்: 2ஆவது ஆட்டத்திலும் இந்தியா அசத்தல் வெற்றி..!
புரோ ஹாக்கி லீக் போட்டி தொடரில் இந்திய அணி இரண்டாவது லீக் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை 2-10 என்ற கோல் கணக்கில் அசத்தல் வெற்றியைப் பதிவு செய்தது.
தென்னாப்பிரிக்காவில் உள்ள போட்செப்ஸ்ட்ரூம் நகரில் புதன்கிழமை நடைபெற்ற இரண்டாவது லீக் ஆட்டத்தில் இந்திய அணி தொடக்கம் முதலே கோல் மழை பொழியத் தொடங்கியது.
இந்திய வீரர் ஹர்மன்ப்ரீத் சிங் 2-ஆவது நிமிடத்திலேயே முதல் கோலைப் பதிவு செய்தார். பின்னர் அடுத்தடுத்து இரண்டு கோல்களை ஜுக்ராஜ் சிங் பதிவு செய்தார். இந்தியாவின் கோல் மழையை தென்னாப்பிரிக்க வீரர்களால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. அதிகபட்சமாக ஜுக்ராஜ் 3 கோல்களையும், தில்ப்ரீத் சிங், குர்சஹிப்ஜித் சிங் தலா இரண்டு கோல்களையும் பதிவு செய்தனர்.
மொத்தம் 10 கோல்களை பதிவு செய்த இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
தென்னாப்பிரிக்க அணி 44 மற்றும் 45ஆவது நிமிடத்தில் தொடர்ச்சியாக இரண்டு கோல்களை பதிவு செய்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் பிரான்ஸ் அணியுடன் மோதிய இந்திய அணி பிரான்சை வீழ்த்தி வெற்றி பெற்றது.
3 கோல்களை பதிவு செய்த புதுமுக வீரர் ஜுக்ராஜ் சிங்குக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
வரும் சனிக்கிழமை பிரான்ஸ் அணியை மீண்டும் எதிர்கொள்கிறது இந்தியா.
ஐஎஸ்எல்: சென்னையின் எஃப்சி தோல்வி
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் லீக் ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி அணி 0-5 என்ற கோல் கணக்கில் கோவா அணியிடம் சரணடைந்தது.
8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடைபெற்று வருகிறது.
புதன்கிழமை இரவு நடந்த 86-வது லீக் ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி மற்றும் எப்.சி.கோவா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 0-5 என்ற கோல் கணக்கில் சென்னை அணி, எப்.சி.கோவா அணியிடம் படுதோல்வி அடைந்தது.
இந்த ஆட்டத்தில் கோவா வீரர் ஜார்ஜ் ஒர்டிஸ் ‘ஹாட்ரிக்’ கோல் அடித்தார்.
மேலும் மாகன் சோட்டே மற்றும் நாராயண் தாஸ் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.
இதையடுத்து 5-0 என்ற கோல் கணக்கில் கோவா அணி வெற்றி பெற்றது. சென்னை அணிக்கு இது 7-வது தோல்வியாகும்.
கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டிகள் மார்ச் மாதம் வரை நீடிக்கிறது.
2ஆவது ஒரு நாள் ஆட்டத்தில் சிறப்பாக பந்துவீசிய இந்திய இளம் வீரர்
இந்தியா- மே.இ.தீவுகள் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில் நேற்று நடந்தது.
இந்த ஆட்டத்தில் இந்தியா 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா 12 ரன்கள் மட்டுமே வழங்கி 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
கர்நாடகத்தை சேர்ந்த 25 வயதான பிரசித் கிருஷ்ணா சிறப்பான பந்துவீச்சால் இந்திய அணி நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் ஆட்டத்தில் வெற்றி வாகை சூடியது.அவர் ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.
அவர் அளித்த பேட்டியில், “நான் இந்திய அணிக்காக விளையாட தொடங்கி ஓராண்டு ஆகிறது. தொடர்ந்து நிலைத்தன்மையுடன் விளையாட வேண்டும் என்பதில் முனைப்பு காட்டி வருகிறேன். எதை செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தோம். அதனால் போட்டியில் பயன் கிடைத்தது. கேப்டன் ரோகித் சர்மா ஆதரவு தந்தார்.
இந்த ஆடுகளம் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தது. அதனால் என்னால் விக்கெட்டுகளை எளிதில் வீழ்த்த முடிந்தது என்றார் பிரசித் கிருஷ்ணா.
இந்தியா-மே.இ.தீவுகளுக்கு எதிரான 3ஆவது ஒரு நாள் ஆட்டம் ஆமதாபாதில் நாளை நடைபெறவுள்ளது.
கனவு நனவானது: இளம் இந்திய வீரர்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்கள் தோனி அல்லது விராட் கோலி ஆகியோரில் ஒருவரிடம் இருந்து அறிமுகப் போட்டியில் அளிக்கப்படும் கேப்பை வாங்க விரும்பினேன் என்று மே.இ.தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் அறிமுகமான இளம் வீரர் தீபக் ஹூடா தெரிவித்தார்.
From his dreams and motivation to receiving #TeamIndia cap from @imVkohli! 🧢 👍@HoodaOnFire shares it all in this interview with @surya_14kumar after India win the 2⃣nd @Paytm #INDvWI ODI. 👌 👌 By @Moulinparikh
— BCCI (@BCCI) February 10, 2022
Watch the full interview 🎥 🔽 https://t.co/5roTjdrMAR pic.twitter.com/dBglzXqmJE
முதல் நாள் ஆட்டம் முடிந்த பிறகு மைதானத்தில் சக வீரர் சூர்யகுமார் யாதவ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து தீபக் ஹூடா கூறுகையில், ‘’முதல் ஒரு நாள் ஆட்டத்தில் அறிமுகமானது மகிழ்ச்சி அளிக்கிறது. முன்னாள் கேப்டன்கள் தோனி, கோலி ஆகியோரில் ஒருவரிடமிருந்தாவது கேப் பெற வேண்டும் என்று நினைத்தேன். இது எனது இளம் வயது கனவு. அந்தக் கனவு இன்று நனவாகியுள்ளது. இதற்காக கடுமையாக உழைத்தேன்’’ என்றார் தீபக் ஹூடா.
இந்தக் காணொலியை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil