பிரேசிலின் ரியோ டி ஜெனரியோ நகரில் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 72 நாடுகளைச் சேர்ந்த 541 வீரர், வீராங்கனைகள் இந்த உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்று உள்ளனர். இத்தொடர் மூலம் 2020-ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறலாம் என்பதால் போட்டியாளர்கள் மிகவும் சிரத்தை எடுத்து களத்தை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் இளவேனில் வளரிவான் 251.7 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இளவேனில், உலகக் கோப்பை தொடரில் இந்தப் பிரிவில் தங்கப்பதக்கம் வெல்லும் 3 வது இந்தியர் ஆவார். முன்னதாக அபூர்வி சந்தேலா, அஞ்சலி பகவட் ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றுள்ளனர்.
20 வயதே ஆன வீராங்கனை இளவேனில், சீனியர் பிரிவில் தனது முதலாவது பதக்கத்தை தட்டிச் சென்றுள்ளார். தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் பிறந்தவர் இளவேனில். முன்னதாக முனிச் நகரில் நடைபெற்ற உலகக் கோப்பைப் போட்டியின் இறுதிச்சுற்றில் 4 -வது இடம் பிடித்து பதக்கத்தை தவறவிட்ட இளவேனில் இம்முறை தங்கத்தை கைப்பற்றினார்.
சீனியர் பிரிவில் அவர் தங்கம் வெல்வது இதுதான் முதல்முறை என்றாலும், 2018-ம் ஆண்டு நடைபெற்ற ஜூனியர் உலகக் கோப்பைத் துப்பாக்கிச் சுடுதலில் அவர் ஏற்கனவே தங்கப்பதக்கம் வென்றிருக்கிறார்.
இளவேனிலுக்குப் பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் பதக்கம் வென்ற ககன் நரங், "தேசிய விளையாட்டு தினம் இனிப்பான தினமாகியுள்ளது. இளவேனில் சீனியர் பிரிவில் தன்னுடைய முதலாவது தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார்" என்று பதிவிட்டிருக்கிறார்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன்,
என்று தனது ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சைலேந்திர பாபு ஐபிஎஸ் தனது ட்விட்டரில்,
என்று வாழ்த்தியுள்ளார்.
இந்த நிலையில் கடலூர் மாவட்டம் காராமணிகுப்பத்தில் வசித்து வரும் இளவேனிலின் தாத்தா உருத்திராபதி, பாட்டி கிருஷ்ணவேணி ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "எங்கள் மகன் வாலறிவன். அவரின் மனைவி சரோஜா கன்னியாகுமரி மாவட்டம் இடையன்விளையைச் சேர்ந்தவர். இவர்கள் 2 பேரும் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். தற்போது குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இறைவன் ( 24) என்கிற மகனும் இளவேனில் (19) என்கிற மகளும் உள்ளனர்.
எங்கள் பேத்தி இளவேனில் கடலூரில் பிறந்தார். அதன் பிறகு, என் மகன் வாலறிவன் குஜராத் மாநிலத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்ததால் குடும்பத்துடன் அங்கு சென்றுள்ளனர். மேலும், எங்கள் மருமகள் சரோஜா குஜராத் மாநிலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதல்வராக இருந்து வருகிறார். பேரன் இறைவன் தற்போது ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இறைவன் துப்பாக்கிச் சுடுவதில் பயிற்சி பெற்று சிறப்பாகத் துப்பாக்கிச் சுடுவார்.
இதைப் பார்த்த எங்கள் பேத்தி இளவேனில் 7-ம் வகுப்பு படிக்கும் சமயத்தில் நானும் துப்பாக்கிச் சூடு பயிற்சியில் ஈடுபடப் போகிறேன் என ஆர்வமாகக் கூறினார். அதன்படி என் மகன் வாலறிவன் தன் மகளுக்கு ஆசையான துப்பாக்கிச் சுடும் பயிற்சிக்கு அனுப்பி வைத்தார். பின்பு, இளவேனில் துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் கடுமையாக ஈடுபட்டார். அவர் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றதால் டாக்டர் மற்றும் இன்ஜினீயரிங் படிப்புக்கான சீட் கிடைத்தது. ஆனால், அந்தத் துறை படிப்பில் கவனம் செலுத்தினால் துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் சரியான முறையில் கவனம் செலுத்த முடியாது என இளவேனில் எண்ணிக்கொண்டு அந்தப் படிப்பை தவிர்த்துவிட்டார். தற்போது உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டியில் எங்கள் பேத்தி இளவேனில் மீண்டும் தங்கம் வென்றுள்ளது எங்களுக்குப் பெரு மகிழ்ச்சி அளித்துள்ளது. மேலும் வருங்காலங்களில் இளவேனில் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை உள்ளது. இளவேனிலுக்கு நாங்கள் தங்கப் பரிசு கொடுக்க உள்ளோம்'' என்றனர்.