ஏஞ்சலோ மேத்யூஸ்: நடந்து வரும் ஆசிய கோப்பை தொடரில் களமிறங்கிய ஏஞ்சலோ மேத்யூஸ் தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி, வங்கதேசத்திடம் 137 ரன்கள் வித்தியாசத்திலும், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 91 ரன்கள் வித்தியாசத்திலும் மிக மோசமாக தோற்று வெளியேறியது.
கத்துக்குட்டி அணிகள் இல்லை என்றாலும், டாப் லெவல் அணிகள் என்று சொல்ல முடியாத வங்கதேசத்திடமும், ஆப்கனிடமும் இவ்வளவு அதிக ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது, இலங்கை முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ரசிகர்கள் மிகக் கடுமையாக இலங்கை வீரர்களை ட்ரால் செய்துவரும் நிலையில், இலங்கை கேப்டன் மேத்யூசை நீக்கிவிட்டு, மீண்டும் தினேஷ் சந்திமலை கேப்டனாக்கியுள்ளது இலங்கை கிரிக்கெட் நிர்வாகம்.
இதுகுறித்து இலங்கை கிரிக்கெட்டின் தலைமை செயல் அதிகாரி ஆஷ்லே டி சில்வாவிற்கு, ஏஞ்சலோ மேத்யூஸ் மிகுந்த அதிருப்தியுடன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், "கேப்டன் பதவியில் இருந்து என்னை நீக்கியதை கேள்விப்பட்டவுடன் நான் முதலில் ஆச்சர்யம் தான் அடைந்தேன். இந்த ஆசிய கிரிக்கெட் தொடரில், இலங்கை அணியின் செயல்பாட்டிற்கு நான் பலியாடாக ஆக்கப்பட்டிருக்கிறேன். தோல்விக்கு நான் நிச்சயம் பொறுப்பேற்கிறேன். ஆனால், இதற்கு நான் மட்டுமே காரணம் என என் மீது பழி போட்டால், அது எனக்கு இழைக்கப்பட்ட துரோகமாக உணருகிறேன். தேர்வுக் குழுவினர் மற்றும் தலைமை கோச்சின் ஆலோசனைப்படி தான் அனைத்து முடிவுகளும் எடுக்கப்பட்டது.
நான் 2017ம் ஆண்டே அனைத்து வடிவிலான கிரிக்கெட்டின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துவிட்டேன். எனது தலைமையிலான இலங்கை அணி, ஆஸ்திரேலியாவை 3-0 என ஒயிட் வாஷ் செய்தது, இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது, 2014ம் ஆண்டு ஆசிய கோப்பையை வென்றது. இருப்பினும், புதிய கேப்டனுக்கான நேரமிது என நானே எனது கேப்டன்சியை விட்டு அப்போதே விலகினேன் என்பதை நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.
ஆனால், அதற்கு பிறகு இலங்கை அணி அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் தொடர் தோல்வியைப் பெற, உபுல் தரங்கா, திசாரா பெரேரா, சமரா கபுகேதரா, லசித் மலிங்கா, தினேஷ் சந்திமல் என ஜூலை 2017ல் இருந்து, டிசம்பர் 2017க்குள் இத்தனை கேப்டன்களை நீங்கள் மாற்றினீர்கள். அதன்பிறகு, தலைமை பயிற்சியாளராக சந்திகா நியமிக்கப்பட்ட பிறகு, அவர் என்னை சந்தித்து, 2019 உலகக் கோப்பை வரை இலங்கை அணியின் கேப்டனாக தொடர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இலங்கை அணியின் நலனுக்காக நான் இதற்கு ஒப்புக் கொண்டேன்.
ஆனால், இப்போது தோல்விக்கு என்னை மட்டும் காரணமாக்கி நீக்கியுள்ளார்கள். இருப்பினும், தேர்வுக் குழுவின் இந்த முடிவிற்கு கட்டுப்படுகிறேன்" என்று மேத்யூஸ் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கடிதத்தை தொடர்ந்து, மேத்யூஸ் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.