தோனியை போல கேம் பினிஷர் ஆக வேண்டும் மற்றும் அவரை போல மின்னல் வேக கீப்பிங்கில் சாதிக்க வேண்டும் என்று தமிழக கிரிக்கெட் அணி வீரரும், தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வீரருமான ஜெகதீசன் கூறியுள்ளார்.
என். ஜெகதீசன், தமிழக கிரிக்கெட் அணியில் பேட்ஸ்மேன் மற்றும் கீப்பராக உள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளார்.
பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு ஜெகதீசன் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிவீரர்களில் ஒருவராக தேர்ந்தேடுக்கப்பட்டது மகிழ்ச்சி. கேப்டன் தோனி, மைக்கேல் ஹசி, சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட அனுபவ வீரர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது பாக்கியமாக கருதுகிறேன். அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளம் உள்ளன.
தோனியின் மின்னல் வேக ஸ்டெம்பிங் நிகழ்வுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் எனக்கு பிரமிப்பை ஏற்படுத்துகின்றன. அவர் மின்னல் வேகத்தில் கீப்பிங் செய்வதால் தான், அவரால் அதிரடியாகவும் பேட்டிங் செய்ய முடிகிறது. தோனியை போல சிறந்த கேம் பினிஷரை போல யாரையும் இதுவரை பார்க்கவில்லை. அவரைப்போல, அடுத்த சிறந்த கேம் பினிஷராக தான் வரவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் சார்பாக பங்கேற்று விளையாடி வருகிறேன். எங்கள் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின். இளம் வீரராக இருந்தபோதிலும் சிறந்த அனுபவசாலி. இளம் வீரர்களுக்கு சூழ்நிலைக்கு ஏற்றவாறு ஆலோசனை வழங்குவதில் சிறந்து விளங்குகிறார். இவரின் தலைமையிலான அணியில் விளையாடுவது சிறந்த அனுபவத்தை தருகிறது.
அஸ்வினின் அனுபவ அறிவு, எங்களைப்போன்ற இளம் வீரர்களுக்கு சிறந்த அனுபவ பாடத்தை வழங்கிவருகிறது.சூழ்நிலைக்கு ஏற்றவாறு சிந்தித்து செயல்படும் விதத்தை, இளம் வீரர்களாகிய நாங்கள் வளர்த்துக்கொண்டால், அவரைப்போன்று கிரிக்கெட் உலகில் நிறைய சாதிக்கலாம் என்று ஜெகதீசன் கூறினார்.
திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கீப்பிங் மற்றும் பேட்டிங்கில் கலக்கிவரும் ஜெகதீசன், நடப்பு டிஎன்பிஎல் தொடரில் 235 ரன்கள் எடுத்து அசத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.