Pro Kabaddi League | Tamil Thalaivas: 10-வது புரோ கபடி லீக் திருவிழா கடந்த 2ம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் களமாடி வருகின்றன.
இந்நிலையில், பாட்னாவில் உள்ள பாடலிபுத்திரம் உள்விளையாட்டு அரங்கத்தில் இரவு 8 மணிக்கு ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் - பெங்களூரு புல்ஸ் அணிகள் இடையே முதலாவது ஆட்டம் நடைபெற்றது. இரு அணிகளும் ஆரம்பத்தில் இருந்தே போட்டி போட்டுக்கொண்டு புள்ளிகள் எடுத்து விளையாடியது. ஆட்ட நேர முடிவில், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் - பெங்களூரு புல்ஸ் ஆகிய இரு அணிகளும் சம அளவில் தலா 28 புள்ளிகள் பெற்றிருந்ததால், இந்த ஆட்டம் வெற்றி தோல்வி இன்றி டிராவில் முடிந்தது.
தமிழ் தலைவாஸ் vs யு மும்பா
நடப்பு புரோ கபடி தொடரில் தமிழ் தலைவாஸ் அணி இதுவரை விளையாடியுள்ள 15 போட்டிகளில் 6ல் வெற்றி, 9ல் தோல்வி என 35 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 10வது இடத்தில் உள்ளது.
தமிழ் தலைவாஸ் அணி பிளே-ஆஃப்க்கு முன்னேற முதல் 6 இடங்களுக்குள் வர வேண்டும். அதற்கு தமிழ் தலைவாஸ் அணி இன்னும் இரண்டு போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற வேண்டும். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
தமிழ் தலைவாஸ் அணி அதன் முந்தைய இரண்டு ஆட்டங்களில் அபாரமாக வெற்றி பெற்றுள்ளது. பெங்களூரு புல்ஸ் அணியை 28-45 என்ற கணக்கிலும், தெலுங்கு டைட்டன்ஸ் அணியை 29-54 என்ற கணக்கிலும் வீழ்த்தி அசத்தியது குறிப்பிடத்தது.
பாட்னாவில் உள்ள பாடலிபுத்திரம் உள்விளையாட்டு அரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு தமிழ் தலைவாஸ் அணிக்கும் யு மும்பா அணிக்கும் இடையே 2வது போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி ஆரம்பத்தில் இருந்தே சிறப்பாக விளையாடியது. தமிழ் தலைவாஸ் அணி ஆட்டத்தின் தொடக்கம் முதலே புள்ளிகள் எடுப்பதில் ஆதிக்கம் செலுத்தி வந்தது. ஆட்ட நேர முடிவில் தமிழ் தலைவாஸ் அணி 50 புள்ளிகளைப் பெற்றிருந்தது. யு மும்பா அணி 34 புள்ளிகளைப் பெற்றிருந்தது. இதன் மூலம், 16 புள்ளிகளைப் பெற்றிருந்த தமிழ் தலைவாஸ் அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், தமிழ் தலைவாஸ் அணி இந்த புரோ கபடி சீசனில், அணிகளின் புள்ளிகள் தரவரிசைப் பட்டியலில் 7வது இடத்துக்கு முன்னேறியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“