/indian-express-tamil/media/media_files/2025/06/28/jamaican-sprinter-kishane-thompson-fastest-time-100m-in-9-75-seconds-next-usain-bolt-tamil-news-2025-06-28-18-55-34.jpg)
ஜமைக்கா சாம்பியன்ஷிப்பில் ஆடவருக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில், பந்தய தூரத்தை 9.75 வினாடிகளில் கடந்து தங்கம் வென்று அசத்தியுள்ளார். இதன்மூலம் ஏராளமான சாதனைகளை அவர் படைத்துள்ளார்.
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகிற செப்டம்பர் 13 முதல் 21, 2025 வரை நடைபெற உள்ளது. இதில் சுமார் 200 நாடுகளைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்தப் போட்டி தொடங்க இன்னும் 75 நாட்கள் உள்ள நிலையில், ஜமைக்கா வீரர் கிஷேன் தாம்சன், நேற்று வெள்ளிக்கிழமை கிங்ஸ்டனில் நடந்த ஜமைக்கா சாம்பியன்ஷிப்பில் ஆடவருக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில், பந்தய தூரத்தை 9.75 வினாடிகளில் கடந்து தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும்
இதன் மூலம் 2024 ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற கிஷேன் தாம்சன், தலைசிறந்த 100 மீட்டர் ஓட்டப்பந்தய வீரர்கள் பட்டியலில் 6-வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். மேலும், 2015-க்குப் பிறகு வேகமாக 100 மீட்டர் பந்தய தூரத்தை கடந்த முதல் வீரர் என்கிற சாதனையையும் அவர் புரிந்துள்ளார்.
இதுபற்றி 23 வயதான கிஷேன் தாம்சன் பேசுகையில், "அரையிறுதியில் நான் 9.80 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்தேன். அதனால், இறுதிப்போட்டியில் 9.75 வினாடிகள் ஓடியது எதிர்பாராத விதமாக நடக்கவில்லை. அதுபற்றி நான் என்னை ஒருபோதும் ஆச்சரியப்படுத்தப் போவதில்லை. ஏனென்றால் நான் எவ்வளவு திறமையானவன் என்பது எனக்குத் தெரியும்.
நான் மிகவும் தன்னம்பிக்கையுடன் இருக்கிறேன்; நான் உலக சாதனையை முறியடித்தாலும், அது எனக்கு ஆச்சரியமாக இருக்காது, ஏனென்றால் நான் அந்த தன்னம்பிக்கையுடன் இருக்கிறேன், மேலும் எனது எல்லா இலக்குகளையும் பாராட்டுகளையும் அடைய நான் உழைத்து வருகிறேன்." என்று அவர் கூறியுள்ளார்.
ஒலிம்பிக்கில் மூன்று முறை தங்கம் வென்ற உசைன் போல்ட், 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பந்தய தூரத்தை 9.58 வினாடிகளில் கடந்ததே தற்போது வரை சாதனையாக இருந்து வருகிறது. அவரது சாதனையை முறியடித்து, கிஷேன் தாம்சன் அடுத்த உசைன் போல்ட் ஆக உருவெடுப்பார் என தடகள ஆர்வலர்கள் கருதுகிறார்கள்.
ஜமைக்கா சாம்பியன்ஷிப்பில், கடந்த மூன்று உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் இறுதிப் போட்டியாளரான ஒப்லிக் செவில், பந்தய தூரத்தை 9.83 வினாடியில் கடந்து இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இது அவரது தனிப்பட்ட சிறந்த ஓட்டத்தை விட 0.02 குறைவானது. 2024 டயமண்ட் லீக் சாம்பியனான அக்கீம் பிளேக், 9.88 வினாடிகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். இது அவரது தனிப்பட்ட சிறந்த ஓட்டமாக பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.