இந்தியாவுக்கு எதிரான போட்டி அட்டவணையை விமர்சிக்கும் ஆண்டர்சன்! உண்மையில் யாருக்கு அதிக நெருக்கடி?

இந்தியா தான் இங்கிலாந்து செல்கிறதே தவிர, இங்கிலாந்து இந்தியா வரவில்லை

By: Published: June 12, 2018, 7:25:08 PM

ஆசைத் தம்பி

வரும் ஜூலை மாதம் இங்கிலாந்து செல்லும் இந்திய அணி, அங்கு மூன்று ஒருநாள், மூன்று டி20, மற்றும் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.முதலில் டி20 தொடரும், அதன்பின் ஒருநாள் தொடரும், கடைசியாக டெஸ்ட் தொடரும் நடைபெற இருக்கிறது. டி20 தொடர் ஜுலை 3ம் தேதி தொடங்குகிறது. 6ம் தேதி 2-வது ஆட்டமும், 8ம் தேதி 3-வது மற்றும் கடைசி போட்டியும் நடக்கிறது.

ஒருநாள் தொடர் ஜூலை 12ல் தேதி தொடங்குகிறது. 2-வது ஆட்டம் 14ம் தேதியும், 3-வது ஆட்டம் 17ம் தேதியும் நடக்கிறது. அதன்பின் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 1ம் தேதி தொடங்குகிறது. 9ம் தேதி 2-வது டெஸ்டும், 18ம் தேதி 3-வது டெஸ்டும், 30ம் தேதி நான்காவது டெஸ்ட் போட்டியும், ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி செப்டம்பர் 9ம் தேதியும் தொடங்குகிறது.

இந்த ஐந்து டெஸ்ட் போட்டிகளும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் செப்டம்பர் 11ம் தேதி வரைக்குள் 42 நாட்களில் நடக்கிறது. பெரிதாக எந்த இடைவெளியும் இன்றி மிகவும் குறுகிய காலக் கட்டத்திற்குள் நடப்பது போன்று போட்டி அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளது. இதனால் தொடர் முழுவதும் முழு உடற் தகுதியுடன் விளையாட வேண்டும் என்பதற்காக இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ ஆண்டர்சனுக்கு இப்போதே 6 வாரங்கள் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

இதனால் அவரால், தொடருக்கு தயாராகும் வகையில் கவுன்ட்டி போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், 42 நாட்களுக்குள் ஐந்து டெஸ்ட் என்பது கேலிக்கூத்தானது என்று ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வேதனையுடன் அளித்துள்ள பேட்டியில், “எனக்கு தோள்பட்டையில் கடந்த 2 ஆண்டுகளாகவே அடிக்கடி வலி ஏற்பட்டு வருகிறது. அவ்வப்போது சிகிச்சை எடுத்து நான் விளையாடி வந்தேன். ஆனால், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அப்படி இருக்க முடியாது என்பதால், நீண்ட இடைவெளியில் சிகிச்சைக்காக தயாராகி இருக்கிறேன். எனக்கு போதுமான ஓய்வும், உடற்பயிற்சியும் இருந்தால், நான் நன்றாகத் தேறிவிடுவேன்.

இந்தியாவுடனான இங்கிலாந்து அணி மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முட்டாள்தனமாக தயாரிக்கப்பட்டுள்ளது. 6 வாரங்களில் 5 டெஸ்ட் போட்டிகள் நடத்துமாறு பட்டியல் அமைக்கப்பட்டுள்ளது கேலிக்குரியதாகவும், பொருத்தமற்றதாகவும் இருக்கிறது.

இதுபோன்ற பட்டியல், வீரர்களுக்குக் கூடுதல் அழுத்தம் கொடுப்பதாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் இருக்கும். இதுபோன்ற குழப்பமான பட்டியலால், நான் லான்காஷையர் அணிக்காகக் விளையாட முடியாமல் போகலாம். இந்த போட்டி அட்டவணையை அமைத்தவர்களை நினைத்து நான் வெட்கப்படுகிறேன். 6 வாரங்களில் 5 டெஸ்ட் போட்டிகள் விளையாட வேண்டும் என்பது இங்கிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு மிகவும் சவாலானதாக இருக்கும், நெருக்கடியாகவும் இருக்கும்”.

இது குறித்து இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் ட்ரெவோர் பேலிஸ் கூறுகையில், “இந்தியாவுக்கு எதிராக ஆகஸ்ட் 1ம் தேதியில் இருந்து 6 வாரங்களில் 5 டெஸ்ட் போட்டிகளில் நாங்கள் விளையாட வேண்டும் என்பது உண்மையில் சவாலானதாகும். பந்துவீச்சாளர்களுக்கு மிகவும் நெருக்கடியாகவும் இருக்கும். தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தில் இருந்து முழுமையாக மீண்டு வர வேண்டும் என்பதற்காக ஆன்டர்சனுக்கு 6 வாரங்கள் ஓய்வு அளித்துள்ளோம். இந்தியாவுடன் டெஸ்ட் தொடருக்கு முன்பாக அவர் அணிக்குத் திரும்புவார். இந்தக் காயத்தால், வோர்செஸ்டர்ஷையர், ஹேம்ஷையர் அணிக்கு எதிரான போட்டியில் கூட ஆன்டர்சனால் விளையாட முடியாது’’ எனத் தெரிவித்துள்ளார்.

ஏன் இந்த புலம்பல்?

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், 6 வாரங்களில் 5 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து விளையாடுவது என்பது உண்மையில் எல்லா பவுலர்களுக்கும் சவாலான விஷயமாகும். ஏனெனில், உடல் ரீதியான சோர்வு என்பது அடுத்தக்கட்ட விஷயம்… ஆனால், இங்கு மனரீதியாக வீரர்கள் நிச்சயம் அழுத்தத்திற்கு ஆளாவார்கள். தொடர்ச்சியாக ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயம் பவுலர்களுக்கு ஏற்படும். இது பொதுவான கருத்து தான்.

ஆனால், இங்கே ஜேமி விஷயத்தைப் பொறுத்தவரை, கொஞ்சம் சிக்கலான தொடர் தான் இது. காரணம், டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணியின் மிக முக்கிய வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன். அதுவும் சொந்த மண்ணில், அவரை பந்துவீச்சு உலகின் எந்த பேட்ஸ்மேனும் எதிர்கொள்வது மிகவும் கடினம்.

அதைத் தான் ஆஸ்திரேலியே முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‘ஜேம்ஸ் ஆண்டர்சன் இப்போது இருக்கும் ஃபார்மை வைத்து பார்க்கும் பொழுது, இந்திய கேப்டன் விராட் கோலி அவரை சந்திக்க மிகவும் சிரமப்படுவார்’ என்று கணித்துள்ளார்.

அந்தளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த பவுலர் ஆண்டர்சன். ஆனால், தொடர்ச்சியாக பெரிதாக இடைவெளி இன்றி ஐந்து டெஸ்ட் போட்டிகளில் அவர் ஆட வேண்டி இருப்பதாலும், அவருக்கும் காயம் இருப்பதாலும், இங்கிலாந்து நிர்வாகம் ஆண்டர்சனை முழுவதும் ரெஸ்டில் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளது. இதனால், அவரால், இந்திய தொடருக்கு தயாராகும் விதத்தில் கவுண்டி போட்டிகளில் விளையாட முடியாமல் போகிறது. எனவே, காயம் அவருக்கு குணமாகலாம். ஆனால், இப்போது இருக்கும் அதே ஃபார்மோடு, அவர் ஆகஸ்ட் 1ம் தேதியன்று களமிறங்க வேண்டும். இது மிக மிக நெருக்கடியான விஷயமாகும். ஏனெனில், சுத்தமாக பயிற்சி இல்லாமல், அதே வலிமையான மனநிலையோடு, முதல் டெஸ்ட் போட்டியன்று களமிறங்க வேண்டும் என்றால், யோசித்துப் பாருங்கள்!.இதனால் தான், ‘இந்த டெஸ்ட் தொடரை தயாரித்தவர்களை நினைத்து நான் வெட்கப்படுகிறேன்’ என்ற கடினமான வார்த்தையை ஆண்டர்சன் பயன்படுத்தியுள்ளார்.

அதேசமயம், இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் இதுபோன்ற அட்டவணை நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதை நாம் மறுக்க முடியாது. குறிப்பாக, இந்தியா தான் இங்கிலாந்து செல்கிறதே தவிர, இங்கிலாந்து இந்தியா வரவில்லை. ஆகையால், உண்மையாக கூடுதல் நெருக்கடி யாருக்கு என்று பார்த்தால் அது இந்திய பவுலர்களுக்கு தான்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Sports News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:James anderson about india vs england test series schedule

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

JUST NOW
X