India vs England, 5th Test, Dharamsala | James Anderson: இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள தரம்சாலாவில் கடந்த வியாழக்கிழமை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது.
இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 218 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் சாக் கிராலி 79 ரன்கள் எடுத்தார். மிகச்சிறப்பாக பந்துவீசிய இந்தியா தரப்பில் குல்தீப் 5 விக்கெட்டுகளும், அஸ்வின் 4 விக்கெட்டுகளும், ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து முதல் இன்னிங்சில் விளையாடிய இந்தியா 477 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. இந்திய அணியில் சதம் அடித்து மிரட்டிய ரோகித் சர்மா 103 ரன்களும், சுப்மன் கில் 110 ரன்களும், அரைசதம் அடித்த தேவ்தத் பாடிக்கல் 65 ரன்களும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 57 ரன்களும், சர்பராஸ் கான் 56 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக சோயிப் பஷீர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்திய மண்ணில் சாதனை படைத்த ஆண்டர்சன்
இந்நிலையில், இந்தப் போட்டியில் விளையாடி வரும் இங்கிலாந்தும் அணியின் மூத்த வேகப்பந்துவீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன், டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் 700 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.
இந்த போட்டிக்கு முன்னதாக ஜேம்ஸ் ஆண்டர்சன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 698 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார். நேற்றைய நாள் ஆட்டத்தின் போது அவர் சுப்மன் கில் விக்கெட்டை வீழ்த்தினார். இதனையடுத்து, இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியதும் குல்தீப் யாதவ் விக்கெட்டை கைப்பற்றினார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனைப் படைத்தார்.
சர்வதேச டெஸ்ட் அரங்கில் முத்தையா முரளீதரன், ஷேன் வார்னே ஆகியோருக்குப் பிறகு 700 விக்கெட்டுகள் வீழ்த்திய 3வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும், 700 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்கிற சாதனையையும், 700 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இங்கிலாந்து வீரர் என்கிற சாதனையும் அவர் படைத்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் முத்தையா முரளீதரன் 800 விக்கெட்டுகள் வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார். வார்னே 708 விக்கெட்டுகள் கைப்பற்றி 2-வது இடத்தில் உள்ளார். 619 விக்கெட்டுகளுடன் இந்தியாவின் அனில் கும்ளே 3வது இடத்தில் உள்ளார்.
ஜேம்ஸ் ஆண்டர்சன் 21 வருடங்களுக்கு முன் 2003ல் ஜிம்பாப்வே அணிக்கெதிராக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அறிமுகம் ஆனார். அவர் உள்நாட்டில் 434 விக்கெட்டுகளையும், வெளிநாடுகளில் 266 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். ஆண்டர்சன் ஆஷஸ் போட்டிகளில் 117 விக்கெட்டுகளை எடுத்துள்ளார், அதில் 68 விக்கெட்டுகளை ஆஸ்திரேலியாவில் எடுத்துள்ளார்.
இதுவரை 187 டெஸ்ட் (சராசரி 26.52) போட்டிகளில் விளையாடியிருக்கும் ஆண்டர்சன் அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 2-வது வீரர் என்கிற பெருமையும் பெற்றுள்ளார். அவர் 2002 மற்றும் 2015 க்கு இடையில் இங்கிலாந்துக்காக 194 ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 269 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அதே நேரத்தில் 18 டி20 சர்வதேசப் போட்டிகளில் 19 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: James Anderson becomes first pacer to get 700 Test wickets
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.