Shubman Gill | James Anderson | India Vs England: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது முடிவடைந்துள்ளது. இந்த தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில், தரம்சாலாவில் இரு அணிகளுக்கும் இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் போது இந்திய வீரர் சுப்மன் கில்லிடம் பேசியதை இங்கிலாந்தின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தப் போட்டியின் மூன்றாம் நாளில், இங்கிலாந்தின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் 700 டெஸ்ட் விக்கெட்டுகளை எட்டிய முதல் வேகப்பந்து வீச்சாளர் ஆனார். இந்தியாவின் முதல் இன்னிங்ஸின் போது அவரது கையில் ஆட்டமிழந்த இருவரில் ஒருவரான கில், சதத்தை அடித்திருந்தார்.
ஆனால், கில் தனது சதத்தை எட்டுவதற்கு சற்று முன்பு, ஜேம்ஸ் ஆண்டர்சனுடன் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார். இது குறித்து அன்றைய நாள் முடிவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கில்-லிடம் கேட்கப்பட்டபோது அவர், "களத்தில் நாங்கள் இருவரும் பரிமாறிக்கொண்ட கருத்து அவரவர் தனிப்பட்ட முறையில் வைத்திருப்பது நல்லது என்று நான் நினைக்கிறேன்." என்று கூறினார்.
இந்த நிலையில், 41 வயதான ஜேம்ஸ் ஆண்டர்சன் கில் உடன் களத்தில் பரிமாறிக்கொண்ட வார்த்தைகளை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் பி.பி.சி பாட்காஸ்டில் பேசுகையில், "நான் அவரிடம் (கில்), 'இந்தியாவுக்கு வெளியே நீங்கள் ஏதேனும் ரன்கள் எடுக்கிறீர்களா?' என்பது சொன்னேன். அதற்கு அவரோ, 'ஓய்வு பெறுவதற்கான நேரம் வந்துவிட்டது' என்று கூறினார். இரண்டு பந்துகளுக்குப் பிறகு, நான் அவரை ஆட்டமிழக்க செய்தேன்," என்று கூறினார்.
இதுவரை வெளிநாட்டில் 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கில் ஒரு சதம் மற்றும் இரண்டு அரைசதங்களுடன் 32.70 சராசரியுடன் 556 ரன்கள் எடுத்துள்ளார். அவரது சிறந்த ஸ்கோர் 110. இந்தியாவில் கில்லின் சாதனை மிகவும் சிறப்பாக உள்ளது, 13 டெஸ்டில் 41.38 சராசரியில் 869 ரன்கள் எடுத்தார், 23 இன்னிங்ஸில் மூன்று சதங்கள் மற்றும் நான்கு அரைசதங்கள். அவரது சிறந்த ஸ்கோர் 128 ஆகும்.
இங்கிலாந்து எதிரான தொடரில் கில் 9 இன்னிங்ஸ்களில் 56.5 சராசரியுடன் இரண்டு சதங்கள் மற்றும் இரண்டு அரைசதங்களுடன் 452 ரன்கள் எடுத்து, இரண்டாவது அதிக ரன்களை எடுத்த வீரர் ஆனார். அவரது சிறந்த ஸ்கோர் 110 ஆகும். மறுபுறம், ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது 700வது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தி, உலக டெஸ்ட் அரங்கில் சாதனை படைத்து அசத்தினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“