இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன். முன்னணி வேகப்பந்து வீச்சாளரான அவர் கடந்த மாதம் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
35 வயதான ஜேம்ஸ் ஆண்டர்சன், வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரின்போது 700 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக 700 விக்கெட்டுகள் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்தார். மேலும், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முத்தையா முரளீதரன் (800), வார்னே (708) ஆகியோருக்கு அடுத்தப்படியாக இந்த சாதனையை நிகழ்த்திய வீரர் என்கிற பெருமையையும் அவர் பெற்றார்.
இந்நிலையில், இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலியின் பேட்டிங் திறனை வெகுவாகப் பாராட்டி பேசியுள்ள இங்கிலாந்து ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன், வெள்ளை பந்து கிரிக்கெட் வரலாற்றில் சேஸிங் செய்யும் போது விராட் கோலியை விட சிறந்த பேட்ஸ்மேன் யாரும் இல்லை என்று கூறி புகழாரம் சூட்டியுள்ளார்.
இது பற்றி அவர் பேசுகையில், "சேசிங் செய்வதில் விராட் கோலியின் புள்ளி விவரங்கள் அற்புதமாக இருக்கிறது. கிரிக்கெட் வரலாற்றில் சேசிங் செய்யும்போது அவரை விட சிறந்த பேட்ஸ்மேன் இருந்ததாக எனக்குத் தெரியவில்லை. குறிப்பாக 50 ஓவர் பார்மட்டில் சேசிங் செய்யும்போது அவர் அடித்துள்ள சதங்கள் அபாரமானது. அவர் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டின் சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் பினிஷர்" என்று ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியுள்ளார்.
கோலி - ஆண்டர்சன் இருவரும் டெஸ்டில் 36 இன்னிங்ஸ்களில் ஒருவரையொருவர் எதிர்கொண்டுள்ளனர். ஆண்டர்சனுக்கு எதிராக கோலி 43.57 சராசரியில் 305 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் 7 முறை ஆட்டமிழந்துள்ளார். ஒருநாள் போட்டிகளிலும் கோலியை விட ஆண்டர்சன் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அவர் ஆறு போட்டிகளில் கோலிக்கு பந்துவீசியிருக்கிறார். அதில், கோலி 8.66 சராசரியில் 26 ரன்கள் எடுத்துள்ளார். அதே நேரத்தில் மூன்று முறை ஆட்டமிழந்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“