'பும்ரா ஃபெராரி கார் போன்றவர், டொயோட்டா அல்ல': இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்த முன்னாள் பாக்,. கேப்டன்
Bumrah's injury, former Pakistan captain Salman Butt issued warning to the Indian team Tamil News: வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் காயம் குறித்து பேசியுள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட், இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
8-வது டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வருகிற அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலிய மண்ணில் நடக்கிறது. இதற்காக இந்திய அணி தீவிரமாக தயாராகி வருகிறது. இந்த தொடருக்கு முன்னதாக, இந்தியா அதன் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்ரிக்க அணிகளுடன் இருதரப்பு தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 தொடரை இந்தியா 2-1 என்ற கண்ணக்கில் வென்ற நிலையில், தற்போது தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 தொடரில் விளையாடி வருகிறது.
Advertisment
இந்த தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது. இந்த தொடருக்குப் பின் இந்தியா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இத்தொடர் அக்டோபர் 6 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இத்தொடருக்கான இந்திய அணியை மூத்த வீரர் ஷிகர் தவான் வழிநடத்துகிறார்.
பும்ரா விலகல்
இந்நிலையில், உலக கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் இடம்பிடித்திருந்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, காயம் காரணமாக விலகவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. முதுகு எலும்பு முறிவு காயத்தால் அவதிப்பட்டு வரும் அவருக்கு 4-6 மாதங்களுக்கு ஓய்வு தேவை என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டு டி20 போட்டிகளில் விளையாடிய பும்ரா, தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரின் தொடக்க ஆட்டத்தில் அணியுடன் திருவனந்தபுரத்திற்கு செல்லவில்லை. நிர்வாகத்தில் இருந்து போதுமான ஓய்வு அளிக்கப்பட்ட போதிலும், பும்ராவின் காயம் அவரது பணிச்சுமையைக் கையாள்வதைப் பொருத்தவரை பெரிய எதிர்மறையாக இருந்து வருகிறது.
பும்ரா சில ஆண்டுகளுக்கு முன்பு இதே போன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டார். இதனால் அவர் கணிசமான காலத்திற்கு அணியில் இடம் பெறாமல் இருந்தார். தற்போது அவர் மீண்டும் அதே பிரச்னையை எதிர்கொண்டு, டி20 உலககோப்பை தொடரில் இருந்து விலக இருப்பது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் கருத்து
இந்நிலையில், வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் காயம் குறித்து பேசியுள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட், இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் அவர், பும்ராவை நியாயமாக பயன்படுத்துமாறும், சரியான நேரத்தில் ஓய்வு கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். அதோடு, பும்ராவை இரண்டு சொகுசு கார்களுடன் ஒப்பிட்டு, அவர் 'வார இறுதி கார்' என்றும் அது தினமும் சாலைகளில் கொண்டு செல்லக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
சல்மான் பட் தனது யூடியூப் சேனலில் பகிரப்பட்ட வீடியோவில், "பும்ராவின் செயல், அது அவரது முதுகில் பெரும் சுமையை ஏற்றுகிறது. அவர் மூன்று வடிவங்களிலும் விளையாடுகிறார். பின்னர் ஐபிஎல்லும் உள்ளது. இது ஒரு நீண்ட போட்டியாகும். எனவே, இந்தியா அவரைத் தேர்ந்தெடுத்து தேர்வு செய்ய வேண்டும்.
பும்ரா ஒரு ஃபெராரி அல்லது ஆஸ்டன் மார்ட்டின் அல்லது லம்போர்கினி போன்ற விலையுயர்ந்த சொகுசு கார் போன்றவர். இவை வேகம் கொண்ட சொகுசு கார்கள். இவை 'வார இறுதி கார்கள்' என்று அழைக்கப்படுகின்றன. இவை நீங்கள் அன்றாட பயன்படுத்தும் டொயோட்டா கொரோலா கார் அல்ல. அந்த கார்களை நீங்கள் எல்லா இடங்களிலும் ஓட்டலாம். யார் வேண்டுமானாலும் அதைக் கீறிவிடலாம், அது ஒரு வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது. வார இறுதி கார்கள் வார இறுதி நாட்களில் மட்டுமே இயக்கப்பட வேண்டும்.
பும்ரா போன்ற ஒரு உண்மையான வேகப்பந்து வீச்சாளர் கவனமாக நிர்வகிக்கப்பட வேண்டும். எல்லா போட்டியிலும் அவரை விளையாட வைக்க வேண்டாம்.
பும்ரா சிறந்த தரம் வாய்ந்த பந்துவீச்சாளர். அவர் அனுபவம் வாய்ந்தவர், மேட்ச் வின்னர், மிடில் மற்றும் டெத் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசக்கூடியவர், ஆரம்பத்திலேயே அழுத்தம் கொடுப்பவர். அவர் மிகவும் பல்துறை பந்துவீச்சாளர் மற்றும் அவரது வெற்றிடம் நிச்சயமாக உணரப்படும்.
ஆனால் மீண்டும், இந்தச் சூழலை இந்தியா எப்படிப் பார்க்கிறது என்பதைப் பொறுத்தது. இளைஞர்கள் முன்னேற இது ஒரு சிறந்த வாய்ப்பு. பும்ரா மீண்டும் உடற்தகுதி பெறும்போது, அவர் பிளேயிங் லெவன் அணிக்கு திரும்புவார். ஆனால் அதுவரை பும்ரா யார் என்பதை பார்க்க வேண்டும்,” என்று அவர் கூறியுள்ளார்.