worldcup 2023 | india-vs-afghanistan | jasprit-bumrah: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று டெல்லியில் நடந்த 9வது லீக் ஆட்டத்தில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 8 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் எடுத்தது.
274 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய இந்தியா 35வது ஓவரில் எட்டிப்பிடித்தது. இந்திய அணியில் அதிரடியாக விளையாடிய கேப்டன் ரோகித் 84 பந்துகளில் 16 பவுண்டரிகள் 5 சிக்ஸர்களுடன் 131 ரன்கள் குவித்தார். தொடக்க வீரர் இஷான் கிஷன் 47 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசி வரை களத்தில் இருந்த விராட் கோலி (55) மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் (25) ஜோடி அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.
பும்ரா வித்தியாச கொண்டாட்டம்
இந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் இப்ராஹிம் சத்ரான் இந்திய வேகப்பந்து வீச்சாளரான பும்ரா பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் ராகுலிடம் கேட்ச் முறையில் அவுட் ஆனார். விக்கெட் வீழ்த்தியதும் மகிழ்ச்சியடைந்த பும்ரா அதனை பிரபல இங்கிலாந்து கால்பந்து வீரர் மார்கஸ் ராஷ்ஃபோர்ட் போல கொண்டாடினார்.
ராஷ்ஃபோர்ட் இத்தாலிக்கு எதிரான யூரோ 2020 இறுதிப் போட்டியில் பெனால்டியைத் தவறவிட்ட பிறகு, அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். மேலும், இனவெறித் தாக்குதலுக்கு ஆளானார். அதிலிருந்து தான் மீண்டுள்ளதையும், தனது மனநலம் மற்றும் தன்னம்பிக்கையை மீட்டெடுத்ததையும் வெளியுலகிற்கு அறிவிக்க அவர் கோல்களை அடித்த பிறகு அவ்வாறான வித்தியாச கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.
ராஷ்ஃபோர்ட்டை போலவே பும்ராவும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு இருந்தார். அவரை சமூக ஊடகங்களில் ட்ரோல் செய்தனர். 6 ஆண்டுகளுக்கு முன்பு, 2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் ஃபகர் ஜமானின் விக்கெட்டைப் வீழ்த்திய போது பும்ரா லயன் நோ-பால் வீசி இருந்தார். அந்த புகைப்படத்தை எடுத்துக்கொண்ட ஜெய்ப்பூர் போக்குவரத்து போலீஸார் சிக்கனலில் வெள்ளை கோட்டை தாண்ட கூடாது என்பதற்கான புகைப்படமாக விளம்பரம் செய்தனர். இது அவரை கேலி செய்யும் வகையில் இருந்தது.
அந்த விளம்பரத்தில் “கோட்டை கடக்காதீர்கள். இது விலை உயர்ந்ததாக இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியும்." என்று குறிப்பிட்டு இருந்தது ஜெய்ப்பூர் போக்குவரத்து போலீஸ். அந்த புகைப்படத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பும்ரா தனது பதிவில், "நல்லது ஜெய்ப்பூர் போக்குவரத்து போலீஸ். நாட்டிற்காக உங்களால் முடிந்ததைச் செய்த பிறகு நீங்கள் எவ்வளவு மரியாதை பெறுகிறீர்கள் என்பதை இது காட்டுகிறது." என்று பதிவிட்டார்.
11 மாதங்களாக அவர் இந்திய அணியில் இல்லாத நேரத்தில், சமூக ஊடகங்களில் மீம்ஸ்கள் நிறைந்திருந்தன. அவர் ஐ.பி.எல்-லில் மட்டுமே விளையாட விரும்புகிறார் என்று கேலி செய்தார்கள். இந்த குழப்பங்களுக்கு மத்தியில் உலகக் கோப்பை தொடரில் விளையாடி வரும் பும்ரா, நேற்று மற்ற இந்திய பந்துவீச்சாளர்கள் அதிக ரன்களை விட்டுக்கொடுத்தபோதும், அவர்களின் லயனை சரியாக வீச போராடும்போதும், பும்ரா ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்களை அவசரப்படுத்தியது மட்டுமல்லாமல், தனது தரமான துல்லிய வேகத்தில் அவர்களை மிரட்டினார்.
பும்ரா ஓமராசாய் மற்றும் ஹஸ்மத்துல்லா ஷாஹித் ஆகியோர் ஜோடி சேர்ந்து 121 ரன்கள் குவித்த போது, அந்த ஜோடியை உடைத்து அசத்தினார். மேலும் தனது ஸ்கோர்போர்டை கட்டுக்குள் வைத்திருந்தார். பின்னர் அவர் முகமது நபி (19), நஜிபுல்லா சத்ரான் (2), மற்றும் ரஷித் கான் (16) ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி, ஆப்கானிஸ்தானின் கனவை 300 ரன்களுக்குள் சுருட்டினார். 10 ஓவர்கள் வீசிய அவர் 39 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“