9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் வருகிற பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Jasprit Bumrah out of Champions Trophy squad, Varun Chakravarthy in at Yashasvi Jaiswal’s expense
பிப்ரவரி 19 ஆம் தேதி கராச்சியில் தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை சந்திக்கிறது. இதில் இந்திய அணிக்குரிய ஆட்டங்களும், முதலாவது அரையிறுதியும் துபாயில் நடைபெற உள்ளன. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த தொடரின் முக்கியமான இந்தியா- பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் பிப்ரவரி 23 ஆம் தேதி அமீரகத்தில் உள்ள துபாயில் நடக்க உள்ளது. இந்தப் போட்டிக்கு முன் பிப்ரவரி 20 ஆம் தேதி வங்கதேசத்தையும், மார்ச் 2 ஆம் தேதி நியூசிலாந்தையும் இந்திய அணி எதிர்கொள்கிறது.
இந்த தொடரில் பங்கேற்க உள்ள அனைத்து அணிகளும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டன. இருப்பினும் அந்த அணியில் ஏதாவது மாற்றங்கள் இருந்தால் வருகிற 11-ஆம் தேதிக்குள் மாற்றி அமைத்துக் கொள்ளலாம் என்று ஐ.சி.சி. கெடு விதித்திருக்கிறது. இதன் காரணமாக அனைத்து கிரிக்கெட் வாரியங்களும் தங்களது அணியில் காயமடைந்துள்ள வீரர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களை தேர்வு செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
இந்த தொடருக்கான இந்திய அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இடம் பிடித்திருந்தாலும், அவர் இந்த தொடரில் விளையாடுவாரா? என்பதில் சந்தேகம் நிலவியது. கடந்த ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் 5-வது போட்டியின்போது முதுகு பகுதியில் பும்ரா காயம் அடைந்தார். இதனால் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக தேர்வு செய்யப்பட்டிருந்த அவர் நீக்கப்பட்டார். இத்தகைய சூழலில், அவர் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவாரா? என்பதில் குழப்பம் நீடித்தது.
இந்நிலையில், சாம்பியன்ஷிப் டிராபியில் இருந்து காயம் காரணமாக பும்ரா விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக ஹர்சித் ராணா இந்தியா அணியில் இடம் பிடித்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரானடி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் பும்ரா விளையாடாமல் இருந்த சூழலில், ஐ.சி.சி சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட அணியில் இருந்தும் பும்ரா விலகி உள்ளார். அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணாவை 15 பேர் கொண்ட அணியில் தேசிய தேர்வுக்குழு சேர்த்துள்ளது.
இதேபோல், மாயாஜால சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தியும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அறிமுகமான அவர் தனது சிறப்பான பவுலிங்கை வெளிப்படுத்தி வருகிறார். இதனால், அவர் தொடக்க பேட்ஸ்மேன் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு பதிலாக சேர்க்கப்பட்டுள்ளார். யஷஸ்வி ஜெய்ஸ்வால், வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் மற்றும் ஆல்-ரவுண்டர் ஷிவம் துபே ஆகியோர் பயணிக்காத மாற்று வீரர்களாக உள்ளனர்.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி காயம் அடைந்த நிலையில், ஜெய்ஸ்வால் டாப் ஆடரில் ஆடினார். கோலிக்குப் பதில் ஷ்ரேயாஸ் ஐயர் ஆடினார். தற்போது அவர் 15 பேர்கொண்ட அணியில் இருந்து கழற்றி விடப்பட்டுள்ளார்.
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல் ராகுல், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது. ஷமி, அர்ஷ்தீப் சிங், ரவீந்திர ஜடேஜா, வருண் சகரவர்த்தி.
பயணம் செய்யாத மாற்று வீரர்கள்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், முகமது சிராஜ் மற்றும் சிவம் துபே.