India vs England, 5th Test, Dharamsala | Jasprit Bumrah: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரில் முதல் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில், 3-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றி உள்ளது.
இந்த நிலையில், இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இமாச்சல் பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் மார்ச் 7 ஆம் முதல் தொடங்கி நடைபெற உள்ளது.
இந்திய அணி அறிவிப்பு
இந்நிலையில், இந்தப் போட்டிக்கான இந்திய அணியை பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது. ராஞ்சியில் நடந்த 4வது டெஸ்டுக்கான அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட ஜஸ்பிரித் பும்ரா, அணியில் இணைந்துள்ளார். காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளைத் தவறவிட்ட இந்திய மிடில் ஆடர் வீரர் கே.எல் ராகுல், இந்த டெஸ்ட் போட்டியில் இருந்தும் விலகியுள்ளார்.
பும்ரா வருகையால் பவுலிங் காம்பினேஷன் மாறும்?
இமயமலை அடிவாரத்தில் உள்ள தர்மசாலாவில் தற்போது கடும் குளிர் நிலவி வருகிறது. போட்டி நடைபெறும் நாட்களில் மழைப்பொழிவுக்கும் வாய்ப்புள்ளது. இதனால், ஆடுகளத்தில் ஈரப்பதத்தை கட்டுப்படுத்துவது மிக முக்கியமான காரணியாக மாற்றியுள்ளது. ஆடுகளத்தில் அதிக ஈரப்பதம் இருந்தால் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவி கிடைக்கும். எனவே, ஆடுகளத்தை மைதான ஊழியர்கள் கவனமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், தர்மசாலாவில் வெப்பநிலை குறைவாக இருப்பதால், ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். எனவே, இந்தியா 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் இறங்குமா? அல்லது, இந்த தொடரில் வெற்றி பார்முலாவான மூன்று ஸ்பின்னர்களுடன் தொடருமா? என்கிற கேள்வி இருக்கிறது.
5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியல்:
ரோகித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ரஜத் படிதார், சர்ஃபராஸ் கான், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), கே.எஸ் பாரத் (விக்கெட் கீப்பர்), தேவ்தத் படிக்கல், ஆர் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ் , முகமது. சிராஜ், முகேஷ் குமார், ஆகாஷ் தீப்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“