ஐசிசி ஊழல் தடுப்பு விதிமுறைகளை இருமுறை மீறியதாக இலங்கை முன்னாள் அதிரடி வீரர் சனத் ஜெயசூர்யா மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு ஜெயசூர்யா பதில் அளிக்க 2 வாரங்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணியின் முன்னாள் அதிரடி வீரர் சனத் ஜெயசூர்யா சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றதும் இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைமை தேர்வுக்குழு தலைவராக இருந்தார். 2013 முதல் 2015 வரையும், அதன்பின் 2017-ல் ராஜினாமா செய்யும் வரையிலும் சேர்மன் பதவியில் இருந்தார்.
இந்த காலக்கட்டத்தில் வீரர்கள் தேர்வில் பல்வேறு முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து ஐசிசி-யின் ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.
கடும் விமர்சனங்களுக்குப் பிறகு ஜெயசூர்யாவும் அவரது கமிட்டி உறுப்பினர்களும் மொத்தமாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ராஜினாமா செய்தனர்.
இந்நிலையில் சனத் ஜெயசூர்யா மீது ஐசிசி, ஊழல் தடுப்புப் பிரிவில் குற்றம் சுமத்தியுள்ளது.
ஐசிசி ஊழல் தடுப்புப் பிரிவுடன் ஒத்துழைக்காதது, விசாரணைக்கு இடையூறு விளைவித்தல் அல்லது விசாரணையை தாமதப்படுத்துவதற்கான முயற்சி அல்லது ஆதாரங்களை அழிப்பது (2.4.6 மற்றும் 2.4.7) ஆகியவை தொடர்பான விவகாரங்களில் ஜெயசூர்யா மீது புகார் எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இன்னும் இரண்டு வாரத்திற்குள் இதுகுறித்து பதில் அளிக்க வேண்டும் என்று ஐசிசி கேட்டுக் கொண்டுள்ளது.