உலகக் கோப்பை 2019 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியை அவ்வளவு சீக்கிரத்தில் யாரும் மறந்துவிட முடியாது. உலகக் கோப்பை இறுதிப் போட்டி வரலாற்றில், இவ்வளவு பரபரப்பான போட்டியையும் எவரும் பார்த்திருக்க முடியாது.
இந்தியா உலகக் கோப்பை அரையிறுதியில் இருந்து வெளியேறிய பிறகு, நம் ரசிகர்கள் மத்தியில் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு பெரிய எதிர்பார்ப்பு இல்லை. ஆஸ்திரேலியாவோ, பாகிஸ்தானோ, வங்கதேசமோ இறுதிப் போட்டிக்கு வந்திருந்தால் நிச்சயம் இவர்கள் ஜெயிக்கக் கூடாது என்பதற்காக கூட போட்டியை பார்த்திருப்பார்கள்.
ஆனால், இங்கிலாந்தும் நியூசிலாந்தும் மோதுகிறது என்ற உடனேயே. சாம்பாரிலும், ரசத்திலும் இன்ட்ரெஸ்ட் இல்லப்பா என சைலன்ட் மோடில் இருந்தனர். நியூசிலாந்து நிர்ணயித்த 242 ரன்கள் இலக்கை இங்கிலாந்து போராடி துரத்திக் கொண்டிருக்க, அப்போது தான் ரசிகர்களுக்கு இறுதிப் போட்டியை பார்க்கும் ஆவலே வந்தது. பரபரப்பான கடைசி ஓவரில், 241 ரன்கள் எடுத்து இங்கிலாந்து டிரா செய்ய, சூப்பர் ஓவர் கொண்டு வரப்பட்டது. இதில் இங்கிலாந்து 14 ரன்கள் அடிக்க, சேஸிங் செய்த நியூசிலாந்து அணியில் அதிரடி வீரர் ஜிம்மி நீஷம், இங்கிலாந்து பவுலர் ஆர்ச்சர் வீசிய 2வது பந்தில் லெக் சைடில் மெகா சிக்ஸ் ஒன்றை பறக்க விட்டார்.
இதனால், நியூசிலாந்தின் வெற்றி ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டது. ஆனால், அந்த நொடி ஒரு உயிரும் பிரிந்தது. அதுவும் சிக்ஸர் அடித்த ஜிம்மி நீஷமுக்கு நெருக்கமான உயிரும் கூட...
ஆம்! ஜிம்மி நீஷமின் உயர்நிலைப் பள்ளி கிரிக்கெட் பயிற்சியாளார் டேவ் கோர்டன், அந்த சிக்ஸரை பார்த்துக் கொண்டே உயிரை விட்டிருக்கிறார்.
இது குறித்து கோர்டனின் மகள் லியோனி கூறுகையில், "சூப்பர் ஓவரில் நீஷம் அடித்த சிக்ஸ் தான் எனது தந்தையின் கடைசி தருணமாகும். என் தந்தைக்கு சிகிச்சை அளித்த நர்ஸ், 'சூப்பர் ஓவரின் போது அவருடைய சுவாசம் மாறிவிட்டது' என்றார். நீஷமின் அந்த சிக்ஸரை பார்த்த பிறகு, அவர் தனது கடைசி மூச்சை நிறுத்திக் கொண்டார்" என்றார் நெகிழ்ச்சியுடன்.
ஜிம்மி நீஷம் தனது ட்விட்டரில், "டேவ் கோர்டன் எனது உயர் கல்வி ஆசிரியர், பயிற்சியாளர் மற்றும் நண்பர். உங்கள் தலைமையில் விளையாடியதை நாங்கள் அதிர்ஷ்டமாக கருதுகிறோம். அப்படிப்பட்ட ஒரு போட்டிக்கு பிறகு, நீங்கள் உயிரிழந்து இருக்கிறீர்கள். நீங்கள் நிச்சயம் பெருமைப்பட்டிருப்பீர்கள் என நம்புகிறேன். எல்லாவற்றிற்கும் நன்றி. RIP" என்று உருக்கமுடன் பதிவிட்டிருக்கிறார்.
Jimmy Neesham - ஜிம்மி நீஷம்
உண்மை தான் நீஷம்... தோற்றாலும் நீங்களும் சாம்பியனே! இறுதிப் போட்டியில் நியூசிலாந்து காட்டிய போராட்டம் பற்றி கிரிக்கெட் இருக்கும் வரை பேசப்படும்.