இந்திய கிரிக்கெட் அணியின் புகழ்பெற்ற கேப்டனாக எம்.எஸ் தோனி திகழ்கிறார். அவரது தலைமையிலான இந்திய அணி 2007 டி20 உலகக் கோப்பை, 2011 ஒருநாள் உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி என கோப்பைகளை வாங்கிக் குவித்தது. மேலும், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 3 ஃபார்மெட்டுகளிலும் கொடி கட்டி பறந்தது.
ஐ.பி.எல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்திய தோனி, அந்த அணி 5 முறை சாம்பியன் பட்டத்தை வாகை சூட உதவினார். அவர் கடந்த சீசனுடன் கேப்டன் பதவியில் இருந்து இறங்கிய நிலையில், தற்போது இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் சி.எஸ்.கே-வின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், தங்களுடைய முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியை தக்க வைப்பதற்காக சென்னை அணி நிர்வாகம் பழைய விதிமுறையை மீண்டும் கொண்டு வருமாறு பி.சி.சி.ஐ-யிடம் கோரிக்கை வைத்துள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. ஆனால், தோனி விதிமுறை வகுக்கப்பட்ட பிறகு தான் அடுத்த சீசனில் ஆடுவது பற்றி யோசிக்கலாம் என்றும், எதுவாக இருந்தாலும் அணி தான் முடிவு எடுக்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
தோனி - ஜோகிந்தர் சர்மா சந்திப்பு
இதுஒருபுறமிருக்க, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி ஹரியானா காவல்துறையில் டி.எஸ்.பி-யாக இருந்து வரும் ஒரு அதிகாரியை சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.
ஹரியானா காவல்துறையில் டி.எஸ்.பி-யாக இருந்து வரும் ஜோகிந்தர் சர்மா இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆவர். 2007 ஆம் ஆண்டு ஐ.சி.சி டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் ஹீரோவாக அவர் இருந்தார். பாகிஸ்தானுக்கு எதிரான அந்த இறுதிப் போட்டியில் ஜோகிந்தர் கடைசி ஓவரை வீசினார். பாகிஸ்தான் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அவர் வீசிய முதல் பந்தில் மிஸ்பா-உல்-ஹக் சிக்ஸர் பறக்க விடுவார். 3-வது பந்தில் ஆட்டமிழந்து விடுவார். கடைசியில் இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை முத்தமிடும். இந்த மலரும் நினைவுகளை தந்தவர் ஜோகிந்தர் சர்மா.
இந்த நிலையில், ஜோகிந்தர் சர்மா 12 ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது கேப்டன் எம்.எஸ் தோனியை சந்தித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், “மிக நீண்ட நாட்களுக்கு பிறகு தோனியை சந்திப்பதில் மகிழ்ச்சியாக இருந்தது. ஏறக்குறைய 12 ஆண்டுகளுக்குப் பிறகு உங்களைச் சந்தித்ததில் இருந்த மகிழ்ச்சி இன்று வித்தியாசமானது” என்று ஜோகிந்தர் சர்மா பதிவிட்டுள்ளார்.
ஜோகிந்தர் இந்தியாவுக்காக 4 டி20 மற்றும் 4 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்தியன் பிரீமியர் லீக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் அவர் விளையாடியிருக்கிறார். அவர் 77 முதல்தர போட்டிகளிலும், 80 லிஸ்ட்-ஏ ஆட்டங்களிலும் ஹரியானா அணிக்காக விளையாடி முறையே 297 மற்றும் 115 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவர் முதல்தர கிரிக்கெட்டில் ஐந்து சதங்கள் உட்பட 2,804 ரன்கள் குவித்துள்ளார். ஆல்ரவுண்டர் வீரராக அவர் கடந்த பிப்ரவரி 2023 இல் தனது ஓய்வை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“