scorecardresearch

2-வது டெஸ்டில் இந்தியா தோல்வி: 7 விக்கெட் வித்தியாசத்தில் தெ.ஆ வெற்றி

India tour to South Africa 2nd test Wanderers Stadium, Johannesburg Tamil News: ஜோகன்னஸ்பெர்க்கின் வான்டரெர்ஸ் மைதானத்தில் இந்தியா தென் ஆப்பிரிக்கா இடையே நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

India vs South Africa 2nd Test Live updates in tamil:

India vs South Africa 2nd Test Live updates in tamil: தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், தென் ஆப்பிரிக்காவின் கோட்டை என வர்ணிக்கப்பட்ட செஞ்சூரியன் மைதானத்தில் நடந்த முதலாவது டெஸ்டில் 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியின் மூலம் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வான்டரெர்ஸ் மைதானத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் தொடங்கியது.

இந்தியா உற்சாகம்

தென்ஆப்பிரிக்கா தொடரின் முதலாவது போட்டியிலே அந்த அணியின் கோட்டையை இந்தியா தகர்த்து புதிய வரலாறு படைத்துள்ளது. இதனால், இந்திய வீரர்களின் நம்பிக்கை மற்றும் உத்வேகம் பன்மடங்கு அதிகரித்துள்ளது. எனவே, இந்திய அணி அதே உற்சாகத்துடன் ஜோகன்னஸ்பர்க்கிலும் களமிறங்கும் என்பதில் சந்தேகமில்லை.

வரலாற்றை தொடருமா இந்தியா?

ஜோகன்னஸ்பர்க் மைதானத்தை பொறுத்த வரை இந்திய அணி இங்கு ஒருமுறை கூட தோல்வி கண்டது கிடையாது. இதுவரை இங்கு 5 டெஸ்டுகளில் விளையாடியுள்ள இந்தியா, 2-ல் வெற்றியும், 3-ல் டிராவும் கண்டுள்ளது.

முன்னர் இந்த மைதானத்தில் புற்கள் நிரம்பி காணப்பட்ட நிலையில், அதை அகற்றும் பட்சத்தில் இரு அணிகளுக்கு இடையிலான போட்டி அதிகரிக்கும். அதேவேளையில், இங்கு முதலில் பேட் செய்யும் அணிக்கு அனுகூலம் அதிகம் என்பதால் ‘டாஸ்’ முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சதம் அடிப்பாரா கேப்டன் கோலி?

சர்வதேச கிரிக்கெட்டில் 2 ஆண்டுக்கு மேலாக சதம் அடிக்காமல் விளையாடி வரும் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு, அதுவே மிகப்பெரிய நெருக்கடியாக அமைத்துள்ளது. அவர் கவர் ட்ரைவ் ஆட நினைத்து ஆப்-ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளை அடித்து ஆட்டமிழக்கிறார். அவர் விளாசும் பந்து பேட்டின் விளிம்பில் பட்டு ஸ்லிப் அல்லது விக்கெட் கீப்பரிடம் தஞ்சமடைகிறது. எனவே, அவர் ஷாட்களை சரியாக தேர்வு செய்து விளையாட வேண்டும் என முன்னாள் வீரர்கள் அறிவுவுரை வழங்கியுள்ளனர்.

எனினும், ஜோகன்னஸ்பர்க் மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி 119, 96, 54 மற்றும் 41 ரன்கள் என சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தியுள்ளார். எனவே, இந்த ஆட்டத்திலும் நல்ல ஸ்கோரை எட்டிப்பிடிப்பார் என எதிர்பார்க்கலாம்.

இரு அணி வீரர்களின் உத்தேச பட்டியல் பின்வருமாறு:-

இந்தியா:

லோகேஷ் ராகுல், மயங்க் அகர்வால், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே, ரிஷாப் பண்ட் (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ஷர்துல் தாக்குர் அல்லது உமேஷ் யாதவ், முகமது ஷமி, பும்ரா, முகமது சிராஜ்.

தென்ஆப்பிரிக்கா:

டீன் எல்கர் (கேப்டன்), மார்க்ராம், கீகன் பீட்டர்சன், வான்டெர் துஸ்சென், பவுமா, கைல் வெரைன் (விக்கெட் கீப்பர்), வியான் முல்டர் அல்லது மார்கோ ஜான்சென், காஜிசோ ரபடா, கேஷவ் மகராஜ், லுங்கி இங்கிடி, டுவைன் ஒலிவியர்.

இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையேயான 2வது டெஸ்ட் போட்டி, இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டியை ஸ்டார் போர்ட்ஸ் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

டாஸ் வென்ற இந்திய அணி:

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை முடிவு செய்துள்ளது.

கேப்டன் கோலி இல்லை!

இந்த ஆட்டத்தில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி இடம்பெறவில்லை. அவருக்கு பதில் கே எல் ராகுல் கேப்டனாக செயல்படுகிறார். டாஸ் சுண்டுதலின்போது பேசிய கேஎல் ராகுல், “துரதிர்ஷ்டவசமாக, விராட் கோலி முதுகு வலியால் பாதிக்கப்பட்டுள்ளார். அடுத்த டெஸ்டில் அவர் குணமடைவார் என்று நம்புகிறேன்.

ஒவ்வொரு இந்திய வீரரின் கனவும் தனது நாட்டு அணிக்கு கேப்டனாக வேண்டும் என்பதுதான். உண்மையிலேயே இந்த சவாலை எதிர்நோக்கியுள்ளேன். இந்திய அணி இங்கு சில நல்ல வெற்றிகளைப் பெற்றுள்ளது. அதைத் தொடருவோம் என்றும் நம்புகிறோம்.

விராட் கோலி பதிலாக ஹனுமா விஹாரி களமாடுவார். அணியில் ஒரே ஒரு மாற்றம் தான். ஒட்டுமொத்தமாக செஞ்சூரியன் ஒரு நல்ல டெஸ்ட் போட்டியாக அமைந்தது. நாங்கள் ஒரு அணியாக சிறப்பாகச் செயல்பட்டோம். எனவே இந்த ஆட்டத்தில் நாங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

களமிறங்கும் இரு அணிகள் விபரம்:

இந்தியா

கேஎல் ராகுல்(கேப்டன்), மயங்க் அகர்வால், சேதேஷ்வர் புஜாரா, அஜிங்க்யா ரஹானே, ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த்(விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்

தென்ஆப்பிரிக்கா

டீன் எல்கர்(கேப்டன்), ஐடன் மார்க்ரம், கீகன் பீட்டர்சன், ரஸ்ஸி வான் டெர் டுசென், டெம்பா பவுமா, கைல் வெர்ரேய்ன்(விக்கெட் கீப்பர்), மார்கோ ஜான்சன், ககிசோ ரபாடா, கேசவ் மகாராஜ், டுவான் ஆலிவியர், லுங்கி நிகிடி

முதல் நாள் ஆட்டம்: இந்தியா பேட்டிங்

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

இந்த ஆட்டத்தில் மதிய உணவு இடைவேளை வரை இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 53 ரன்கள் எடுத்தது. மயங்க் அகர்வால் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். புஜாரா 3 ரன்களில் ஆட்டமிழந்தார். ரகானே டக்-அவுட்(0) ஆகி வெளியேறினார்.

தற்போது கே எல் ராகுல் 19 ரன்களுடனும், ஹனுமா விஹாரி 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

தென்னாப்பிரிக்கா அணியில் டுவானே ஒலிவியர் 2 விக்கேட்டுகளையும், மேர்கோ ஜன்சண் 1 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.

2ம் நாள் ஆட்டம்: இந்தியா ஆல்-அவுட் – தென்ஆப்பிரிக்கா பேட்டிங்

மதிய உணவு இடைவேளைக்கு பிறகு களமிறங்கிய இந்திய அணி அடுத்தடுத்த விக்கெட் இழப்புகளை சந்தித்த நிலையில், முதல் இன்னிங்சில் 202 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் பொறுப்புடன் ஆடிய கேப்டன் கே எல் ராகுல் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 50 ரன்கள் சேர்ந்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்களில் அஸ்வின் 46 ரன்கள் எடுத்தது அவுட் ஆனார்.

தென்ஆப்பிரிக்க அணியில் மேர்கோ ஜேன்சண் 4 விக்கெட்டுகளையும், ரபாடா மற்றும் டுவானே ஒலிவியர் தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து, முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்க அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 35 ரன்கள் சேர்த்து 1 விக்கெட்டை இழந்திருந்தது.

இந்நிலையில், இன்று 2ம் நாள் நேரத்தில் அந்த அணியில் மார்க்ரம் 7 ரன்களிலும், கேப்டன் டீன் எல்கார் 28 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தனது அறிமுக ஆட்டத்திலே அரைசதம் அடித்து அசத்திய கீகன் பீட்டர்சன் 62 ரன்கள் சேர்த்த நிலையில் அவுட் ஆனார். பின்னர் வந்த வான் டெர் டுசன் 1 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார்.

மதிய உணவு இடைவேளையின் போது தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட்டுகளை இழந்து 102 ரன்கள் சேர்த்தது.

தென் ஆப்பிரிக்கா ஆல்-அவுட்

மதிய உணவு இடைவேளைக்கு பிறகான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. நிதானத்தை கடைபிடித்திருந்த டெம்பா பவுமா அரைசதம் கடந்து அசத்தினார். ஆனால் அவர் 51 ரன்கள் எடுத்திருந்த ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள். இதனால் அந்த அணி 229 ரன்கள் சேர்ந்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து. எனவே அந்த அணி இந்திய அணியை விட 27 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

முதல்முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய தாக்கூர்

இந்திய அணி தரப்பில் மிகச்சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஷர்துல் தாக்கூர் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

தொடர்ந்து விக்கெட் வேட்டையை நடத்திய அவர் மேலும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி மொத்தமாக 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஷமி 2 விக்கெட்டையும், பும்ரா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்கள்.

இதையடுத்து, இந்திய அணி தனது 2வது இன்னிங்சை துவங்கியது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கே.எல் ராகுல் 8 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். மற்றொரு துவக்க வீரர் மயங்க் அகர்வால் 23 ரன்களில் ஆட்டமிழந்தர். 2- ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 85 ரன்கள் எடுத்துள்ளது. தென் ஆப்பிரிக்காவை விட இந்திய அணி 58 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. புஜாரா 35 ரன்களுடன், ரகானே 11 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

3ம் நாள் ஆட்டம் – இந்தியா பேட்டிங்

இன்று மூன்றாம் நாள் ஆட்ட நேரத்தில் களத்தில் இருந்த இந்திய வீரர்கள் புஜாரா மற்றும் ரஹானே அரைசதம் கடந்து அசத்தினர். எனினும், தென் ஆப்பிரிக்க வீரர் ராபாடாவின் வேகத்தில் இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதில் புஜாரா 53 ரன்களுடனும், ரஹானே 58 ரன்களுடனும் அவுட் ஆனார்கள்.

பின்னர் வந்த வீரர்களில் பண்ட் பூஜ்ஜிய ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவரை தொடர்ந்து வந்த அஸ்வின் 2 பவுண்டரிகளை விரட்டி 16 ரன்னில் அவுட் ஆனார்.

இதன் பிறகு, இந்திய அணி 2வது இன்னிங்சில் 266 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து 240 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு தென் ஆப்பிரிக்க அணி தனது 2வது இன்னிங்சை தொடங்கியது. 3ம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 2 விக்கெட்டுகளை இழந்து 118 ரன்கள் எடுத்துள்ளது.

இதனால், இந்திய அணி வெற்றி பெற 8 விக்கெட்டுகள் எடுக்க வேண்டும். அதே போல, தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற 122 ரன்கள் தேவை என்ற நிலை உள்ளது.

4ம் நாள் ஆட்டம் – மழையால் நான்காம் நாள் ஆட்டம் தாமதம்

ஜோகன்னஸ்பெர்க்கின் வான்டரெர்ஸ் மைதானத்தில் மழை பெய்து வருவதால் இன்று நடைபெற இருந்த நான்காம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மழை நின்ற பிறகு, பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 67.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 243 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Johannesburg test india vs south africa 2nd test live in tamil