ஐபிஎல் தொடரில் கிங்க்ஸ் 11 பஞ்சாப் அணி ஃபீல்டிங் பயிற்சியின்போது ஜாண்டி ரோட்ஸ் வேகமாக வரும் பந்தை பாய்ந்து கேட்ச் செய்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்ப்பவர்கள் ஓய்வுபெற்றாலும் இவர்தான் நம்பர் 1 ஃபீல்டர் என்று கூறிவருகின்றனர்.
கிரிக்கெட் விளையாட்டில் சர்வதேச அளவில் நம்பர் ஒன் பீல்டர் யார் என்று கேட்டால், 80, 90 கிட்ஸ் எல்லோரும் ஒரே குரலில் ஜாண்டிரோட்ஸ் என்றுதான் சொல்வார்கள். தென் ஆப்பிரிக்க அணியின் பாயும் புலி ஜாண்டி ரோட்ஸ் ஃபார்வர்டில் ஃபீல்டராக நிற்கிறார் என்றால் அவரைத் தாண்டி ஒரு பந்து செல்வது என்பது கடினம்தான். வருகிற பந்தை ஒரே பாய்ச்சலில் தாவிப் பிடித்து அதே வேகத்தில் ஸ்டம்பை நோக்கி எறிவார். அதனால்தான், ஜாண்டி ரோட்ஸ், தான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிவந்த வரைக்கும் நம்பர் 1 ஃபீல்டராகவே இருந்தார்.
தென்னாப்பிரிக்க அணியில், 1992-ல் அஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமான ஜாண்டி ரோட்ஸ், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக களம் இறங்கி விளையாடினார்.
பொதுவாக ஒரு கிரிக்கெட் வீரர் ஒரு நல்ல பேட்ஸ்மேனாகவோ அல்லது ஒரு நல்ல பவுலராகவோ அல்லது ஒரு நல்ல கீப்பராகவோகூட ரசிகர்களை கவரலாம். ஆனால், ஒரு ஃபீல்டராக இருந்து ரசிகர்களைக் கவர்ந்தார் என்றால் அவர் ஜாண்டி ரோட்ஸ்தான்.
ஜாண்டி ரோட்ஸ் வயது காரணமாக கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் அவர் இன்னும் கிரிக்கெட் விளையாட்டுடன் தொடர்பில்தான் இருக்கிறார். தற்போது 51 வயதாகும் ஜாண்டி ரோட்ஸ் ஐபிஎல் அணியான கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக இருக்கிறார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, ஐபிஎல் தொடர் 13வது சீசன் ஐக்கிய அரபு எமிரேட்டில் வருகிற 19ம் தேதி தொடங்குகிறது. அதனால், ஐபிஎல் அணிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் துபாய் சென்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் அங்கே பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அந்த அணியின் வீரர்களுக்கு ஜாண்டி ரோட்ஸ் தீவிரமாக ஃபீல்டிங் பயிற்சி அளித்து வருகிறார். ஜாண்டி ரோட்ஸ் ஃபீல்டிங் பயிற்சி அளிக்கும்போது, அவர் வேகமாக பாய்ந்து வரும் பந்தை பாய்ந்து கேட்ச் செய்ததை கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீடியோவாக வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில், ஜாண்டி ரோட்ஸ், வேகமாக வரும் பந்தை பாய்ந்து பிடிக்கிறார். மற்றொரு பந்து பக்கவாட்டில் தொலைவில் மிக வேகமாக வருகிறது. ஜாண்டி ரோட்ஸ் சிறிதும் தயங்காமல் பாய்ந்து பிடித்து அசத்துகிறார்.
இந்த வீடியோவைப் பார்க்கும் பலரும், ஓய்வு பெற்று வயதானாலும் இன்னும் நம்பர் 1 ஃபீல்டர் யார் என்றால் ஜாண்டி ரோட்ஸ் தான் என்று கூறி அவரை பாராட்டி வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"