'ஜஸ்ட் ஸ்டாப் ஆயில்' அமைப்பினர், கடந்த வாரம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2வது ஆஷஸ் கிரிக்கெட் டெஸ்டில் ஆரஞ்சுப் பொடியை வீசி ஆட்டத்தில் இடையூறு செய்தனர்.
கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் புகழ்மிக்க விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் கடந்த திங்கள் கிழமை தொடங்கியது. வருகிற 16ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் களமாடி வருகின்றனர். இந்நிலையில், விம்பிள்டனின் மூன்றாவது நாளான நேற்று புதன் கிழமையன்று, ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தின் போது, கோர்ட் 18ல் ஆரஞ்சு நிற பொடியை தூவி, 'ஜஸ்ட் ஸ்டாப் ஆயில்’ (Just Stop Oil) எதிர்ப்பாளர்கள் சிறிது நேரம் ஆட்டத்தை நிறுத்தினர்.
Advertisment
'ஜஸ்ட் ஸ்டாப் ஆயில்’ அமைப்பின் 2 எதிர்ப்பாளர்கள் கோர்ட் 18ல் உள்ளே ஓடி வந்தனர். பிறகு கையில் இருந்த ஆரஞ்சு நிற பொடியை தெளித்தனர். அதன்பிறகு அங்கிருந்த மைதான பாதுகாப்பு ஊழியர்கள் அந்த நபரை உடனடியாக அப்புறப்படுத்தினர். மைதானத்தில் இருந்த பொடியை ஊழியர்கள் துடைத்ததால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
ஆஷஸ் டெஸ்டில் குறுக்கீடு
'ஜஸ்ட் ஸ்டாப் ஆயில்' அமைப்பினர், கடந்த வாரம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இரண்டாவது ஆஷஸ் கிரிக்கெட் டெஸ்டில் ஆரஞ்சுப் பொடியை வீசி ஆட்டத்தை நடத்த இடையூறு செய்து இருந்தனர். இதில் ஒரு எதிர்பார்ப்பாளரை இங்கிலாந்து விக்கெட் கீப்பர் வீரர் ஜானிபேர் ஸ்டோவ் அலேக்காக தூக்கினார். அதோடு நின்றுவிடாமல் அவரை மைதானத்திற்கு வெளியில் தூக்கி சென்று அங்கிருந்த காவலர்களிடம் ஒப்படைத்தார். மற்றொருவரை இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மடக்கிப் பிடித்தார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.
பிரிட்டனை (யுனைடட் கிங்டம்) தலைமையிலாடமாக கொண்டு செயல்படும் ஜஸ்ட் ஸ்டாப் ஆயில்’ (Just Stop Oil) அமைப்பினர் காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து தீவிர விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். மேலும், பிரிட்டிஷ் அரசு புதிய எண்ணெய், எரிவாயு மற்றும் நிலக்கரி திட்டங்களை உடனடியாக நிறுத்த வேண்டும் மற்றும் லார்ட்ஸ் புதிய புதைபடிவ எரிபொருட்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரும் அறிக்கையை வெளியிட வேண்டும் என்று விரும்புகின்றனர்.
இந்த ஆண்டு பிரீமியர்ஷிப் ரக்பி இறுதிப் போட்டியிலும், ஷெஃபீல்டில் நடந்த உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப்பிலும் அவர்கள் இதேபோல் குறுக்கிட்டு போட்டி நிறுத்தினர். தற்போது, விம்பிள்டன் போட்டியிலும் குறுக்கிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil