ஏன் ஸ்லெட்ஜிங் செய்யாமல் இருக்க வேண்டும்? - ஆஸ்திரேலிய புதிய கோச் ஜஸ்டின் லாங்கர்!

'ஸ்லெட்ஜிங்' எப்போதும் ஒரு நல்ல விஷயம்

ஆசைத் தம்பி

கேப்டவுனில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய வீரர் பேன்கிராஃப்ட், தான் மறைத்து வைத்திருந்த மர்மப் பொருள் கொண்டு, ஆஸ்திரேலிய பவுலர்கள் ஸ்விங் செய்வதற்கு ஏற்றார் போல் பந்தை சேதப்படுத்தினர். இதை அப்படியே கேமரா படம் பிடிக்க, “What the f*** is going on? Find out what the f*** is going on?” என்று பயிற்சியாளர் லீமன் ஆத்திரப்பட, போட்டியை பார்த்துக் கொண்டிருந்த ஒட்டுமொத்த ரசிகர்களும் அதிர்ச்சிக்கு ஆளானர்கள்.

அதன்பின், துணை கேப்டன் வார்னரின் ஐடியாவோடு, கேப்டன் ஸ்மித்தின் துணையோடு பேன்கிராஃப்ட் பந்தை சேதப்படுத்தியது உறுதியானது. ஸ்மித்துக்கும், வார்னருக்கும் ஓராண்டு கிரிக்கெட் விளையாட தடை விதிக்க, சீனியர்கள் தவறு செய்ய சொன்னதை ஒப்புக்கொண்டு செய்த இளம் வீரர் பேன்கிராஃப்ட்டுக்கு ஒன்பது மாதம் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது.

ஆனால், இந்த விவகாரத்தில் பயிற்சியாளர் டேரன் லீமனுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்பது விசாரணையில் நிரூபணம் ஆனது. இருப்பினும், திடீரென செய்தியாளர்களை சந்தித்த பயிற்சியாளர் லீமன், ‘நான் ஸ்டீவ் ஸ்மித்தை நினைத்து உண்மையில் வருத்தம் கொள்கிறேன். செய்தியாளர்கள் முன்பு ஸ்மித் அழுததை நான் பார்த்தேன். அனைத்து வீரர்களும் இதைப் பார்த்து வேதனை அடைந்துள்ளனர். நல்ல மனிதர்களும் சில சமயம் தவறுகள் செய்வதுண்டு. எனக்கு இந்த சம்பவம் குறித்து எதுவுமே தெரியாது. ஆனாலும், நானும் எனது குடும்பமும் கடந்த ஒரு வாரகாலமாக கடும் விமர்சனங்களை எதிர்கொண்டோம். எங்கள் மீது அனைவரும் வைத்திருந்த நம்பிக்கை சிதைந்து போயிருப்பதற்காக நான் வருத்தப்படுகிறேன். நான் தொடர்ந்து பதவியில் நீடிப்பது அழகல்ல. அதனால் பதவி விலகுகிறேன்” என்று சொல்லி பதவி விலகினார். ஒரு நல்ல கேப்டனின் தவறான முடிவு, எத்தனை பேரின் வாழ்க்கையில் விளையாடி இருக்கிறது என்பதற்கு ஸ்டீவன் ஸ்மித் தான் ஆகச் சிறந்த உதாரணம்.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் முன்னாள் தொடக்க வீரர் ஜஸ்டின் லாங்கர் புதிய தலைமை பயிற்சியாளராக பதவியேற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து, நேற்று இவர் அளித்த பேட்டியில், ‘ஸ்லெட்ஜிங்’ எப்போதும் ஒரு நல்ல விஷயமே என்று கருத்து தெரிவித்து இருக்கிறார்.

இது என்னடா.. ஆஸ்திரேலியாவுக்கு மீண்டும் வந்த சோதனை என்பது போல் அவரது பேட்டி அமைந்தது. அவர் கூறுகையில், “ஆஸ்திரேலியாவில் ஸ்லெட்ஜிங் என்பது ஒரு நல்ல விஷயமாகும். நான் எனது மகளுடன் சீட்டுக் கட்டு ஆடும் போது இருவரும் ஒருவருக்கொருவர் விமர்சித்துக் கொள்வோம். அதேபோல், எனது பெற்றோருடன் கோல்ஃப் விளையாடும் போது அனைவரும் ஸ்லெட்ஜிங் செய்வோம்.

வேடிக்கையாக பேசுவதற்கும், தவறாக பேசுவதற்கும் வித்தியாசம் உள்ளது. அதை முதலில் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். தவறாக பேசுவதற்கு யாருக்கும் எங்கும் இடமில்லை. ‘ஸ்லெட்ஜிங் ஆஸ்திரேலியர்கள்; என்று எங்களை கடந்த 30 வருடங்களாக மக்கள் எங்களை அழைக்கின்றனர். அதற்காக எல்லாம் நாங்கள் என்றுமே கவலைப்பட்டதில்லை” என்றார்.

இவரது இந்த பேச்சுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பும் விமர்சனமும் எழுந்துள்ளது. குறிப்பாக, சில ஆஸ்திரேலிய ரசிகர்களே இந்த கருத்தை எதிர்த்துள்ளனர். ‘ஸ்லெட்ஜிங் என்பது ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் இருந்து ஒழிக்கப்பட வேண்டும். சுவாரஸ்யம் வேண்டும் என்பதற்காக ஸ்லெட்ஜிங் செய்வதை சீனியர்களே ஊக்கப்படுத்தினால், பான்கிராஃப்ட் போல நாளை வேறொரு இளம் வீரர் துணிந்து தவறான அணுகுமுறைக்கு ஒத்துழைக்க நேரிடும். அனைத்திற்கும் ஸ்லெட்ஜிங் தான் அடிப்படை. அதில் சுகம் காணும் வீரர்கள், தவறுகளை தவறு என்று உணரவே மறுக்கின்றனர். இந்த கலாச்சாரம் மாற வேண்டும் என கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.

அதேசமயம், சில ஆஸ்திரேலிய ரசிகர்கள் இதை வரவேற்றுள்ளனர். ஆஸ்திரேலியாவில் ஸ்லெட்ஜிங் சாதாரணம். அதை ஸ்போர்ட்டிவாக எடுத்துக் கொள்ள வேண்டும். எந்த விளையாட்டு என்றாலும் சுவாரஸ்யம் இல்லையெனில் போர் தான் என குறிப்பிட்டுள்ளனர்.

அதே பேட்டியில் பேட்டியளித்த ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் டிம் பெய்ன், பயிற்சியாளர் லாங்கர் சொன்னதையே வேறு வடிவத்தில் எடுத்துரைத்தார்.

அவர் கூறுகையில், “களத்தில் நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். எப்போதும் போல நாங்கள் பேசப் போகிறோம். எதிரணிக்கு அழுத்தம் கொடுப்போம். ஆனால், அவமதிக்கும் வகையில் நடந்து கொள்ள மாட்டோம். ஸ்டெம்ப்பில் இருக்கும் மைக் மூலம் நாங்கள் பேசுவதை (ஸ்லெட்ஜிங்) நீங்கள் கேட்கத் தான் போகிறீர்கள்” என்று உரைத்துள்ளார்.

×Close
×Close