Justin Langer on Virat Kohli and BCCI Tamil News: இந்திய கிரிக்கெட் அணியின் 3 ஃபார்மெட்டுகளிலும் கேப்டனாக செயல்பட்டவர் முன்னாள் கேப்டன் விராட் கோலி. பணிச்சுமை காரணமாக கடந்த 2021 டி20 உலகக் கோப்பையுடன் டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ஆனால், ஒயிட்-பால் கிரிக்கெட் அணிக்கு எதற்கு 2 கேப்டன்கள் என முடிவு செய்த பி.சி.சி.ஐ ரோகித் சர்மாவை 2 அணிக்கும் கேப்டனாக நியமித்தது. இதனிடையே, கோலி டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார்.
இதன்பிறகு, கோலி இந்திய அணியில் ஒரு சாதாரண வீரராகவே விளையாடி வருகிறார். தற்போது, இங்கிலாந்து மண்ணில் நடந்து வரும் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணிக்காக களமாடியுள்ளார். இருப்பினும், அவர் கேப்டன் பதவியில் இருந்து விலகிய சர்ச்சை இன்றுவரை ஓய்ந்தபாடில்லை.
இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், விராட் கோலியை ஒருநாள் அணியில் கேப்டனாக தொடர அனுமதிக்காமல் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) அவருக்கு அநீதி இழைத்து விட்டதாக விமர்சித்துள்ளார்.
நேற்று முதல் நடைபெற்று வரும் உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வர்ணனை செய்து வரும் அவர், ஒருநாள் அணி கேப்டன் பதவியில் இருந்து கோலியை நீக்கிய பிசிசிஐயின் முடிவை அவர் விமர்சித்தார். அவரது விஷயத்தில் பிசிசிஐ நியாயமற்ற முறையில் நடத்ததாகவும், இந்த விஷயத்தில் வேறு எந்த கருத்தையும் கேட்க விரும்பவில்லை என்றும், மரியாதை நிமித்தமாக கோலி ஒருநாள் கேப்டனாக தொடர அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். பிசிசிஐ குறித்து லாங்கர் விமர்சித்தபோது, முன்னாள் இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
2021 டிசம்பரில் புதிய கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டபோது, கோலி ஒருநாள் அணியின் கேப்டன் பதவியில் இருந்து திடீரென விடுவிக்கப்பட்டார். 50 ஓவர் வடிவத்தில் கேப்டனாக 95 போட்டிகளில் 65 வெற்றிகளுடன் 70.43 என்ற வெற்றி சதவீதத்தைப் பெற்றிருந்தார் கோலி.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.