Asia Cup 2023: 6 அணிகள் பங்கேற்றுள்ள 16வது ஆசிய கோப்பை தொடர் கடந்த 30ம் தேதி முதல் தொடங்கியது. மிகவும் விறுவிறுப்பாக அரங்கேறி வரும் இத்தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பரம போட்டியாளர்களான இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் நேற்று (சனிக்கிழமை) மாலை 3 மணிக்கு இலங்கையில் உள்ள பல்லகெலே சர்வதேச மைதானத்தில் தொடங்கியது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 266 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி 66 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது 5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இஷான் கிஷன் – ஹர்டிக் பாண்ட்யா ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி அரைசதம் அடித்து அசத்தினர். இதில் இஷான் கிஷன் 82 ரன்னிலும், ஹர்டிக் பாண்ட்யா 87 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இவர்களது பொறுப்பான ஆட்டத்தால் இந்தியா 266 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து பாகிஸ்தான் தனது இன்னிங்சை தொடங்குவதற்கு முன்னர் தொடர்ந்து மழை பெய்ததன் காரணமாக ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டது.
கைஃப் - கம்பீர் சூடான விவாதம்
ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இஷான் கிஷான் 82 ரன்கள் எடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான முகமது கைஃப் மற்றும் கவுதம் கம்பீர் ஆகியோர், இஷான் கிஷான் - கே.எல் ராகுல் ஆகிய இருவரில் யார் 5-வது இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டும் என்பது குறித்து கடுமையான விவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து கைஃப் பேசுகையில், “கே.எல் ராகுல் ஒரு நிரூபிக்கப்பட்ட மேட்ச் வின்னர். நம்பர் 5ல், அவர் அற்புதமாக ரன்கள் எடுத்துள்ளார். எனவே, ராகுல் டிராவிட்டிற்குத் தெரியும், அவருடைய மனதில் அந்தத் தெளிவு இருக்கிறது. நினைவில் கொள்ளுங்கள், முகமது ஷமி இன்று நீக்கப்பட்டார். எனவே, கே.எல்.ராகுல் மீண்டும் உடல்தகுதியுடன் இருக்கும்போது, அவர் லெவன் அணியில் விளையாடுவார், மேலும் இஷான் கிஷான் தனது அடுத்த வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும்.
இஷான் தனக்கு தேவையான அனைத்தையும் செய்து வருகிறார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான அந்தத் தொடரில் அவர் சிறப்பாக விளையாடினார். அவரது கிராஃப் மட்டும் உயர்ந்து நாளுக்கு நாள் சிறப்பாக வருகிறது. அவர் இரட்டை சதமும் அடித்துள்ளார். அவரிடம் திறமை உள்ளது. ஆனால் ராகுலுக்கு பதில் அவர் விளையாட முடியாது. ஏனெனில், ராகுல் ஃபார்ம் அவுட் ஆகவில்லை. அவருக்கு காயம் தான் ஏற்பட்டது." என்றார்.
கைஃப் சொல்வதைக் கேட்ட கம்பீர், உலகக் கோப்பையை வெல்ல, பெயர்தான் முக்கியமா அல்லது ஃபார்ம் முக்கியமா? என்று கேள்வி எழுப்பினார்.
“கோலி அல்லது ரோகித் தொடர்ந்து அந்த நான்கு அரைசதங்களை அடித்திருந்தால், கே.எல்.ராகுலைப் பற்றி நீங்கள் அதையே கூறியிருப்பீர்களா? நீங்கள் உலகக் கோப்பையை வெல்லத் தயாராகும் போது, நீங்கள் ஒரு பெயரைப் பார்க்கவில்லை, கோப்பையை வெல்லக்கூடிய ஒரு வீரரின் ஃபார்மை பார்க்கிறீர்கள்.
முன்னோடியாக வருவதற்கு இஷான் முடிந்த அனைத்தையும் செய்துள்ளார். ராகுலைப் போல் சர்வதேச போட்டிகளில் அவர் விளையாடாததால் மட்டுமே நாம் இந்த வாதத்தை முன்வைக்கிறோம்.
மாற்று வீரர் சிறப்பாக செயல்பட்டதால் காயம் காரணமாக அணியில் இடம் இழந்த பல வீரர்கள் உள்ளனர். சிலர் தங்கள் வாய்ப்புகளுக்காக காத்திருக்க வேண்டியிருந்தது, மற்றவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு கூட கிடைக்கவில்லை. இதுதான் யதார்த்தம்.
ஆம், ராகுல் நம்பர் 5ல் நிரூபிக்கப்பட்ட வீரர். ஆனால் அந்த இடத்தில் பேட்டிங் செய்யாத இஷானுக்கு அந்த அழுத்தத்தின் கீழ் பாகிஸ்தான் போன்ற பந்துவீச்சு தாக்குதலுக்கு எதிராக 82 ரன்கள் எடுத்தார். அதனால் நீங்கள் இருவரையும் ஒப்பிட முடியாது.”என்று கம்பீர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“