Tamilnadu-government | udhayanidhi-stalin: தமிழகத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இருந்து வருகிறார். இவரது வருகைக்குப் பிறகு துறை சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, செஸ் ஒலிம்பியாட், ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி, ஸ்குவாஷ் உலகக் கோப்பை போன்ற சர்வதேச அளவிலான போட்டிகளை தமிழத்தில் நடத்தப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றன.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டசபை கூட்டத் தொடரில் விளையாட்டுத் துறை மானியக் கோரிக்கையின் போது, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். அப்போது, கிராமப்புற இளைஞர்கள் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள். ஆனால், பெரும்பாலானவர்களிடம் தேவையான விளையாட்டு உபகரணங்கள் இருப்பதில்லை. எனவே, முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் டாக்டர்.கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.42 கோடி செலவில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், கிராம ஊராட்சிகளுக்கு 33 விளையாட்டு பொருட்கள் அடங்கிய கலைஞர் விளையாட்டு கிட்களை விரைவில் வழங்குவதற்கான ஏற்பாடுகள் தமிழக அரசால் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், 33 விளையாட்டு உபகரணங்கள் கொண்ட ஸ்போர்ட்ஸ் கிட் தயாரித்து வழங்குவதற்கான டெண்டர் வெளியிடப்பட்டு உள்ளது.
ஒவ்வொரு கிட்டிலும்100 டி-ஷர்ட், 200 தொப்பிகள் உள்பட 33 விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய ஸ்போர்ட்ஸ் கிட்களை தயாரித்து வழங்குவதற்கான ஆன்லைன் டெண்டரை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி நவம்பர் 21 என்றும், அடுத்த நாள், ஒப்பந்தப் புள்ளி திறக்கப்படும் என்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு கிராமப்புற இளைஞர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும், உற்சாகத்தையும் அளித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“