Kamran Akmal | Arshdeep Singh: 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் கடந்த 2 ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் நடந்த ஆட்டத்தில் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியது.
கேலி
இந்தப் போட்டியின் போது இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங் மற்றும் அவரது சீக்கிய மதத்தைப் பற்றி முன்னாள் பாகிஸ்தான் வீரர் கம்ரான் அக்மல் கேலி செய்த நிலையில், அதற்கு ஹர்பஜன் சிங் கடும் பதிலடி கொடுத்தார். இந்த நிலையில், அர்ஷ்தீப் சிங் மற்றும் சீக்கிய மதம் குறித்த தனது கருத்துக்கு கம்ரன் அக்மல் மன்னிப்பு கேட்டுள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Kamran Akmal apologises for crude joke on Arshdeep Singh and Sikh religion
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 120 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தியது. அந்த அணி 17 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்த நிலையில், அணியின் வெற்றிக்கு 18 பந்துகளில் 30 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது, கடைசி 3 ஓவர்களை இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களே வீசுவார்கள் என கருதப்பட்ட நிலையில் அர்ஷ்தீப் சிங்கிற்கு கடைசி ஓவர் கொடுக்கப்பட்டது.
அவர் பந்துவீச தொடங்கும் முன் வர்ணனையில் இருந்த கம்ரான் அக்மல், 'மணி 12க்கு மேல் ஆகிவிட்டது. இனி சீக்கியரான அர்ஷ்தீப் சிங்குக்கு ஓவர் கொடுத்தால் பாகிஸ்தான் வீரர்கள் அடித்து விடுவார்கள்' என்று கேலி செய்யும் விதமாக கூறினார். சீக்கியர்களுக்கும் இரவு 12 மணிக்கும் மிகப்பெரிய வரலாற்று தொடர்பு ஒன்று உள்ளது. அதை கிண்டல் அடிக்கும் வகையில் கம்ரான் அக்மல் அப்படி பேசியிருந்தார்.
"கடைசி ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசப் போகிறார். அவரது பந்துவீச்சை நிச்சயம் அடித்து விடுவார்கள். ஏனெனில், மணி 12 மணிக்கு மேல் ஆகிவிட்டது. 12 மணிக்கு மேல் எந்த சீக்கியருக்கும் வாய்ப்பு அளிக்கக் கூடாது" என்று கம்ரான் அக்மல் கூறினார்.
இந்நிலையில், கம்ரான் அக்மலின் இந்தப் பேச்சு சீக்கியர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவரின் பேச்சுக்கு முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் கடும் பதிலடி கொடுத்தார். இது பற்றி ஹர்பஜன் சிங் பேசுகையில், "உன்னை லட்சம் முறை சபிக்கிறேன் கம்ரான் அக்மல். உனது நாற்றமெடுக்கும் வாயை திறக்கும் முன் நீ சீக்கியர்களின் வரலாறு பற்றி தெரிந்து கொண்டு பேசியிருக்க வேண்டும். சீக்கியர்கள் தான் உனது தாய் மற்றும் சகோதரிகளை எதிரிகளிடமிருந்து காப்பாற்றினார்கள். அப்போது மணி இரவு 12. உன்னை நினைத்து அவமானப்படுகிறேன். கொஞ்சமாவது நன்றி உணர்வுடன் இரு" என்று தெரிவித்தார்.
மன்னிப்பு
இந்த நிலையில், அர்ஷ்தீப் சிங் மற்றும் சீக்கிய மதம் குறித்து கம்ரான் அக்மல் செய்த கேலிக்கு அவர் தற்போது மன்னிப்பு கேட்டுள்ளார். "எனது சமீபத்திய கருத்துகளுக்கு நான் மிகவும் வருந்துகிறேன். மேலும் ஹர்பஜன் சிங் மற்றும் சீக்கிய சமூகத்திடம் மனம் வருந்தி மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
என் வார்த்தைகள் பொருத்தமற்றதாகவும் மரியாதையற்றதாகவும் இருந்தன. உலகெங்கிலும் உள்ள சீக்கியர்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. நான் கூறியது யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் இல்லை. அதற்கு நான் உண்மையிலேயே வருந்துகிறேன். #மரியாதை #மன்னிப்பு,” என்று ஹர்பஜனைக் டேக் செய்து கம்ரான் அக்மல் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
சீக்கிய வரலாறு
கம்ரான் அக்மல் குறிப்பிட்ட சீக்கிய வரலாறு அவுரங்கசீப் காலத்தை சேர்ந்தது. முகலாய மன்னரான அவுரங்கசீப் அப்போது இந்திய பெண்களை கடத்தி வைத்திருந்தார். அவர்களை அடிமைகளாகவும் விற்று வந்தார். அப்போது அவர்களை காப்பாற்றுவதற்காக ரகசியமாக ஒரு சீக்கிய படை உருவானது. அவுரங்கசீப்பின் படை மிகப் பெரியதாக இருந்ததால் மிகச் சிறிய இந்த சீக்கிய படை இரவு நேரங்களில் மட்டும் ரகசியமாக படை எடுத்து இந்திய பெண்களை மீட்கும் பணியில் ஈடுபட்டது.
அதனால், ஒவ்வொரு நாள் இரவிலும், "சீக்கியர்கள் 12 மணிக்கு வேட்டையை ஆரம்பிப்பார்கள்" என இந்தியர்களும். "சீக்கியர்கள் 12 மணிக்கு நம்மை தாக்குவார்கள்" என முகலாயர்களும் கூறி வந்தனர். அது காலப்போக்கில் சீக்கியர்களை கிண்டல் செய்வதற்கான ஒரு விஷயமாக மாறிவிட்டது. அதை கம்ரான் அக்மல் இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் தொடர்பு படுத்தி பேசவே, ஹர்பஜன் சிங் வெளுத்து வாங்கியுள்ளார்.
அடுத்ததாக இந்திய அணி, நாளை புதன்கிழமை (ஜூன் 12) நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடக்கும் ஆட்டத்தில் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள அமெரிக்காவுடன் மல்லுக்கட்டுகிறது. இந்தப் போட்டியானது இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. மறுபுறம், இன்று செவ்வாய்கிழமை நடைபெறும் வாழ்வா? சாவா? (டூ ஆர் டை) ஆட்டத்தில் பாகிஸ்தான், கனடாவை எதிர்கொள்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“