பாகிஸ்தானின் முன்னாள் விக்கெட் கீப்பர்-பேட்டர் கம்ரான் அக்மல். இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பி.சி.பி) நிர்வாகியாகவும், பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராகவும் செயல்பட்டுள்ளார். இந்நிலையில், கம்ரான் அக்மல் பாகிஸ்தான் அணியின் சமீபத்திய போராட்டங்கள் குறித்து கவலை தெரிவித்துள்ளார்.
இந்த பிரச்சினைகளுக்கு காரணம் அணி நிர்வாகிகளுக்கு இடையேயுள்ள ஈகோ தான் என்றும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மீண்டும் எழுச்சி பெற, அவர்கள் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தைப் (பி.சி.சி.ஐ) பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணி இந்த ஆண்டு தொடக்கத்தில் சொந்த மண்ணில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நியூசிலாந்திடம் 4-1 என்கிற கணக்கில் தோல்வியுற்றது. இதன்பிறகு, அந்த அணி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடந்த டி20 உலகக் கோப்பையில் களமாடியது. இந்த தொடரில் லீக் சுற்றுடன் பாகிஸ்தான் வெளியேற்றப்பட்டது.
அதைத் தொடர்ந்து சொந்த மண்ணில் வங்கதேசத்திடம் 2-0 டெஸ்ட் தொடரில் அவமானகரமான தோல்வியைச் சந்தித்தது. இப்படி அடி மேல் அடி வாங்கி வரும் பாகிஸ்தான் அணியை பலரும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில், தனது யூடியூப் சேனலில் பேசிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல், பி.சி.பி மற்றும் பி.சி.சி.ஐ-க்கு இடையேயான அணுகுமுறைகளில் உள்ள வேறுபாட்டை சுட்டிக்காட்டியுள்ளார்.
"பி.சி.சி.ஐ, அவர்களின் தொழில்முறை, அணி, தேர்வுக்குழு, கேப்டன் மற்றும் பயிற்சியாளர்களிடம் இருந்து பி.சி.பி கற்றுக்கொள்ள வேண்டும். இவைதான் ஒரு அணியை நம்பர் ஒன் ஆக்கி உலகை ஆதிக்கம் செலுத்தும் விஷயங்கள். நாம் நன்றாக இருந்திருந்தால் பாகிஸ்தான் கிரிக்கெட் இந்த நிலைமையில் இருந்திருக்காது. உங்களின் ஈகோ காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் பாதிக்கப்பட்டுள்ளது" என்று அவர் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“