New Zealand | Kane Williamson: 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் கடந்த 2 ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்த தொடரில் குரூப் சி-யில் இடம் பெற்றிருந்த கேன் வில்லியம் தலைமையிலான நியூசிலாந்து அணி 2 வெற்றி, 2 தோல்வியைச் சந்தித்து லீக் சுற்றுடன் தொடரில் இருந்து வெளியேறியது.
இந்நிலையில், டி20 உலகக்கோப்பையில் நியூசிலாந்து லீக் சுற்றுடன் வெளியேறியதை அடுத்து, கேன் வில்லியம்சன் நியூசிலாந்தின் ஒயிட்-பால் (டி20 மற்றும் ஒருநாள்) கிரிக்கெட்டின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி உள்ளார். மேலும், அவர் 2024 - 25 ஆம் ஆண்டுக்கான நியூசிலாந்து அணியின் மத்திய ஒப்பந்தத்தை கேன் வில்லியம்சன் நிராகரித்துள்ளார்.
இதுகுறித்து கேன் வில்லியம்சன் பேசுகையில், நியூசிலாந்து கிரிக்கெட்டின் எதிர்காலத்தை மனதில் வைத்தே இந்த முடிவை எடுத்துள்ளேன். நியூசிலாந்து அணிக்காக தொடர்ந்து பங்களிக்க தயாராகவுள்ளேன். வெளிநாடுகளில் நடக்கும் லீக் போட்டிகளில் விளையாட முடிவு செய்திருக்கிறேன்.
அதனால் என்னால் நியூசிலாந்து அணியின் மத்திய ஒப்பந்தத்தை ஏற்க முடியாது. நியூசிலாந்து அணிக்காக விளையாடுவது எப்போதும் விலை மதிப்பில்லாதது. நியூசிலாந்து கிரிக்கெட்டுக்கு திருப்பி கொடுக்க கடமைப்பட்டுள்ளேன். கிரிக்கெட்டை கடந்து வெளியில் எனது வாழ்க்கை மாறிவிட்டது. குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவதும், அவர்களுடன் உடனிருப்பதும் முக்கியமாக உள்ளது." என்று அவர் கூறியுள்ளார்.
கேன் வில்லியம்சன் நியூசிலாந்து அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 54.99 சராசரியில் 8743 ரன்கள் எடுத்துள்ளார். ஒயிட்-பால் கிரிக்கெட்டிலும் அவர் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 165 ஒருநாள் போட்டிகளில் 48.3 சராசரியில் 6811 ரன்களையும், 93 டி20 போட்டிகளில் 33.01 சராசரியில் 2575 ரன்களையும் குவித்துள்ளார்.
இந்த நிலையில், கேன் வில்லியம்சன் நியூசிலாந்தின் ஒயிட்-பால் கிரிக்கெட்டின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி இருப்பதும், அவர் நியூசிலாந்து அணியின் மத்திய ஒப்பந்தத்தை ஏற்க முடியாது என்று கூறியிருப்பதும் கிரிக்கெட்டில் இருந்து அவர் ஓய்வை அறிவிப்பதற்கான அறிகுறியாக ரசிகர்கள் பார்க்கிறார்கள். அவரின் இந்த முடிவினை வரவேற்று சமூக வலைதள பக்கத்தில் பலரும் அவருக்கு ஆதரவையும் பாராட்டையும் தெரிவித்து வருகிறார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“