இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த 2016 ஆம் ஆண்டு அறிமுகமானவர் கருண் நாயர். அதே ஆண்டில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் களமாடி இருந்த அவர் முச்சதம் அடித்து மிரட்டினார். 381 பந்துகளை எதிர்கொண்டு 32 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 303 ரன்கள் குவித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து இருந்தார் கருண்.
ஆனால், இந்த தொடருக்குப் பின் அவரை இந்திய அணி தேர்வாளர்கள் கண்டுகொள்ளவில்லை. வருடங்கள் பல உருண்டோடிய நிலையில், தற்போதுவரை அவர் இந்திய அணிக்கு ஆடும் வாய்ப்பை பெறவில்லை. அவர் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட போதிலும் அவரை யாரும் கண்டுகொள்ளவில்லை. இதனால், கருண் நாயர் தான் விளையாடி வந்த கர்நாடகா அணியில் இருந்து விலகினார்.
மிகவும் வேதனையான காலகட்டத்தில் இருந்த அவரால், ஐ.பி.எல் போன்ற லீக் போட்டிகளிலும் சிறப்பாக ஜொலிக்க முடியவில்லை. இப்படியாக நாள்கள் நகர்ந்து கொண்டிருந்த சூழலில், அவர் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பரில் போட்ட சமூக வலைதள பதிவு பலரையும் வேதனையில் ஆழ்த்தியது. தன்னால் இந்திய அணிக்காக ஆட முடியாததை எண்ணி, "அன்புள்ள கிரிக்கெட்டே, எனக்கு இன்னும் ஒரு வாய்ப்பு கொடுங்கள்," என்று பதிவிட்டார்.
கருண் நாயர் இந்தப் பதிவை போட்ட 13 மாதங்களுக்குப் பிறகு, அவரை மீண்டும் இந்திய அணியில் தேர்வு செய்வது குறித்து பி.சி.சி.ஐ-யின் தேர்வுக் குழு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம், தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் 32-வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் தான். இந்த தொடரில் விதர்பா அணிக்காக ஆடி வரும் கருண் நாயர் இதுவரை 5 சதங்களை விளாசி 664 ரன்களை குவித்துள்ளார். மேலும் தொடர்ச்சியாக 4 சதங்களை அடித்து நொறுக்கியுள்ளார்.
இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், அவர் ஐந்து சதங்கள் அடித்த இந்த விஜய் ஹசாரே டிராபி போட்டியில் ஒரு முறை கூட ஆட்டமிழக்கவில்லை. எல்லாமுறையும் நாட்-அவுட் ஆகவே இருந்துள்ளார். 112*, 44*, 163*, 111*, 112*, 122* என அவர் ரன்கள் எடுத்துள்ளார். லிஸ்ட் ஏ கிரிக்கெட் வரலாற்றில் ஆட்டமிழக்காமல் ஒரு பேட்ஸ்மேன் எடுத்த அதிகபட்ச ரன் இதுவாகும். தமிழ்நாட்டின் ஜெகதீசனுக்குப் பிறகு, ஒரு சீசனில் ஐந்து சதங்கள் அடித்த இரண்டாவது பேட்டர் மற்றும் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக நான்கு சதங்களைப் பதிவு செய்த மூன்றாவது வீரர் என்கிற பெருமைகளை கருண் பெற்றுள்ளார்.
இந்த நிலையில், கருண் நாயரை இந்திய அணியில் மீண்டும் சேர்ப்பது குறித்து தேர்வுக்குழு ஆலோசித்து வருகிறது. இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டெஸ்டில் போராடி வரும் சூழலில், அணியில் சில முக்கிய மாற்றங்கள் நிகழ இருக்கிறது. அதனால், கருண் தேர்வாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கவனிக்கும் வீரராக மாறியுள்ளார். எவ்வாறாயினும், அஜித் அகர்கர் தலைமையிலான குழு சாம்பியன்ஸ் டிராபிக்கு அவரை பரிசீலிக்குமா அல்லது ஜூன் மாதம் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவரை சேர்க்குமா என்பது இன்னும் தெரியாவில்லை.