Kavya Maran | Sunrisers Hyderabad | IPL 2024: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று (திங்கள்கிழமை) இரவு 7:30 மணிக்கு பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற 30-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.
மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் குவித்தது. 287 ரன்கள் குவித்ததன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் ஒரு இன்னிங்சில் அதிர ரன்கள் குவித்த அணி தங்கள் முந்தையை சாதனையை ஐதராபாத் மீண்டும் தகர்த்தது. அந்த அணியில் மிரட்டல் அடி அடித்து சதம் விளாசிய டிராவிஸ் ஹெட் 102 ரன்களும், ஹென்ரிச் கிளாசென் 67 ரன்களும், அப்துல் சமத் 37 ரன்களும், அபிஷேக் ஷர்மா 34 ரன்களும், ஐடன் மார்க்ராம் 32 ரன்களும் எடுத்தனர்.
பெங்களூரு அணி தரப்பில் லாக்கி பெர்குசன் 2 விக்கெட்டை கைப்பற்றினார். இதனைத் தொடர்ந்து, 288 ரன்கள் கொண்ட இமாலய இலக்கை துரத்திய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு போராடி 262 ரன்கள் மட்டும் எடுத்தது. இதன் மூலம் 25 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றிபெற்றது.
காவ்யா மாறன் ஹேப்பி
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் ஐதராபாத் அணி பேட்ஸ்மேன்கள் அதிரடியாக மட்டையைச் சுழற்றி ரன்மழை பொழிந்தனர். இதனைப் பார்த்த சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி சி.இ.ஓ காவ்யா மாறன் துள்ளிக் குதித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதள பக்கங்களில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
பெங்களூருவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில், ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக வந்த டிராவிஸ் ஹெட் - அபிஷேக் ஷர்மா மிரட்டலான தொடக்கத்தை அணிக்கு கொடுத்தனர். 22 பந்துகளை எதிர்கொண்ட அபிஷேக் ஷர்மா 2 பவுண்டரிகள் 2 சிக்ஸர்களுடன் 34 ரன்களுக்கு அவுட் ஆனார். ஆனால், ஐதராபாத் அணியின் அதிரடியை பெங்களூரு பவுலர்களால் நிறுத்த முடிவில்லை. அடுத்து வந்த ஹென்ரிச் கிளாசென் 31 பந்துகளில் 2 பவுண்டரிகள் 7 சிக்ஸர்களுடன் 67 ரன்கள் எடுத்தார்.
பெங்களூரு பவுலர்களுக்கு பெரும் தலைவலி கொடுத்த ஹெட் 41பந்துகளில் 9 பவுண்டரிகள் 8 சிக்ஸர்களை நொறுக்கி அள்ளி 102 ரன்கள் எடுத்தார். ஐடன் மார்க்ராம் 2 பவுண்டரி, 2 சிக்ஸரை பறக்கவிட்டார். அப்துல் சமத் 10 பந்துகளில் 4 பவுண்டரி 3 சிக்ஸரை பறக்கவிட்டார். இப்படி களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் அடித்து நொறுக்கியதால், மகிழ்ச்சியின் உச்சத்தை எட்டிய காவ்யா மாறன் அடிக்கடி எழுந்து நின்று உற்சாமாக கொண்டாடி தீர்த்தார். அவரது மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தை காண தனி ரசிகர் கூட்டம் உள்ள நிலையில், காவ்யா மாறனின் மகிழ்ச்சிகரமான தருணத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள் அவரது தீவிர ரசிகர்கள்.
ரஜினி கூறியதை செய்து காட்டிய ஐதராபாத்!
ஜெய்லர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், காவ்யா மாறன் மற்றும் அவரது தலைமையிலான சன்ரைசர்ஸ் அணி குறித்து பேசினார். அப்போது, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் அடுத்து சிறந்த வீரர்களை எடுக்க வேண்டும் எனவும், காவ்யா மாறனின் ரியாக்சனை பார்க்கும்போது தனக்கு பி.பி எகிறுகிறது என்றும் கூறியிருந்தார். தற்போது, சிறந்த மற்றும் அடித்து நொறுக்கும் வீரர்களை அணியில் எடுத்திருக்கும் ஐதராபாத் அணி, காவ்யா மாறன் உற்சாக வெள்ளத்தில் மிதக்க வைத்து வருகிறது. இந்நிலையில், ரஜினி காவ்யா மாறன் குறித்து பேசிய வீடியோ ஒன்றும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“