கிரிக்கெட் ரசிகர்களுக்கு காவ்யா மாறன் பற்றி அறிமுகம் தேவையில்லை. ஐ.பி.எல் டி-20 தொடருக்கான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை நிர்வகித்து வரும் தலைமை நிர்வாக அதிகாரியாக (சி.இ.ஓ) அவர் இருந்து வருகிறார். ஐ.பி.எல் தவிர தென் ஆப்ரிக்காவில் நடந்து டி20 லீக் தொடரான எஸ்.ஏ 20 தொடருக்கான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியையும் அவர் நிர்வகித்து வருகிறார்.
காவ்யா மாறன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஒருமுறையும் (2016), சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் 2 முறையும் (2023, 2024) சாம்பியன் பட்டதைத் தட்டிச் சென்றுள்ன. அதேநேரத்தில் ஐதராபாத் அணி இரண்டு முறை (2018, 2024) இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
காவ்யா மாறன் சொத்து மதிப்பு
31 வயதான காவ்யா மாறன் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் பி.காம் படித்தவர். நியூயார்க் பல்கலைக்கழகத்துடன் இணைந்த லியோனார்ட் என்.ஸ்டெர்ன் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் வணிக மேலாண்மை (எம்.பி.ஏ) படிப்பில் முதுநிலை பட்டமும் பெற்றவர். இவர் இந்தியாவின் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான சன் குழுமத்தின் முதன்மை செயலாளர் கலாநிதி மாறனின் ஒரே மகள் ஆவார்.
2019 ஆம் ஆண்டில் சன் நெட்வொர்க் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் சேர்க்கப்பட்ட காவ்யா, சன் மியூசிக் சேனல், சன் குழும எஃப்.எம் சேனல்களின் நிர்வாகத்தை கவனித்து வந்தார். இதற்காக ஒரு கோடி ரூபாய் சம்பளமும் பெற்றார். சன் நெட்வொர்க்கில் நேரடியாக உச்ச பதவிகளை பெறாமல், படிப்பை முடித்த சில ஆண்டுகளில் சன் குழுமத்தில் சன் டிவியின் உள்ளடக்கம் முதல் நிகழ்ச்சிகள் வரை பல்வேறு துறைகளில் இன்டர்ன்ஷிப் செய்தும் இருந்தார்.
சன் குழும பதவிக்கு 2019-ல் வந்தாலும், அதற்கு ஓர் ஆண்டுக்கு முன்பாகவே சன் குழுமத்துக்குச் சொந்தமான ஐ.பி.எல் அணியான சன் ரைசர்ஸ் ஐதராபாத்தின் சி.இ.ஓ-வாக பொறுப்பேற்றார். அதன்பிறகு அந்த அணி ஆடும் அனைத்து போட்டியை பார்க்கவும் மைதானத்திற்கு வந்துவிடுவார். ரசிகர்கள் பலரும் அவரைப் பார்ப்பதற்காகவே வருவர்.
ஆரம்ப ஆண்டுகளில் நடந்த ஏலத்தில் வீரர்களை வாங்குவதில் பயிற்சியாளர்களின் உதவியை நாடிய காவ்யா கடந்த ஆண்டில் நடந்த மெகா ஏலத்தின் போது, பெரிய அளவில் யாருடனும் விவாதிக்காமல் சுயமான முடிவுகளை தனது கணக்குப் படி எடுத்தார். ஏலத்தின் போதும், போட்டிகளின் போதும் அவர் கொடுக்கும் ரியாக்சனுக்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. அதனை உடனே சமூக வலைதளத்தில் பகிர்ந்து ஹார்ட்டீன்களை பறக்க விடுவார்கள்.
இந்தியாவின் முன்னணி இளம் பெண் தொழிலதிபராகவும் காவ்யா மாறன் உருவெடுத்துள்ளார். அவரது சொத்து மதிப்பு தற்போது ரூ. 409 கோடி இருக்கும் எனக் கூறப்படுகிறது. ரோல்ஸ் ராய்ஸ், ஃபெராரி உள்ளிட்ட சொகுசு கார்களும் அவர் வைத்துள்ளார்.
1000 கோடிக்கு கிரிக்கெட் அணி
இந்த நிலையில், காவ்யா மாறன் மற்றும் சன் குழுமம் 1094 கோடி ரூபாய்க்கு மூன்றாவது கிரிக்கெட் அணியை வாங்கியுள்ளனர். 'தி ஹன்ட்ரட்' போட்டியில் பங்கேற்கும் இங்கிலாந்து அணியான நார்தர்ன் சூப்பர்சார்ஜர்ஸ் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளை வாங்கியுள்ளனர். இதன் மூலம், 'தி ஹன்ட்ரட்' போட்டியில் உள்ள ஒரு அணியை வாங்கும் மூன்றாவது ஐ.பி.எல் அணி என்கிற பெருமையை காவ்யா மாறன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் பெற்றுள்ளது.
மற்ற இரண்டு அணிகளும் பகுதியளவு பங்கை வாங்கியிருக்கும் நிலையில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் முழுவதுமாக கைப்பற்றியுள்ளது. மும்பை இந்தியன்ஸ் ஓவல் இன்வின்சிபிள்ஸின் 49 சதவீத பங்குகளை வாங்கியது. அதே நேரத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மான்செஸ்டர் ஒரிஜினல்ஸில் 70 சதவீத பங்குகளை வாங்கியது.
இது தொடர்பாக யார்க்ஷயர் சி.சி.சி-யின் தலைமை செயல் அதிகாரி சஞ்சய் படேல் பேசுகையில், "சன் குழுமத்துடன் பிரத்தியேக காலகட்டத்திற்குள் நுழைவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் நீண்ட கால மற்றும் நீடித்த வெற்றிக்காக நார்தர்ன் சூப்பர்சார்ஜர்களை அமைக்கும் நோக்கில் வரும் வாரங்களில் அவர்களுடன் எங்கள் உரையாடலைத் தொடருவோம்.
இதுகுறித்து சில காலமாக அவர்களுடன் கலந்தாலோசித்து வருவதால், அவர்கள் கிளப்பின் மதிப்புகள் மற்றும் எதிர்கால திசையுடன் இணைந்துள்ளனர் என்பதும், வரும் ஆண்டுகளில் நாம் பெரும் வெற்றியை அடைவதை உறுதி செய்வதில் பெரும் பங்கு வகிப்பார்கள் என்பதும் தெளிவாகிறது.
இது யார்க்ஷயர் சிசிசி, நார்தர்ன் சூப்பர்சார்ஜர்ஸ் மற்றும் சன் குழுமத்திற்கு ஒரு பெரிய மைல்கல், ஆனால் ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவதற்கு முன், கூடுதல் விடாமுயற்சி மற்றும் சட்ட செயல்முறைகளுடன் நிறைய விவரங்கள் விவாதிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவோம்." என்று அவர் தெரிவித்தார்.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (ECB) இதுவரை லண்டன் ஸ்பிரிட், ஓவல் இன்வின்சிபிள்ஸ், வெல்ஷ் ஃபயர், மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் மற்றும் பர்மிங்காம் பீனிக்ஸ் ஆகியவற்றை பல்வேறு ஏலதாரர்களுக்கு விற்றுள்ளது. அதே நேரத்தில் டிரெண்ட் ராக்கெட்ஸ் மற்றும் சதர்ன் பிரேவ் ஆகியவை விற்பனைக்கு உள்ளன. இந்த அணிகளை இன்னொரு ஒரு ஐ.பி.எல் அணிக்கும் டெல்லி கேபிடல் அணிக்கும் கடுமையான போட்டி நிலவுகிறது.
காவ்யா மாறனின் சன் குழுமம் கடந்த 2012 ஆம் ஆண்டு பி.சி.சி.ஐ-யிடம் இருந்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை ரூ.85 கோடிக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.