worldcup 2023 | Pakistan Vs South Africa: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று வெள்ளிக்கிழமை) சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்த 26வது போட்டியில் பாகிஸ்தான் - தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்தப் போட்டியில் 1 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்கா த்ரில் வெற்றி பெற்றது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 46.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 270 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக சவுத் ஷகீல் 51 ரன்களும், கேப்டன் பாபர் அசாம் 50 ரன்களும் எடுத்தனர். தொடர்ந்து 271 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்கா 47.2 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டிப்பிடித்தது. அதிகபட்சமாக ஐடன் மார்க்ராம் 91 ரன்கள் எடுத்தார்.
ஜெய் ஸ்ரீ ஹனுமான் - பதிவு போட்ட கேசவ் மகாராஜ்
இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 46 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 263 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் வெற்றிக்கு கடைசி 4 ஓவர்களில் 8 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் இருந்த தப்ரைஸ் ஷம்சி - கேசவ் மகாராஜ் ஜோடியில் ஒருவர் ஆட்டமிழந்தாலும் கூட போட்டியை பாகிஸ்தான் வென்றும் விடும் நிலை இருந்தது.
இந்த இக்கட்டான சூழலில் பாகிஸ்தான் பந்துவீச்சை இருவரும் சமாளித்து விளையாடி வந்தனர். தென் ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு கடைசி 3 ஓவர்களில் 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முகமது நவாஸ் வீசிய 48 வது ஓவரின் முதல் பந்தில் ஷம்சி ஒரு ரன் எடுத்தார். 2வது பந்தை எதிர்கொண்ட கேசவ் மகாராஜ் பவுண்டரி விரட்டி ஆட்டத்தை முடித்து வைத்தார்.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்த த்ரில் வெற்றியை தென் ஆப்பிரிக்கா வீரர்களும், ரசிகர்களும் கொண்டாடி வரும் நிலையில், தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர் கேசவ் மகாராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் `ஜெய் ஸ்ரீ ஹனுமான்' என பதிவிட்டுள்ளார். அவரது இந்தப் பதிவு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“